Published:Updated:

ஓட்டு பெற்றபின் ஏமாற்றுவது நியாயமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஓட்டு பெற்றபின் ஏமாற்றுவது நியாயமா?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.50 சதவிகிதத்திலிருந்து 8.10 சதவிகிதமாகக் குறைத்துள்ளது நிதி அமைச்சகம். இந்த வட்டிக் குறைப்பைப் பார்த்து வருங்கால வைப்பு நிதியில் பணம் சேர்த்து வரும் பல லட்சம் ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இன்றைக்கு உலக அளவில் பல்வேறு நிதித் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது. நம் நாட்டில் உள்ள பல்வேறு நிதித் திட்டங்களுக்குத் தரப்படும் வட்டியானது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியைவிடக் குறைவாகவே உள்ளது.

இருப்பதிலேயே பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்துக்குக்கூட 7.1% என்கிற அளவில்தான் வட்டி தரப்படுகிறது. என்றாலும், லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துத் தொழிலாளர்களின் உச்சபட்ச நம்பிக்கையாக இருக்கும், வருங்கால வைப்பு நிதியின் வட்டியைக் குறைத்திருப்பது சரியல்ல. இந்த நடவடிக்கை, ‘இந்த பி.ஜே.பி-யும் ஓட்டரசியல்தான் நடத்துகிறது’ என்று பல லட்சம் ஊழியர்களையும் குமுற வைத்துள்ளது.

ஆம், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைக்கும் நடவடிக்கையை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே நிதி அமைச்சகம் எடுத்தது. அப்போது தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருந்தது. வாக்காளர்களின் அதிருப்திக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்று நினைத்த மத்திய அரசாங்கம், அந்த உத்தரவை அப்போது வாபஸ் பெற்றது. ஓராண்டு காலத்துக்குப் பிறகு இப்போது உ.பி. உட்பட முக்கியமான மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின், அதே நடவடிக்கையை அதிரடியாக கையில் எடுத்துவிட்டது பி.ஜே.பி அரசு.

தேர்தலுக்குமுன் நல்லபிள்ளை போல வேஷம் போட்டு நடித்துவிட்டு, தேர்தலுக்குப் பின் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பதை ஆட்சியிலிருக்கும் அனைத்துக்கட்சிகளுமே வழக்கமாகத்தான் வைத்துள்ளன. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி இத்தகைய செயல்கள் தொடரத்தான் செய்கின்றன. இவையெல்லாம் ஓட்டுபோட்ட மக்களுக்கு செய்யும் துரோகமே!

அரசியல் கட்சிகள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை. அதேசமயம், அரசின் இத்தகைய வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்காக வருங்கால வைப்புநிதியின் மீது நாம் வருத்தம் கொள்ளத் தேவையில்லை.

இருக்கின்ற சேமிப்புகளிலேயே அதிக வட்டி கிடைப்பது வருங்கால வைப்பு நிதியில்தான். எனவே, அதில் தொடர்ந்து பணம் சேர்ப்பது அவசியம். முடிந்தால், வி.பி.எஃப் மூலம் கூடுதலாகப் பணம் சேர்த்தாலும் நல்லதுதான். அத்துடன், வருங்கால வைப்பு நிதியை மட்டுமே நம்பியிருக்காமல், நீண்டகால நோக்கில் அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதும் அவசியம்!

- ஆசிரியர்