Published:Updated:

ஹார்வர்டு தமிழ் இருக்கை... செய்யவேண்டியதும் செய்யக்கூடாதவையும்! #VikatanExclusive

ஹார்வர்டு தமிழ் இருக்கை... செய்யவேண்டியதும் செய்யக்கூடாதவையும்! #VikatanExclusive
ஹார்வர்டு தமிழ் இருக்கை... செய்யவேண்டியதும் செய்யக்கூடாதவையும்! #VikatanExclusive

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம், பெர்க்கிலி பல்கலைக்கழகம் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ‘சங்கத் தமிழ் இருக்கை’ எனும் பெயரில் தமிழியல் முயற்சி ஒன்றுக்கான தொடக்கம் நடந்துவருகிறது. போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திலும் ஜப்பானிலும் தமிழ்நாட்டின் அடுத்தடுத்து பல மிக மூத்த பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழின் செம்மொழி அங்கீகாரத்தை நிறுவுவதில் உலக அரங்கில் பங்காற்றிய ஜார்ஜ் ஹார்ட்டின் தமிழாய்வு, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோவின் தமிழ்- ஜப்பானிய மொழி ஒப்பீட்டு ஆய்வு ஆகியன சாத்தியமானதற்கு அயல்நாடுகளில் உள்ள தமிழ்த் துறைகளும் இருக்கைகளுமே பயன்பட்டன. இந்த அனுபவத்தில், ஹார்வர்டு சங்கத் தமிழ் இருக்கை எப்படி இருக்கவேண்டும், எப்படி இருந்துவிடக் கூடாது என்பதும் முக்கியம்.

இது பற்றி தமிழியல்/பண்பாட்டியல் ஆய்வாளர் கஜேந்திரனின் பார்வை:

விடுதலை பெற்ற பிறகு அமைந்த இந்திய, தமிழக அரசுகள் தமிழ் உயராய்வைச் செய்திருக்க வேண்டும். அது நடந்திருந்தால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய இறைப்பணியாளர்கள் இங்கு செய்த தமிழ் உயராய்வின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். 

மொழி ஆய்வை ஆழப்படுத்த ஆழப்படுத்த அது மொழியின, தேசிய இன அரசியலைக் கூர்மைப்படுத்துவது உலக இயல்பு. இந்த ஜனநாயக மேம்பாட்டுக்கு இந்திய ஒன்றிய அரசு தயாராக இல்லை. அது ஒற்றை அதிகாரத் தன்மையையே தமிழாய்விலும் காட்டுகிறது. இங்குள்ள மாநிலக் கட்சிகள் செய்திருக்கலாமே எனப் பொதுவாகக் கேட்கலாம். உண்மையில் இவர்களின் தன்னலம், படோடோபம் ஆகியவற்றைத் தாண்டி, குறைவான அதிகாரம்கொண்டவர்கள் என்பதுதான் சிக்கல்.

தமிழக மக்களோ வாழ்வாதாரத்துக்கான ஒரு பயிற்சியாக மட்டுமே கல்வியைப் பார்க்கிறது. மருத்துவம், பொறியியல், கணினியியல் போன்றவற்றின் மீதே அதிக ஆர்வத்தைக் காட்டி, மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளை ஒதுக்கித்தள்ளுகிறார்கள். இவை எல்லாம் சேர்ந்து தமிழ் உயராய்வில் தேக்கநிலையை உண்டாக்கின.

பல்கலைக்கழகங்களில் தொடக்கத்தில் உயராய்வுக்கான வாய்ப்பு இருந்தது. 90-களுக்குப் பிறகு பெரும்பாலும் அடையாள அரசியல்சார்ந்து, அவரவர் வட்டாரம், சாதி சார்ந்து, குடிமரபு சார்ந்த ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைத் தாண்டி தமிழ்- திராவிடம்- ஆரியம் எனப் பேரளவில், பரந்த பரப்பிலான - ஆழ்ந்த முறையியலான (methodolgy) ஆய்வுகள் குறைவாகவே இருக்கின்றன. உயராய்வுக்கு அவசியமான பன்மொழித்திறன் ஆய்வாளர்களிடையே போதுமானதாக இல்லை; குறைந்துகொண்டும் வருகிறது. 

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில், தமிழ் உட்பட்ட இந்தத் துணைக்கண்டத்தின் மொழிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டிய இந்தியவியல்(Indology) துறையில், பெரும்பாலும் இந்தி அல்லது சமஸ்கிருதமே ஆட்சிசெய்கிறது. பிற மொழிகள் எதற்கும் முறையான பங்கீடு இல்லை. 

இந்தச் சூழலில், தமிழ்ப் பரப்பைவிட்டு வெளியிலிருந்து தமிழ் உயராய்வு முயற்சிகள் வந்தால்தான் உண்டு என்கிற நிலை நிலவுகிறது. போலந்தின் வார்சாவில் அமெரிக்காவின் சிகாகோவில், ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கைகள், மறுதுளிர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமைந்தன. அந்த வரிசையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையையும் பயனுள்ளதாகும். இதன் மூலம் தமிழின் செம்மொழி, தொன்மை, தனித்துவம் ஆகிய தன்மைகள், உலக மானுடத்துக்கான கொடைகளாக உள்ள திருக்குறள் போன்ற படைப்புகள், ஆய்வுக்கான பொருள்களாக மாறும்.

நம் மொழியில் உள்ள பொருட்கள் அவர்களின் தலைப்பாக வெளிப்படும். ஆய்வுப்பொருளில் புதிய கதவைத் திறந்துவிடும். பல்துறை ஆய்வுகளும் வளர வாய்ப்பு உண்டாகும். பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை உருவாக்குவதற்கான ஊக்கம் பிறக்கும். உலக அளவிலான ஆய்வு முறையியல் சிறப்பானதாக இருக்கும் என்பதால் ஆய்வின் பிழிவு இன்னும் துல்லியமான தன்மை, அளவில் வெளிப்படும். ஆழ்ந்த துறை முறையியலோடு பல்துறை அறிவும் (inter discplinary) இணைந்ததாக அயலக ஆய்வுகள் அமையும்.  

இங்கு நடந்துள்ள தொடக்கநிலை ஆய்வுகள், ஐரோப்பியர் வருகையின் பின்னர் அவர்கள் செய்த ஆய்வுகளில் ஏராளமான சுவடிகள், கல்வெட்டுகள் கிடைத்தன. அவை, இங்கு ஆக்கிரமிக்க வந்த பிரிட்டன், பிரான்சு, போர்த்துகீசு, டச்சு நாடுகளின் நூலகங்களில், தொல்லியல் ஆவணக் காப்பகங்களில் பாதுகாக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, கிழக்கிந்திய கம்பெனி கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்தபோது, கணிசமான ஆய்வுச் சான்றுகளை இங்கிருந்து எடுத்துப்போனார்கள். அவை அங்கு உள்ளன. ஆய்வுசெய்த ஆங்கிலேய அதிகாரிகள், ஆய்வாளர்கள் அங்கிருந்தும் பல சான்றுகளை எடுத்துவந்தனர். அவை கொல்கத்தாவில் இருக்கின்றன. இந்தத் தரவுகள் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவேண்டும். அதற்கான சக்தியும் பொருளியல் பலமும் பொறிநுட்பமும் இந்த இருக்கைக்கு உண்டு. 

விடுதலைக்குப் பிறகு கிடைத்த ஆயிரக்கணக்கான ஆய்வுத்தரவுகளும் புள்ளிவிவரங்களும் பயன்படுத்தப்படவேண்டும். உதாரணமாக, உலோகவியல் தொடர்பான தரவுகளைத் திரட்டியிருக்கிறோம். அது முறையான ஆய்வுக்கு உள்ளாக்கப்படவில்லை. கப்பல்கட்டுதல் தொடர்பாக 1950-களிலேயே அ.ராகவன் எழுதினார். இவையெல்லாம் புதிதாக தென்னிந்தியப் பண்பாட்டு வரலாற்றுடன் இணைக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இந்த அறிவுத்துறைகளும் ஏற்படுத்திய மாற்றங்கள் புதிய விடைகளாக வரும். 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள், தனித்தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் எல்லாத் தரப்பினரிடமும் ஏற்படுத்தியுள்ள கருத்தும் அறிவியல் பார்வையும் சார்ந்த தரவுகள் ஆய்வாக ஆக்கப்படவில்லை. குறைந்தது, ஆய்வுச் சமூகத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டால், சங்க இலக்கியத்தின்வழியாக புதிய ஆய்வு முடிவுகளுக்குப் போக வழிவகுக்கும். இதற்கு நம் தரப்பில் தமிழ்நாட்டு அரசு ஒத்துழைப்பாக இருக்கவேண்டும்.

கீழடியில் நாமே அகழ்வாய்வு செய்தாலும் மைய அரசு அதை விரும்பவில்லை என்பது தெளிவு. இதில் கிடைத்த பானை ஓடுகளும் எழுத்துகளும் சங்க இலக்கியங்களின் தரவுகளும் ஒன்றுதான் என ஆகிவிட்டால், தமிழின் உண்மைகள் நிறுவப்படும். கீழடியை மூடிவிட்டு, ஆதிக்க மௌனத்துடன் கடந்துவிடமுடியாது; கமுக்கமாக இருக்கமுடியாது. இதெல்லாம் புதிய இருக்கை மூலம் நடந்துவிடும் என்று சொல்லவில்லை; அதற்கான சாத்தியம் இருக்கிறது. 

தமிழ்நாட்டு அரசின் தலையீடானது நிதியுதவியோடு நின்றுவிடாமல், தொடர்பணியாக இருக்கவேண்டும்; அது தொடர் கண்காணிப்புக்கு உரியதாக இருக்கவேண்டும். அங்கு நடக்கும் உயராய்வுகள், இங்குள்ள தமிழாய்வு நிறுவனங்களுடன் அப்டேட் செய்யப்படுவது, பகிர்ந்துகொள்ளப்படுவது அவசியம்; அதைப்போலவே இங்கிருந்து அங்கும் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும். அரசுதான் இதைச் செய்வதற்கான கட்டமைப்போடு இருக்கிறது என்பதால், தமிழக அரசுக்கு இந்தக் கடப்பாடு உண்டு. 

தமிழக அரசின் சார்பில் யாரையும் நியமிக்கும் வாய்ப்பு வருகையில், இங்குள்ள அரசியல், வட்டார அடிப்படையில் அந்த நியமனம் இருக்கவேகூடாது; அப்படியிருந்தால் முன்னர் கூறிய அனைத்தும் அடிபட்டுவிடும். சமூகநீதி அடிப்படையில் சுழற்சிமுறை(roaster )யில் தேர்வுசெய்யலாம். பொதுவாக உலக அளவிலான தரத்துக்குத் தேவையான தகுதிபடைத்தவர்களை அனுமதிக்கலாம்.

யாரோ குறிப்பிட்ட பேராசிரியர், ஓய்வுக்குப் பிறகு அவருக்கு ஒரு கௌரவம் கொடுக்கலாமே என்பதைப்போல, ஒரு ஜாக்பாட் பரிசைப் போல இந்த வாய்ப்பு அமைந்துவிடக் கூடாது. இங்கு பல்கலை. துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டாளர், அரசுக் கல்லூரி முதல்வர் பணி நியமனத்தில் செய்யப்படுவதைப் போல, புதிய இருக்கைக்கானவர்களைத் தேர்வுசெய்யக் கூடாது. அப்படி அமைந்துவிட்டால், இங்குள்ள சாதியத்தை உலக அளவிலான சாதியமாக, கசடான தன்மைகளை உலக அளவிலான கசடுகளாக மாற்றவே வாய்ப்பாக அமையும்.