Published:Updated:

உயர் கல்வித்துறையில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் 100 கோடி ரூபாய் ஊழல்?! #VikatanExclusive

உயர் கல்வித்துறையில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் 100 கோடி ரூபாய் ஊழல்?! #VikatanExclusive
உயர் கல்வித்துறையில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் 100 கோடி ரூபாய் ஊழல்?! #VikatanExclusive

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே கல்லூரிப் பேராசிரியர்கள் நியமனத்திலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.  

அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்படுவது வழக்கம். அதேவேளையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில், நிர்வாகமே பத்திரிகைகளில் சிறிய அளவில் விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்பும் நடைமுறை உள்ளது. இந்த அடிப்படையில் 2012 - 2016 வரை 2,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் இதே முறையில் 379 பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னமும், 418 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  பணியிடங்களை நிரப்பியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து பேராசிரியர்களிடம் பேசினோம்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் வீரமணி கூறுகையில், “அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றுபவர்களுக்குச் சம்பளமும் அனைத்துச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், இங்கு பணி நியமனத்துக்கு எந்த விதிமுறையும் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்தக் கல்லூரிகளை நடத்தும் நிர்வாகிகளே நியமனம் குறித்து முடிவு செய்வார்கள். பெரும்பாலும் கல்லூரி நிர்வாகிகளின் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே பணி என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மண்டல இணை இயக்குநர், உயர் கல்வித் துறை இயக்குநர், செயலாளர், அமைச்சர் எனப் பலரின் இடையூறு அதிகரித்து, பணம் இருந்தால் மட்டுமே பணி என்று மாறியிருக்கிறது.

 பழனியப்பன் உயர்கல்வித் துறை அமைச்சராகப்  பதவி வகித்தபோது,  ஒவ்வொரு பணியிடத்துக்கும் குறிப்பிட்ட அளவு பணம் வழங்க வேண்டும் என்று நிர்ணயித்து பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது. இப்போதும் இது தொடர்கிறது. பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம் என்றால் 30-40 லட்சம் ரூபாயும், அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் 15-25 லட்சம் ரூபாயும் பெற்றுக்கொண்டுதான் நியமிக்கிறார்கள். பணத்தைக் கேட்கும்போதே, 'ஏழாவது சம்பள கமிஷன் வரப் போகிறது' என்ற விளக்கத்தைச் சொல்லி அதிகளவில் பணத்தைப் பெறுகின்றனர். இதுவரை 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானதாகத் தெரிகிறது. அதிலும், கணிசமான தொகை உயர்கல்வி துறை அமைச்சருக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. இப்போதும் இந்த நடைமுறை தொடர்கிறது. இதனால் உயர்கல்வித் துறை ஊழல் கறை படிந்த துறையாகிவிட்டது" என்கிறார் வீரமணி.

அனைத்துத் தகுதி இருந்தும் பணத்தால் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகின்றன என்கின்றனர் வேலைக்காகக் காத்திருப்பவர்கள். தனியார் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் செல்வகுமார் "அரசு உதவி பெறும் கல்லூரியில் உள்ள பணியிடங்களை நிரப்புவதில் அரசின் வழிமுறைகளையோ, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பரிந்துரைத்த விதிமுறைகளையோ கடைபிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெயிட்டேஜ் முறையும் பின்பற்றப்படுவதில்லை.  

ஒவ்வொரு கல்லூரியும் சாதி, மதம், இனம், மேலிட பரிந்துரை எனத் தங்களுக்கேற்ப விதிமுறைகளை வைத்து ஆட்களை நியமிக்கின்றனர். இங்கு அனுபவம், முனைவர் பட்டம், நெட் (NET), செட் (SET) தேர்வில் தேர்ச்சி என எதுவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இனியாவது அரசு உதவி பெறும் கல்லூரிகளின்  பணி நியமனம், அரசுத் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே எதிர்கால சமுதாயம் சிறக்க முடியும்" என்கிறார் செல்வகுமார்.  

தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர் சங்கர், “அரசு உதவிபெறும் கல்லூரியில் ஆட்களை நியமிக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு அதிக மதிப்பெண் என்ற வழக்கத்தில் இல்லாத ஒரு முறையைக் கடைப்பிடிக்கின்றனர். இதன்மூலம் தங்களுக்குச் சாதகமானவர்களுக்கு அதிக மதிப்பெண் போட்டுத் தேர்வு செய்கின்றனர். இதனால் யாரும் கேள்வி கேட்க முடிவதில்லை. பணம் கொடுத்தால் பணி. இல்லை என்றால் தகுந்த நபர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று தேர்வு செய்யாமல் காலியாக வைத்திருக்கின்றனர். பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது” என்று வருத்தத்துடன் சொன்னார்.  

முறைகேடான நியமனங்களால் நாளைய சமுதாயத்தின் நிலை கேள்விகுறியாகி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு