Published:Updated:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

மாணவப் பத்திரிகையாளர் படை
பிரீமியம் ஸ்டோரி
மாணவப் பத்திரிகையாளர் படை

மாணவர்களுக்கு உத்வேகமூட்டிய இரண்டு நாள் முகாம்... களமிறங்கியது புதிய மாணவப் பத்திரிகையாளர் படை!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு உத்வேகமூட்டிய இரண்டு நாள் முகாம்... களமிறங்கியது புதிய மாணவப் பத்திரிகையாளர் படை!

Published:Updated:
மாணவப் பத்திரிகையாளர் படை
பிரீமியம் ஸ்டோரி
மாணவப் பத்திரிகையாளர் படை

பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் இன்று வெற்றியாளர்களாக வலம்வருபவர்களில் பலர் நூற்றாண்டை நெருங்கும் விகடனின், மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் அடித்தளத்தை அமைத்துக் கொண்டவர்கள்தாம். பாரம்பர்யமிக்க இந்தத் திட்டத்தின் 2022-23-ம் ஆண்டுக்காக 2,416 மாணவர்கள் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பித்திருந்தனர். பலகட்ட தேர்வுக்குப் பின்னர் 56 பேர்கொண்ட மாணவப் பத்திரிகையாளர்கள் படையை, களத்தில் இறக்கியிருக்கிறது விகடன். இவர்களுக்கான ‘கூட்டுப் பயிற்சித் திட்டம்’ சென்னை ராயப்பேட்டையிலுள்ள சி.எஸ்.ஐ சினாட் மையத்தில் ஜூலை 30, 31 தேதிகளில் நடைபெற்றது.

பா.சீனிவாசன்
பா.சீனிவாசன்

முதல் நாள் பயிற்சித் திட்டத்தில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ‘வரவேற்பும் வழிகாட்டுதலும்’ என்ற தலைப்பில் பேசுகையில், “ஒவ்வோர் ஆண்டும் எங்களை உத்வேகப்படுத்துவதற்கும், ரீசார்ஜ் செய்து கொள்வதற்கும் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அடுத்த ஓராண்டுக்கு நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும். பல்வேறு கோணத்தில் களத்தை அணுகுங்கள். உங்கள் படைப்புகளை வாசகர்கள் ஏற்றுக்கொள்வதே மிகப்பெரிய பரிசு” என்று மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

இதையடுத்து, ‘இன்றைய ஊடகம்’ என்ற தலைப்பில் ‘தி நியூஸ் மினிட்’-டின் சீனியர் நியூஸ் எடிட்டர் ஷபீர் அஹமது பேசுகையில், “பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் வழங்கும் நாடுகளில் இந்தியா 150-வது இடத்தில் இருக்கிறது. பல மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவருகிறார்கள். இச்சூழலில் சவாலான இந்தப் பணிக்கு துணிந்து விண்ணப்பித்ததற்குப் பாராட்டுகள். உங்கள் செய்தியில் உண்மையிருந்தால், எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கான அரசின் சக்கரத்தை நம்மால் நகர்த்த முடியும்” என்று வழிகாட்டியவர், விக்னேஷ் லாக்கப் மரணத்தை வெளிக்கொண்டுவந்த தன் கள அனுபவத்தைக் கூறியது மாணவர்களுக்கு உத்வேகமூட்டியது,

அடுத்து தற்போதைய இளைஞர்களின் ஃபேவரைட்டான யூடியூபர் மதன் கெளரி விகடன் மேடை ஏறினார். அவர் பேசுகையில், “பத்திரிகையாளர்கள்போல நான் எங்கும் கள ஆய்வுகள் மேற்கொள்வதில்லை. நான் பேசும் சப்ஜெட்டுக்கான தரவுகளை இணையத்தில் இருந்துதான் எடுக்கிறேன். முந்தைய வீடியோவுக்கான கமென்ட் பகுதியில் என் சப்ஸ்க்ரைபர்ஸ் கேட்பதைத்தான் அடுத்த நாள் வீடியோவாகத் தருகிறேன். உங்களுக்கும் வாசகர்களுக்குமான அந்த கனெக்ட் மிகவும் முக்கியம்” என்றார்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ‘டிஜிட்டல் காலத்து இளைஞர்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் டாக்டர் சிவபாலன் இளங்கோவன். “சமூகம், கல்வி எவற்றிலுமே அறம் இல்லாததால், தற்போதைய இளைஞர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். இந்தச் சமூக மாற்றங்களை மனதில் வைத்துக்கொண்டு செய்திகளை எழுத வேண்டும். ஒரு மோசமான சம்பவத்தைச் செய்தியாக்கும்போது, எந்த முன்முடிவும் இன்றி அணுக வேண்டும். அப்போதுதான் மாறுபட்ட கண்ணோட்டம் நமக்குக் கிடைக்கும். பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, படிப்பவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடாது. ஒரு விபத்தையோ, குற்றச் சம்பவத்தையோ செய்தியாக்கும்போது, இனி இது போன்ற தவறு நடக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்போடு எழுத வேண்டும்” என்று பேசியவர், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.

அதன் பின்னர் ஒட்டுமொத்த மாணவர்களில் கைதட்டல்களுக்குப் புன்னகையால் நன்றி சொன்னபடி மேடையேறினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை வெகுவாகப் புகழ்ந்தவர், “படிக்கும்போதே இவ்வளவு பெரிய அனுபவங்கள் மாணவப் பத்திரிகையாளர்களுக்குக் கிடைப்பது, உண்மையிலேயே பெரிய விஷயம். இது போன்ற வாய்ப்பு எதுவுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவே எனக்கு 26 வயது ஆனது. அதன் பின்னர்தான் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால், நீங்கள் என்னவாகப்போகிறீர்கள் என்று உங்களுக்கு இப்போதே தெரிந்திருக்கிறது. இந்த வாய்ப்பை நல்ல முறையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று நம்பிக்கை விதைத்தார். பின்னர், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு லோகேஷ் பதிலளித்தார்.

ஷபீர் அஹமது - மதன் கெளரி - சிவபாலன் இளங்கோவன் - லோகேஷ் கனகராஜ் - ஜி.வி.பிரகாஷ் குமார்
ஷபீர் அஹமது - மதன் கெளரி - சிவபாலன் இளங்கோவன் - லோகேஷ் கனகராஜ் - ஜி.வி.பிரகாஷ் குமார்

அன்று மாலை, “ஜீவி... ஜீவி...” என்ற மாணவர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மேடையேறினார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு அவர் ஏறிய முதல் மேடை, விகடன் மாணவர் பத்திரிகையாளர் மேடைதான். அவர் பேசுகையில், “இளம் பத்திரிகையாளருக்கு மேடை கொடுத்து, அவர்களுக்குப் பல ஊக்கங்களைக் கொடுக்கும் விகடனின் இந்தத் திட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்றார். அதைத் தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது “தமிழ்நாடு அரசியல் உட்பட நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் உற்று கவனிக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் நபர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, கண்டிப்பாகக் குரல் கொடுக்க வேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது” என்றபோது கைதட்டலால் அரங்கம் நிறைந்தது.

இரண்டு நாள்களிலும் விகடனில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர்கள், வெவ்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தனர். நிறைவு நாளன்று, “பல்வேறு குழப்பங் களோடு வந்த எனக்கு நிறைய தெளிவும், நிறைய நிறைய உற்சாகமும் தந்திருக்கிறது இந்த முகாம்” என்றார் ஒரு மாணவர்.

இனி அவர்களின் படைப்புகள் பேசும்!