சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!

கான்கிரீட் வீடு
News
கான்கிரீட் வீடு

கஜா புயலால் வாழ்க்கையை இழந்து நிற்கும் நம் சகோதரர்களுக்காக விகடன் களத்தில் இறங்கியபோதும் அவர்கள் கரம் பற்றிக்கொண்டார்கள்.

"இத்துணூண்டு ஓட்டைக்குடிசைக்குள்ள ஒண்டிக்கிடந்துதான் இந்த அஞ்சு புள்ளைகளையும் வளர்த்தெடுத்தேன்... அதையும் அந்தப் புயல்காத்து அடிச்சு அள்ளிக்கிட்டுப் போயிருச்சு. எங்காலத்துக்குள்ள ஒரு கல்லு வீடு கட்டிர மாட்டோமான்னு ஏக்கமா இருக்கும். சாமி வரம்கொடுத்த மாதிரி இப்போ அந்தக் கனவு நிறைவேறியிருக்கு... விகடனையும் வாசகர்களையும் என் தலைமுறையே மறக்காது...”

கண்கள் ததும்பக் கைகூப்புகிறார் முத்துலெட்சுமி.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள முத்தன்பள்ளத்தைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. விவசாயக் கூலியான முத்துலெட்சுமியின் கணவர் பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான்கு மகள்களில் மூன்று பேருக்குத் திருமணமாகிவிட்டது. மகனும் கடைசிமகளும் செய்கிற கூலிவேலையில்தான் எல்லோரின் வயிறும் நிறைகிறது. ஒரு ஏழைத்தாயின் வாழ்நாள் கனவை நிறைவேற்றி, வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள் விகடனின் வேராக நிற்கிற வாசகர்கள்.

கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!

2018 டிசம்பர் 15-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சுழற்றியடித்து நிலைகுலையச் செய்துவிட்டுப் போனது கஜா புயல். வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து, எதிர்காலம் தெரியாமல் மக்கள் தவித்து நின்றார்கள்.

பேரிடர்களால் மக்கள் துயருறும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டுவதில் விகடன் வாசகர்கள் முன்னிற்பார்கள். கஜா புயலால் வாழ்க்கையை இழந்து நிற்கும் நம் சகோதரர்களுக்காக விகடன் களத்தில் இறங்கியபோதும் அவர்கள் கரம் பற்றிக்கொண்டார்கள். இதுகுறித்த அறிவிப்பு வெளியானவுடன், நடிகர் கார்த்தி அவர் பங்காகவும் தன்னுடைய சகோதரர் நடிகர் சூர்யாவின் பங்காகவும் விகடன் அலுவலகத்துக்கே வந்து 20 லட்சம் ரூபாய் வழங்கினார். வாசகர்கள், விகடன் ஊழியர்கள் செய்த பங்களிப்போடு விகடன் நிர்வாகத்தின் பங்களிப்பும் சேர, 1,43,79,224 ரூபாய் நிதி திரண்டது.

கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!

பாதிப்பின் ஈரம் காயும்முன் களத்தில் இறங்கிய விகடன் குழுவினர், பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களை ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கினார்கள். மின்கம்பங்கள் சாய்ந்து வாரக்கணக்கில் மின்தடை ஏற்பட்டதால் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரின்றி கருகத் தொடங்கிய தருணத்தில், விகடன் வாசகர்களின் பங்களிப்பு அதற்கும் கைகொடுத்தது. 130 ஏக்கர் பரப்பிலான பயிர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாகத் தண்ணீர் பாய்ச்சிக் கொடுத்தார்கள் விகடன் குழுவினர்.

போரால் வாழ்விழந்து தமிழகத்தை நம்பி வந்த இலங்கைத் தமிழ் சகோதரர்களையும் வஞ்சித்தது கஜா புயல். புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை இலங்கைத் தமிழர் முகாம் பெருமளவு பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் மேம்படுத்தித் தரப்பட்டன.

பேரிடர் பாதிப்புகளிலிருந்து தற்காலிகமாக மக்கள் மீண்ட நிலையில், அடுத்தகட்டமாக, நிரந்தரமாக அவர்களின் துயரம் போக்குவதற்காக வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான வேதாரண்யம் வட்டாரத்தில் புஷ்பவனம், முதலியார்தோப்பு, வேட்டைக்காரணிருப்பு ஆகிய பகுதிகளில் 10 காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு, கடந்த 6.12.2019 அன்று மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!

அடுத்தகட்டமாக, முத்தன்பள்ளம் கிராமம் தேர்வு செய்யப்பட்டது. சுற்றிலும் வயலும் வாய்க்கால்களும் சூழ நடுவிலிருக்கிறது முத்தன்பள்ளம். பிரதான சாலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு உள்ளடக்கியிருக்கும் இந்த கிராமத்துக்கு நடந்தோ டூவீலரிலோதான் சென்றுவரமுடியும். அதுவும் மழைக்காலம் என்றால் பாதைகள் நீருக்குள் மூழ்கிவிடும். மக்கள் கிராமத்துக்குள் முடங்கிவிடுவார்கள். இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. காவிரிப்படுகையை துவம்சம் செய்த கஜா புயல், முத்தன்பள்ளத்தில் இருந்த இரண்டே இரண்டு ஓட்டுவீடுகள் தவிர மற்ற அனைத்துக் குடிசைகளையும் சாய்த்துப் போட்டுவிட்டது.

வாசகர்களின் பங்களிப்பில் இங்கு 16 குடும்பங்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டும்பணி தொடங்கப்பட்டது. மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தப்பகுதியில் வீட்டுமனைப்பட்டாவே பலருக்கு இல்லை. அதற்கான முன்னெடுப்புகளையும் விகடனே செய்தது. கொரோனாவால் பணிகளில் சிலகாலம் தொய்வு ஏற்பட, அனைத்தையும் கடந்து, நவம்பர் 18-ம் தேதி 13 குடும்பங்களிடமும் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. இன்னும் மூன்று வீடுகளின் பணிகள் முழுமையாக முடியவில்லை.

விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, அந்த வீடுகளும் ஒப்படைக்கப்படும். குழந்தைகளோடு சிறிய மழைக்கும் காற்றுக்குமே அஞ்சி வாழ்ந்த முத்தன்பள்ளம் கிராமம் இப்போது காங்கிரீட் வீடுகளோடு கம்பீர முகம் தரித்து நிற்கிறது. திருவாரூர் மாவட்டம், பூசலாங்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திரன் வீடும் கஜா புயலால் சேதமடைந்தது. அவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!

அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் விகடன் வைத்த கோரிக்கையின் விளைவாக பிரதான சாலையிலிருந்து முத்தன்பள்ளத்துக்குச் சாலை அமைக்கும் பணியும் தொடங்கியிருக்கிறது. விரைவில் அப்பணியும் முழுமையடையும்.

“இருபது வருஷமாச்சு, கல்யாணமாகி இந்த கிராமத்துக்கு வந்து. இங்கேயிருக்கிற காடு, கழனிய நம்பித்தான் எங்க வாழ்க்கை. தூறல் போட்டாலே உசுர கையில புடிச்சுக்கிட்டு இருப்போம். நாங்க பிழைக்கிற பிழைப்புக்கு மச்சுப்போன கூரையை மாத்தக்கூட வழியில்லை. ஏதோ பாதிக்குப் பாதியாவது மழை, வெயில்ல இருந்து காப்பாத்தின இந்தக் குடிசையையும் புயல் வந்து துடைச்செடுத்துக்கிட்டுப் போயிருச்சு. உடைஞ்சு கிடந்த குடிசையைத் தூக்கி நிறுத்தக்கூட வழியில்லாம வெறுந்தரையிலதான் வாழ்ந்துக்கிட்டிருந்தோம். பலபேரு இந்த ஊரே வேணாம்னு போயிட்டாங்க. திடீர்னு எங்கிருந்தோ வந்து ‘நாங்க உங்களுக்கு வீடு கட்டித்தாரோம்’ன்னு சொன்னாங்க. இப்போ சொந்தம்னு சொல்லிக்க எங்களுக்கு ஒரு கல்லு வீடு இருக்கு...” கண்கள் ததும்பப் பேசுகிறார் முத்துலெட்சுமி.

கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!
கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!

வாசகர்கள் எக்காலத்திலும் விகடனை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போதும் காலத்தில் நிலைத்திருக்கும் அப்படியொரு அறப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். முத்துலெட்சுமியின் குடும்பத்தையும் சேர்த்து 27 குடும்பங்களின் (நாகப்பட்டினம் -10 வீடுகள், புதுக்கோட்டை -16 வீடுகள், திருவாரூர் - 1 வீடு) வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கவும் துயரத்தில் தவிப்போருக்குக் கைகொடுக்கவும் நாங்கள் இருக்கிறோம் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள் விகடன் வாசகர்கள்.

கஜா துயர் துடைத்த உங்கள் கரம் பற்றி வணங்குகிறது ஆனந்த விகடன்!