Published:Updated:

நேர்மையும் உழைப்பும் என் இரு கண்கள்!

இறையன்பு ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இறையன்பு ஐ.ஏ.எஸ்

- மாணவப் பத்திரிகையாளர்களுடன் உரையாடிய இறையன்பு ஐ.ஏ.எஸ்

நேர்மையும் உழைப்பும் என் இரு கண்கள்!

தமிழ்ச் சமூகத்தில் பல அளப்பரிய சாதனைகளை, ஆக்கபூர்வமான மாற்றங்களை நிகழ்த்திய விகடன் குழுமத்தின் தொலைநோக்குத் திட்டம்தான் ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்.’ இன்று ஊடகத்துறை மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கிய பயிற்சிப்பட்டறை இது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மட்டும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம், இந்த ஆண்டு 53 மாணவப் பத்திரிகையாளர் களுடன் வெற்றிகரமாகக் களம் கண்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பத்திரிகையாளர்களுக்கான இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி முகாம், சென்னையில் ‘ஆனந்த விகடன்’ அலுவலகத்தில் நவம்பர் 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

பயிற்சி முகாமில் சென்னை மெட்ரோ தலைமையகம், மண்டல வானிலை ஆய்வு மையம், அறப்போர் இயக்கம் ஆகிய இடங்களுக்குச் சென்ற மாணவப் பத்திரிகையாளர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கும் சென்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவை சந்தித்தார்கள். அவருக்கே உரிய இன்முகத்துடன் வரவேற்ற தலைமைச் செயலாளர், மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடினார். ‘‘தலைமைச் செயலாளர் பணி மிகவும் பிரஷராக இருக்கும். எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’ என்று ஒரு மாணவர் கேட்க, ‘‘பிரஷர் (Pressure) என்று நினைத்தால் பிரஷர்… ‘பிளஷர்’ (Pleasure) என்று நினைத்தால் பிளஷர். நான் பிளஷராக நினைத்துப் பணியாற்றுகிறேன்’’ என்றார் மாறாத புன்சிரிப்புடன்.

நேர்மையும் உழைப்பும் என் இரு கண்கள்!

‘‘அரசு அதிகாரியாக வேலை செய்துகொண்டே நிறைய புத்தகங்கள் எழுதுகிறீர்கள்... எப்படி நேரம் கிடைக்கிறது?’’ என்ற கேள்விக்கு, கேரளாவின் முன்னாள் முதல்வர் மறைந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டை உதாரணமாகச் சொன்னார் இறையன்பு. ‘‘இ.எம்.எஸ் எழுதியிருக்கும் புத்தகங் களைவைத்து தனியாக ஒரு நூலகமே வைக்கலாம். இது பற்றி இ.எம்.எஸ்ஸிடம் கேட்டபோது, ‘தினமும் ஒரு மணி நேரம் படிப்பேன்… ஒரு மணி நேரம் எழுதுவேன்’ என்றார். தினமும் நான்கு பக்கங்கள் எழுதினால், ஒரு வருஷத்துக்கு 1,400 பக்கங்கள் எழுதலாம்” என்றார்.

‘‘ஒரு நாளைக்கு அலுவலகப் பணிக்காக எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு, “எனது பணி காலை 5 மணிக்கு ஆரம்பிக்கிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் இருக்கின்றனவா, முக்கியச் செய்திகள் என்னென்ன என்று தொலைபேசி விசாரிப்புகளுடன் தொடங்கும் பணி, இரவு உறங்கச் செல்லும்வரை தொடர்கிறது’’ என்றார்.

‘‘சப் கலெக்டராகப் பணியைத் தொடங்கி, முக்கியப் பொறுப்புகளை வகித்து, இப்போது தலைமைச் செயலாளராகியிருக்கும் நீங்கள் ஏராளமான சவால்களைச் சந்திப்பீர்கள். அவற்றை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு, ‘‘நேர்மையும் உழைப்பும் இருந்தால் சவால்களை எளிதாகச் சமாளிக்கலாம். நேர்மையும் உழைப்பும் என் இரு கண்கள்’’ என்றார்.

நேர்மையும் உழைப்பும் என் இரு கண்கள்!

நிறைவாக, மாணவப் பத்திரிகையாளர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கினார் இறையன்பு... “இலக்கு, நோக்கம் என இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ‘எழுத்தாளராக ஆவேன்’ என்பது இலக்கு. ‘எழுத்தின் மூலமாகச் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவேன்’ என்பது நோக்கம். ‘மருத்துவர் ஆவேன்’ என்பது இலக்கு. ‘எளிய மக்களுக்குப் பிணிகளை அகற்றுவதற்காக மருத்துவர் ஆவேன்’ என்பது நோக்கம். எல்லோருமே இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறார்கள். ஆனால், யாரெல்லாம் நோக்கத்தை நோக்கிப் பயணிக்கிறார்களோ, அவர்களே இலக்குகளை அடைந்து, இலக்குகளை நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் விரும்புகிற எந்தப் பணியைச் செய்தாலும் சரி, உங்கள் வாழ்க்கைக்கு ஏதாவது நோக்கத்தை வரையறைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் முத்தாய்ப்பாக!

நேர்மையும் உழைப்பும் என் இரு கண்கள்!

‘‘சொல்லப்படாத விஷயங்களைத் தேடுங்கள்!”

நிகழ்ச்சியின் இன்னொரு பகுதியாக, ‘ஒரு செய்தி எப்படி சினிமா ஆனது?’ என்ற தலைப்பில் ‘ஜெய் பீம்’ திரைப்பட இயக்குநரும் விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளருமான த.செ.ஞானவேல் மாணவர்களிடையே உரையாடினார். ‘‘மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை ஒன்றைப் படிக்கும்போது, சாதிய அடிப்படையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் பொய் வழக்கு, கைது, சிறை போன்ற கொடுமைகளுக்கு எப்படி ஆளாக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். ‘ஜெய் பீம்’ படத்தின் முதல் காட்சிக்கான விதை அந்த அறிக்கையிலிருந்துதான் கிடைத்தது’’ என்றவர், மாணவர்கள் முன்வைத்த சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

‘‘பத்திரிகையாளராக உங்கள் எழுத்து செய்யாத சமூக மாற்றத்தை, உங்கள் சினிமா விரைவில் செய்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?’’

‘‘சினிமாவிலும் எழுத்து இல்லாமல் இல்லை. கதையும் திரைக்கதையும் இல்லாமல் ஒரு சினிமா உருவாகாது. வலிமையான எழுத்தையுடைய சினிமாக்களே வெற்றிபெறுகின்றன. அந்த எழுத்தை இங்குதான் (விகடன்) கற்றுக்கொண்டேன். சினிமாவுக்கான உழைப்பு என்பது அதிகம். இந்தப் படத்துக்குக்கூட இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது. அதற்கான ரீச்தான் இது. நான் எழுதிய கட்டுரையின் மூலமாகவும் பல சமூக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன; பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. அதனால், எந்த ஊடகத்தையும் சிறியது, பெரியது என்று பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.’’

‘‘ `ஜெய் பீம்’ என்கிற டைட்டில் கிடைக்காமல் போயிருந்தால் என்ன டைட்டில் வைத்திருப்பீர்கள்?’’

‘‘ `ஆஜர்’, `இரை’, `ஆட்கொணர்வு’, `எலிவேட்டை’ உள்ளிட்ட ஏழெட்டு டைட்டில்களை வைத்திருந்தோம். நண்பர்களுடன் விவாதித்து அதில் ஒன்றைத் தேர்வுசெய்திருப்போம்.’’

‘‘இருளர் மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?’’

‘‘நான் பத்திரிகையாளராக இருக்கும்போது இருளர் மக்களின் வாழ்க்கை அறிமுகமானது. பேராசிரியர் கல்யாணியை நேர்காணல் செய்யும்போது, அவர் மூலமாக இருளர் மக்கள் குறித்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்படாத விஷயங்களைத் தேடினால் நல்ல கட்டுரைகளை எழுத முடியும்.’’