தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. ‘ஒன்றிய அரசுதான் உயர்த்தச் சொன்னது’ என்று மாநில அமைச்சர் கே.என்.நேரு சொல்ல... ‘மத்திய அரசு அப்படிச் சொல்லவில்லை’ என பா.ஜ.க தரப்பு, போராட்டத்தில் குதித்திருக்கிறது. இதற்கு நடுவே, ‘இந்த சொத்து வரி உயர்வால் 83% மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதை அரசியலாக்க வேண்டாம்’ என ஆளும்கட்சிக்கே உரிய பாணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.
சொத்து வரி இந்த அளவுக்கு சர்ச்சை ஆனதற்கு முக்கியக் காரணமே, மிக மிக அதிக அளவில் அதுவும் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டதுதான். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறிப்பிட்ட அளவுக்கு வரியை உயர்த்தியிருக்கலாம். அதைவிடுத்து இப்படி ஒரேயடியாக 100%, 150% என்று உயர்த்தியிருப்பது, மக்களை வதைக்கும் செயலே!
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேல் சொத்து வரியை உயர்த்தாமலே இருந்து விட்டதால், இப்போது உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் அமைச்சர். ஆக, கடந்த காலங்களில் சொத்து வரி உயர்த்தப்படாத விஷயத்தில் தி.மு.க - அ.தி.மு.க இரண்டு தரப்புமே ‘பங்காளி’கள் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார் அமைச்சர். மாநிலத்தின், மக்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொள்ளாமல், வாக்குகளைக் கவர்வது ஒன்றையே நோக்கமாகக் கொண்டுதான் இரண்டு கட்சிகளுமே செயல்பட்டிருப்பது மன்னிக்க முடியாத தவறு.
கடந்தகால அ.தி.மு.க ஆட்சியில் (2018-19) திடீரென சொத்துவரி உயர்த்தப்பட்டு, அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டாயமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டியிருந்ததால், வரி உயர்வு திரும்பப் பெறப்பட்ட கூத்தும் நடைபெற்றது. இப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட சூழலில், வரி உயர்வு சாட்டையை மக்கள் மீது வீசத் தொடங்கியுள்ளது தி.மு.க.
ஓர் அரசாங்கம் மக்களுக்கான நலத்திட்டங்களை சரியாகச் செயல்படுத்த வேண்டுமெனில், வரி வருமானம் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக, சொத்து வரியை இப்படி இஷ்டம்போல உயர்த்திதான் வருமானத்தைப் பெருக்கியாக வேண்டும் என்பதில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் திறந்தவெளி மைதானங்கள் என வருமானம் தரக்கூடியவை பல உள்ளன. இவற்றுக்கான வாடகை மற்றும் குத்தகைத் தொகை பல ஆண்டுகளாக சரிவர வசூலிக்கப்படவில்லை. இவற்றில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் பிடியில்தான் உள்ளன. அதனாலேயே மாநில அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது. இதைச் சரிசெய்தாலே கணிசமான வருமானம் கிடைக்கும், மக்களை வதைக்காமலே நலத் திட்டங்களை சிறப்பாகவே நடத்தவும் முடியும். இனியாவது இப்படி யோசிப்பார்களா ஆட்சியாளர்கள்?!
- ஆசிரியர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism