Published:Updated:

சேமிப்புக்கு வேட்டுவைக்கும் பணவீக்கம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சேமிப்புக்கு வேட்டுவைக்கும் பணவீக்கம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

நம் வாழ்க்கையில் அன்றாடம் தேவைப்படும் சில்லறைப் பொருள்களின் விலை கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்கிற செய்தி நம்மை அதிரவைக்கிறது. நம் நாட்டில்தான் இப்படி எனில், அமெரிக்காவில் பணவீக்க விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிற செய்தியைப் பார்க்கும்போது, நம் நாட்டின் பணவீக்க விகிதம் பரவாயில்லையோ என்று நினைக்கத் தோன்றினாலும், கடந்த இரு மாதங்களில் மளிகைப் பொருள் களுக்கான செலவு கணிசமாக அதிகரித்திருப்பது அனைத்துக் குடும்பத் தலைவர்களையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.

நம் நாட்டின் பணவீக்க விகிதமானது கடந்த மூன்று மாதங்களாக ரிசர்வ் வங்கி நியமித்துள்ள அளவைத் தாண்டி இருப்பது நிச்சயம் அபாயகரமானதாகும். பணவீக்க விகிதம் இப்படிக் காட்டுத்தனமாக உயர்வதைத் தடுக்க வட்டி விகிதத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் ரிசர்வ் வங்கி இருக்கிறது. சில நாள்களுக்கு முன்பே நடந்த கூட்டத்தில் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்திருக்க வேண்டும். அடுத்த கூட்டத்திலாவது இந்த முடிவை எடுத்தால்தான் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கும்.

மத்திய அரசாங்கமானது விலைவாசி உயர்வின் வேகத்தைக் கொஞ்சமாவது மட்டுப்படுத்த வேண்டுமெனில், பெட்ரோல், டீசலின் விலையை ஓரளவுக்காவது குறைத்தே ஆக வேண்டும். இந்த இரண்டின் விலை உயர்வால்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்த இரண்டின் விலை குறைந்தால் மட்டுமே பணவீக்கமும் குறையத் தொடங்கும்.

பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதால், கிரெடிட் கார்டு மூலம் செய்யப் படும் செலவு 15% அதிகரித்திருக்கிறது. அதாவது, கடன் வாங்கியாவது பொருள்களை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் மக்கள். இது மிகவும் தவறான போக்கு. பொருள்களின் பயன்பாட்டை ஓரளவுக்காவது குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நினைக்க வேண்டும். பொருள்களின் விலையைப் பார்த்து வாங்குவது கெளரவக் குறைச்சலாக நினைத்து, என்ன விலையாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்துவதை நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினர் குறைத்துக்கொள்ளவில்லை எனில், எவ்வளவு சம்பாதித்தாலும், மொத்தப் பணமும் செலவு செய்யவே சரியாகப் போய்விடும்.

விலைவாசி பற்றி நமது அரசாங்கமும் மக்களும் கவலைப்படாமல் இருப் பார்களே எனில், மக்களின் சேமிப்பு பெருமளவில் குறையும். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பணவீக்கம் என்கிற காய்ச்சலை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியை நாம் எல்லோரும் சேர்ந்து செய்யவில்லை எனில், இழப்பு என்பது நம் அனைவருக்கும்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism