Published:Updated:

சந்தை இறக்கம் கற்றுத் தரும் இரண்டு பாடங்கள்..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சந்தை இறக்கம் கற்றுத் தரும் இரண்டு பாடங்கள்..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கடந்த இரு ஆண்டுகளாக மிகப்பெரிய லாபத்தைத் தந்த (நிஃப்டி 48%, சென்செக்ஸ் 46%) பங்குச் சந்தை, கடந்த ஆறு மாதங்களாக இறக்கத்தின் பாதையில் செல்லத் தொடங்கி, சுமார் 10% நஷ்டத்தைத் தந்துள்ளது. இந்த இறக்கத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த மனவருத்தம் அடைந்திருப்பதுடன், சில முதலீட்டாளர்கள் ‘தவறான முடிவை எடுத்துவிட்டோமோ...’ என்றுகூட யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பங்குச் சந்தையின் இந்த இறக்கத்திலிருந்து இரு முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொண்டால் வருத்தப்படவோ, புலம்பவோ நிச்சயம் தேவை இருக்காது. அந்த இரண்டு பாடங்கள் என்னென்ன?

முதலாவது பாடம், முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ள வேண்டும் என்பது. பொதுவாக, முதலீடு என்று வரும்போது, நம் மக்கள் ஒற்றை முதலீடு என்கிற நோக்கில் செயல்படுவர்களாகவே இருக்கிறார்கள். அதாவது, மனை, வீடு என்று வாங்குபவர்கள் அவற்றை மட்டுமே திரும்பத் திரும்ப வாங்குவார்கள். இதன்மூலம் ஓர் ஊரையே சொந்தமாக்கிக்கொள்ள நினைப்பார்கள். தங்கம் வாங்குபவர்கள் திரும்பத் திரும்பத் தங்கம் வாங்கி, வீட்டு பீரோவில் ஒரு சிறு தங்கச் சுரங்கத்தையே உருவாக்க நினைப்பார்கள். இன்னும் சிலர், பங்குச் சந்தை தவிர வேறு எதிலும் பணம் போட மாட்டார்கள். இதன்மூலம் வாரன் பஃபெட் அல்லது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போல ஆகிவிடவேண்டும் என்பது இவர்களின் ஆசை.

இப்படி ஒற்றை முதலீடு என்று செயல்படாமல் நமது ரிஸ்க் எடுக்கும் தன்மைக் கேற்ப தங்கம், ரியல் எஸ்டேட், எஃப்.டி, அரசு மற்றும் கார்ப்பரேட் பாண்ட் பத்திரங்கள், பங்குச் சந்தை எனப் பிரித்து முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் சராசரியான அளவில் நிச்சயம் லாபம் பெற முடியும். இப்படிப் பிரித்து முதலீடு செய்வதால், மிகப் பெரிய லாபத்தைக் கண்டுவிட முடியாது என்றாலும், நஷ்டம் ஏற்படுவதை நம்மால் நிச்சயமாகத் தடுக்க முடியும்.

இரண்டாவது முக்கியமான பாடம், நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்வது. நமக்கு காய்ச்சல் வந்தால், ஒரு மருத்துவரிடம் சென்று கட்டணம் செலுத்தி மருத்துவ சிகிச்சை பெறுகிறோம். ஒரு வழக்கறிஞரிடம் கட்டணம் தந்து, சட்ட உதவியைப் பெறுகிறோம். ஆனால், முதலீடு என்று வரும்போது, அதற்குரிய நிபுணர்களிடம் கலந்தாலோசிக்காமல் இஷ்டப்படி செய்கிறார்கள் நம் மக்கள். அவர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம், கட்டணம் தந்து நிதி ஆலோசனை பெற வேண்டும் என நினைக்காமல் இருப்பதே. நாம் நினைத்த மாதிரி முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு நஷ்டம் வந்தபின் புலம்பி என்ன பயன்? சில நூறு ரூபாயைக் கட்டணமாகத் தந்தால், பல ஆயிரங்களை நம்மால் சம்பாதிக்க முடியும் என்பதை நாம் கட்டாயம் உணர வேண்டும்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிக்கலான பொருளாதாரச் சூழலில் நாம் வாழ்கிறோம். இந்த நிலையில், ஒற்றை முதலீடும் நம்மைக் காப்பாற்றாது; ‘நமக்குத்தான் எல்லாம் தெரியுமே...’ என்கிற எண்ணமும் லாபம் தராது. முறைப்படி செய்யும் முதலீடு ஒன்றே நமக்கு நன்மை தரும் என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுவோம்!

- ஆசிரியர்