பிரீமியம் ஸ்டோரி

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட பின் தொழில் துறையினரை முதன்முறையாகச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘‘கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஊரடங்கு. ஆனால், இது ஒரு தீர்வு அல்ல. ஊரடங்கு என்பது தொழில்களை ஒட்டுமொத்தமாகப் பாதித்து, பலருடைய வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துவிடும்’’ என்று சொல்லியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதே கருத்தைத்தான் முன்வைத்தார்.

கடந்த ஆண்டு கொரோனா நோயைக் கண்டு உலகமே நடுங்கியது. அப்போது அதிரடியாக நாடு முழுக்க ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய அரசு. இதனால் நாடு முழுக்கத் தொழில்துறை முடங்கியது. பல கோடி பேரின் வேலை பறிபோனது. இந்த அனுபவங்களை எல்லாம் வைத்துதான் பிரதமர் மோடியும், புதிய முதல்வர் ஸ்டாலினும் இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், கொரோனாவுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் அத்தனை அழுத்தம் இல்லை என்பதே எதார்த்தம். கொரோனா இரண்டாம் அலையில் நோய்த்தொற்று கடுமையாக இருக்கிறது. நாடு முழுக்கவே ‘மருந்துத் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடு’ என்கிற கூக்குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மிகவும் பேராபத்தான சூழலை நோக்கி நாடு செல்கிறது. இதைப் பார்த்த பின், ‘கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கே சரி’ என்ற எண்ணமே பலருக்கும் வருகிறது.

கொரோனா முதல் அலையில் தொழில்கள் முடங்கிப்போனதால், பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு இறக்கம்கண்டு, சாதாரண மக்களின் வருமானம் பெருமளவு குறைந்தது. மீண்டும் அத்தகைய நிலைக்கு ஆட்படுத்தி விடக் கூடாது என்கிற அக்கறையோடுதான், இப்போதைய ஊரடங்கில் தொழில் துறையினருக்கும் வணிகர்களுக்கும் பல்வேறு தளர்வுகள் தரப்பட்டுள்ளன. ஆனால், ‘கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நாம் முறையாகப் பின்பற்றினால், ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது’ என்கிற அரசாங்கத்தின் எண்ணம் பூர்த்தியாகவில்லையே!

தினம் தினம் கொரோனா மரணங்கள் அதிகரித்துவரும் சூழலில், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்களில் பலரும் மெத்தனமாகவே இருக்கின்றனர். அதிகார வர்க்கத்தினரும் பல இடங்களில் கைகளைக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொழிலகங்களிலும் அலட்சியமே காணப்படுகிறது. எனவே, ஊரடங்கு விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்தும் பணியில் அதிகாரிகளை முடுக்கி விட வேண்டும். பொதுமக்களுக்கும் கூடுதல் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தொழில் உற்பத்தி எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம்... ஒவ்வொரு தனிமனிதனின் உயிரும். உற்பத்திக்காக உயிரை விட்டுத் தரும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்திவிடக் கூடாது. தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இதை உறுதிப்படுத்துவதுபோல அமைவது அவசியம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு