மழை வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் மக்கள் தவிக்கும் போதெல்லாம் வாசகர்கள் பங்களிப்புடன் களத்தில் நிற்கும் விகடன், கொரோனா பேரிடரிலும் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டுவருவது வாசகர்கள் அறிந்ததே. அந்த வகையில் தற்போதும் விகடன் குழுமத்தின் சேவை நிறுவனமான வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ஆனந்த விகடன் பங்காக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. `இந்த அரும்பணியில் எங்களின் பங்கும் இருக்க வேண்டும்’ என்கிற எண்ணத்திலிருக்கும் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களையும் மனதில்கொண்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் விகடன் குழுமத்துக்காக அவர்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 10 சதவிகிதத் தொகை, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு வழங்கப்படவுள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகடந்த ஏப்ரல் மாதம் சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லை வாயிலில் வாழ்வாதாரம் இழந்து தவித்துவந்த 65 நாடோடிக் குடும்பங்களுக்கு 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

அடுத்தகட்டமாக, சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு மற்றும் கரிமேடுப் பகுதியில் பரிதவித்துவந்த 110 ஆந்திர மாநில கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 1,77,210 ரூபாய் மதிப்பில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. சென்னையை அடுத்த குன்றத்தூரில் 10 நாடோடிக் குடும்பங்களுக்கு 15,000 ரூபாய் செலவில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகைப்பொருள்கள் வழங்கப்பட்டன. சென்னை அம்பத்தூரிலுள்ள இரண்டு காப்பகங்களுக்கு 12,137 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அம்பத்தூரை அடுத்த நொளம்பூர் பகுதி மசூதி அருகில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவருகின்றனர். நேபாளம் மற்றும் ஆந்திராவிலிருந்து வந்து தங்கியிருக்கும் இவர்கள், சென்னையின் நகர்ப்புறங்களில் கட்டட வேலைகள் செய்துவந்தவர்கள். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து குழந்தைகளுடன் பசியால் தவித்த 130 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1,95,000 ரூபாய் செலவில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த பழவேற்காட்டில் மீன்பிடித் தொழிலையே நம்பி 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. செஞ்சியம்மன் நகர், ராஜரத்தினம் நகர், கள்ளுக்கடைமேடு, பேட்டை, பள்ளிக்குப்பம், கடல்கன்னியூர், கனவாள்துறை உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த இந்த மக்கள், பழவேற்காடு நன்னீர் ஏரியில் கமிஷன் அடிப்படையில் இறால், மீன், நண்டுகள் பிடிப்பது, வலைகள் பின்னுவது மற்றும் பல்வேறு கூலித்தொழில்களில் ஈடுபட்டுவந்தனர். ஊரடங்கு இவர்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டிப்போட்டுவிட்டது. இங்குள்ள 249 குடும்பங்களுக்கு 3,11,250 ரூபாய் செலவில் தலா 20 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முறையான சமூக, தனி மனித இடைவெளியுடன் ஊரடங்கின் முதலாம் கட்டத்தில் தொடங்கிய விகடனின் அறப்பணி, தற்போது நான்காம் கட்டத்திலும் வாசகர்களின் பங்களிப்புடன் தொடர்கிறது.
பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பட்டியல் நீண்டபடியே இருக்கிறது. வாசகர்களிடமிருந்து நிதி உதவியும் தொடர்ந்தபடியே இருக்கிறது.
கரம் கோப்போம்... துயர் துடைப்போம். எளியவர்கள் இன்புற்றிருக்கவே!