Published:Updated:

கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தமா?! தீர்ப்பு என்னவாகும்?

கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தமா?! தீர்ப்பு என்னவாகும்?
News
கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தமா?! தீர்ப்பு என்னவாகும்?

கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தமா?! தீர்ப்பு என்னவாகும்?

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மூன்று மாதங்களுக்கு முன் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இந்த ஆய்வுப் பணி, இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில், கீழடி குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணையில் இருக்கிறது. முந்தைய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது குறித்தும், `கீழடியில் எடுக்கப்பட்ட பொருள்களை இங்கேயே வைத்து மியூசியம் அமைக்க முடியுமா?' என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு, இம்மாதம் 21-ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நீதிபதிகள் கீழடிக்கு வருவதாக திடீர்  தகவல் கிடைத்தது. “கீழடியில் இதுக்குமேல் ஒன்றும் இல்லை. மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம்” என்று  சொல்லி, மூடத் தயாராகிவிட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம்.

நீதிபதிகள் சதீஸ்குமார், சுந்தரேசன் ஆகியோர் கீழடியைப் பார்வையிட்டார்கள். அப்போது நீதிபதிகள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் “இங்கு, அருங்காட்சியகம் அமைக்க முடியுமா? அப்படி  அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆகையால், பராமரிப்பது கடினம். அதே நேரத்தில் இது அரசாங்கம் முடிவு பண்ணவேண்டிய விஷயம்'' என்றவரிடம், நீதிபதிகள் “இங்கு உள்ள பொருள்கள் எவ்வளவு வருடங்கள் பழைமையானவை?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு லேயருக்கும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு உள்ள பானைகள் ஐந்நூறு ஆண்டுகளுக்குமேல் பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்” என்றார் அந்த அதிகாரி. 

மேலும், நீதிபதிகள் “என்னென்ன பொருள்கள் கிடைத்திருக்கின்றன?” என்று கேட்டார்கள். “இங்கு அதிக அளவில் பாசிமணிகள் கிடைத்திருக்கின்றன. தங்கம், செப்பு, உறைகிணறு, தந்தத்தால் ஆன சீப் போன்றவை கிடைத்திருக்கின்றன. பிராமி, தேவநாகரி எல்லாம் தமிழுக்குப் பிறகே உருவாகியிருக்கின்றன. மதுரையைச் சுற்றி தமிழ் எழுத்துகள் மேட்டுப்பட்டி, அரிட்டாபட்டி மாங்குளம் போன்ற ஏரியாக்களில் அதிகம் காணப்படுவதோடு, தென்னிந்தியாவில் மிக அதிக அளவில் தமிழ் எழுத்துகள் கிடைத்திருக்கின்றன” என்றார் ஸ்ரீராம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கீழடி அகழ்வராய்ச்சிக்கு முதல் மற்றும் இரண்டாம்கட்ட ஆய்வுப் பணிக்கு இடம் கொடுத்த விவசாயி சந்திரன், நீதிபதிகள் திரும்பிச் செல்லும்போது குறுக்கிட்டு, “அய்யா, நான் இந்த அகழ்வாராய்ச்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள்ல ஒருவன். எங்களை இந்த அதிகாரி தரக்குறைவாகப்  பேசுகிறார். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மரியாதை குறைவாக நடத்துகிறார். இதே அதிகாரி நீடித்தால் நாங்கள் யாரும் அகழ்வராய்ச்சிக்கு நிலம் கொடுக்க மாட்டோம். எனவே, பழைய அதிகாரி அமர்நாத் வந்தால் மட்டுமே ஆராய்ச்சிக்கு நிலம் கொடுப்போம்” என்று தெரிவித்த விவசாயி சந்திரன், “அய்யா, இந்த அகழ்வாராய்ச்சியை நிறுத்தக் கூடாது. இது எங்களுக்குப் பெருமையான விஷயம்” என்றார்.

கீழடி  அகழ்வாராய்ச்சிக்கு இடம் கொடுத்த விவசாயிகளில் ஒருவரான சந்திரனிடம் பேசினோம்...

“எங்களுக்கு வழங்கப்பட்ட கூலியில், மோசடி செய்யப்பட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு மரியாதை இல்லை. ஸ்ரீராம் எங்களை அதிகார தோரணையில் மிரட்டுகிறார். இவருக்கு அகழ்வராய்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கீழடிக்கு எப்படியாவது மூடு விழா நடத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்துகொள்கிறார். அரசாங்கம் கொடுத்த நிதியில் பெரும்பான்மையான அளவை, அவரின் சொகுசான வாழ்க்கைக்குப் பயன்படுத்தியுள்ளார். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை மறைத்திருக்கிறார். தங்கம் போன்ற பொருள்கள் கிடைத்திருப்பது கீழடியில்தான்.

அதிகாரி ஸ்ரீராம் வந்ததிலிருந்தே எடுக்கப்பட்ட பொருள்கள் மர்மமாகவே உள்ளன. ஆராய்ச்சியில் கிடைத்த பெரும்பான்மையான பொருள்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. ஏனென்றால், எடுக்கப்பட்ட பொருள்கள் பத்திரிகைகளுக்கோ பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்தவில்லை. விவசாயிகள், நிலம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதிகாரி வேறு நபராக மக்களோடு மக்களாகப் பழகக்கூடியவராக இருக்கவேண்டும்” என்றார் விவசாயி சந்திரன்.

கீழடி தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீராம் பேசும்போது, “நான்காம்கட்ட ஆய்வுப் பணிகள்குறித்து மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணியைத் தொடர தொல்லியல் துறை அனுமதி வழங்கிய பிறகு மீண்டும் பணி தொடரும்” என்றார்.