Published:Updated:

ஒரே நேரத்தில் விண்ணுக்குப் பறந்த 100 செயற்கைககோள்கள்... ராமேஸ்வரத்தில் மாணவர்கள் சாதனை!

செயற்கைக்கோள்களுடன் சென்ற பலூன்
செயற்கைக்கோள்களுடன் சென்ற பலூன் ( உ.பாண்டி )

ஒரே நேரத்தில் 100 பெம்டோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இந்த அரிய சாதனை நிகழ்வு ராமேஸ்வரத்தில் நடந்தது. தலா 50 செயற்கைக்கோள்கள் அடங்கிய பெட்டியுடன் இரு பலூன்கள் அடுத்தடுத்து விண்ணில் பறக்கவிடப்பட்டன.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இணைந்து மிகச் சிறிய வகையில் வடிவமைக்கப்பட்ட 100 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தினர். ராமேஸ்வரத்திலிருந்து ராட்சத பலூன் மூலம் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் சுற்றுச்சூழல், மாசு பரவல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையானவற்றின் தரவுகள் சேமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சாதனை: விண்ணில் செலுத்தப்பட  100 செயற்கைக் கோள்கள்.
சாதனை: விண்ணில் செலுத்தப்பட 100 செயற்கைக் கோள்கள்.
உ.பாண்டி

டாக்டர்.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, கலாம் இல்லம் ராமேஸ்வரம், இந்திய விண்வெளி மண்டலம் (இந்திய ஸ்பேஸ் ஸோன்) மற்றும் மார்ட்டின் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் டாக்டர் APJ அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி ‘பேலோட் க்யூப்ஸ் 2021' என்ற திட்டத்தின் கீழ் தமிழகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித்தத்தில் ஈடுபாடுடைய மாணவர்கள், அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் இணைந்து மிகச் சிறிய வகையிலான பெம்டோ செயற்கைக்கோள்கள் வடிவமைக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கான வகுப்புகள் நிகழ்நிலை வாயிலாக 6 நாள்கள் நடைபெற்றன. ஒரு நாள் நேரடி வகுப்பும் நடைபெற்றது. இந்த ஒரு நாள் நேரடி செய்முறை வகுப்பு ஜனவரி 21-ம் தேதி அன்று KPR பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்திலும், ஜனவரி 22, 23 தேதிகளில் டாக்டர் M.G.R. கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் நடைபெற்றது. விவசாயம், கடலில் நிலவும் தட்பவெட்பம், தகவல் தொழில்நுட்பம், மாசுப் பரவலால் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவற்றின் தகவல்களைப் பெறும் வகையில் 100 பெம்டோ செயற்கைக் கோள்கள் இந்தப் பயிற்சியில் இறுதி வடிவம் பெற்றன.

காணொலியில் வாழ்த்திய தமிழிசை.
காணொலியில் வாழ்த்திய தமிழிசை.
உ.பாண்டி

இதையடுத்து இச்செயற்கைக் கோள்களை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் மூலம் விண்ணில் செலுத்த டிஜிசிஏ, பாதுகாப்பு அமைச்சகம், (புதுடில்லி) விமானத் தலைமையகம், (புதுடில்லி) விமானப்படை நிலையம், (தஞ்சாவூர்) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (சென்னை) அகியவற்றில் உரிய அனுமதி பெறப்பட்டது. ஒரே நேரத்தில் 100 பெம்டோ செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் இந்த அரிய சாதனை நிகழ்வு ராமேஸ்வரத்தில் நடந்தது. தலா 50 செயற்கைக் கோள்கள் அடங்கிய பெட்டியுடன் கூடிய இரு பலூன்கள் அடுத்தடுத்து விண்ணில் பறக்கவிடப்பட்டன.

விண்ணில் பறக்க தயாரான செயற்கைக் கோள் பலூன்.
விண்ணில் பறக்க தயாரான செயற்கைக் கோள் பலூன்.
உ.பாண்டி

இந்த நிகழ்ச்சியைத் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை செளந்தரராஜன், யு.ஆர்.ராவ் செயற்கைக் கோள் மைய இயக்குநர் குன்ஹிகிருஷ்ணன், `ஆப்பிள் இந்தியா' முன்னாள் திட்ட இயக்குநர் ஆர்.எம்.வாசகம் ஆகியோர் காணொலி மூலம் வாழ்த்திப் பேசினர். ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில் பிரமோஸ் ஏவுகணைத் திட்ட இயக்குநர் சிவதாணு, அப்துல்கலாமின் பேரன்கள் சேக், சலீம், மார்ட்டின், இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஆனந்த் மேகலிங்கம் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

செயற்கைக் கோள் ஆராய்ச்சி மாணவர்கள்.
செயற்கைக் கோள் ஆராய்ச்சி மாணவர்கள்.
உ.பாண்டி

"தரையிலிருந்து 38 கி.மீ தூரம் பறந்து சென்ற இரு பலூன்களில் பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கோள் பல்வேறு தகவல்களைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது. 8 மணி நேரப் பயணத்திற்குப் பின் கோவில்பட்டியில் தரையிறங்கிய செயற்கைக்கோள்களை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து வருகின்றனர். இந்த அரிய சாதனை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறும்" என்று டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு