திருத்தலங்கள்
Published:Updated:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

கூட்டுப் பயிற்சி முகாம்
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டுப் பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு உத்வேகமூட்டிய இரண்டு நாள் முகாம்... களமிறங்கியது புதிய மாணவப் பத்திரிகையாளர் படை!

தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகை யாளர் பயிற்சித் திட்டமே. நூற்றாண்டை நெருங்கும் ‘விகடன்’ குழுமத்தின் இந்தப் பெருமைமிகு திட்டத்திற்கு நடப்பாண்டில் 2,416 விண்ணப்பங்கள் வந்துசேர, பலக்கட்ட தேர்வுக் குப் பின்னர் 56 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டார்கள்.

பா.சீனிவாசன்
பா.சீனிவாசன்

இந்த மாணவர்களுக்கான கூட்டுப்பயிற்சி முகாம், சென்னையில் ஜூலை 30, 31 ஆகிய இரு நாள்கள் நடந்தது. புதிய மாணவர் நிருபர் படையை ‘விகடன்’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்று, இந்தத் திட்டக் காலத்தில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், இத்திட்டம் இயங்கும் முறை குறித்து விளக்கினார்.

அடுத்ததாக, ‘இன்றைய ஊடகம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ‘நியூஸ் மினிட்’ செய்தி ஊடகத்தின் சீனியர் நியூஸ் எடிட்டர் ஷபீர் அகமது, இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்து பேசினார்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

தொடர்ந்து ‘விகடன் 360, டேட்டா, யுட்டி லிட்டி, ஆர்.டி.ஐ’ , ‘சோசியல் மீடியா சஜ்ஜஷன்ஸ்’ என மாணவர்களுக்கான வகுப்புகள் சீரியஸாக போய்க்கொண்டிருக்க, மதிய உணவுக்குப் பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார் யூ-டியூபர் மதன் கௌரி. தான் பதிவேற்றும் ஒவ்வொரு வீடியோவுக்கான ஐடியாக்கள் பிடிப்பது எப்படி என்பதில் தொடங்கி யூடியூப் போன்ற தளங்களின் வளர்ச்சி வரையிலுமாக பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார் மதன்.

பின்னர் ‘மொபைல் ஜர்னலிசம்’, ‘Let’s Make Videos’, ‘We are VJs’ என ஓவ்வொரு தலைப்பிலும் அதுசார்ந்த பத்திரிகையாளர்கள் வந்து பேசினர். விகடன் குழுமம் வெளியிடும் ஒவ்வொரு இதழுக்கும் என்ன மாதிரியான செய்திகளைச் சேகரித்து அனுப்பலாம் என அந்தந்த இதழின் சீனியர் பத்திரிகையாளர்களுடனான கேள்வி பதில் கலந்துரையாடலுடன் முடிந்தது முதல் நாள்.

ஷபீர் அஹமது - மதன் கெளரி - சிவபாலன் இளங்கோவன் - லோகேஷ் கனகராஜ் - ஜி.வி.பிரகாஷ் குமார்
ஷபீர் அஹமது - மதன் கெளரி - சிவபாலன் இளங்கோவன் - லோகேஷ் கனகராஜ் - ஜி.வி.பிரகாஷ் குமார்

‘செய்தி…ஏன், எதற்கு, எப்படி’ என்ற தலைப்பில் தொடங்கியது பயிற்சி முகாமின் 2-ம் நாள். அதற்கடுத்த அமர்வாக ‘டிஜிட்டல் காலத்து இளைஞர்கள்’ என்ற தலைப்பில் தற்காலத்து இளைஞர்களின் மனநலம் குறித்து உரையாற்றினார் டாக்டர் சிவபாலன் இளங்கோவன். இரண்டாவது நாளின் சர்ப்ரைஸாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேடையேறி மாணவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். ‘சுவாரஸ்யம் கூட்டுவோம், பிழையை ஓட்டுவோம்’ என்ற தலைப்பில் மொழிநடை மற்றும் பிழைகளின்றி எழுதுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட, கடந்தாண்டு மாணவர்களான கார்த்திகா, அர்ஜுன், அடலேறு, சௌமியா, ஜீவகணேஷ் மற்றும் சூர்யா தங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். அடுத்த சர்ப்ரைஸாக என்ட்ரி ஆனவர் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். மாணவர்களின் சுவாரஸ்ய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்த அவர் சில பாடல்கள் பாடியும் மயக்கினார்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்வாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங் களில் என்ன மாதிரியான செய்திகள் சேகரிக்கலாம் என்பது குறித்து ‘எங்க ஏரியா... உங்க ஏரியா?’ என தாங்கள் சார்ந்த மாவட்ட நிருபர்களுடன் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி, உற்சாகமாக விடைபெற்றது புதிய மாணவர் படை!