ராமானுஜம் போல உங்கள் பிள்ளைகள் கணக்குப் பாடத்தைக் காதலிக்க வைக்கலாமா? #srinivasaramanujam

இன்று (டிசம்பர் 22), கணிதமேதை சீனிவாச ராமானுஜன் பிறந்தநாள். கணிதத்தின் பல நுணுக்கங்களை உலகுக்குச் சொன்னவர். இந்த நாள், இந்திய கணிதத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நம் வீட்டுப் பிள்ளைகளும் கணக்குப் பாடத்தை லவ் பண்ண... ட்ரிக்ஸைச் சொல்லித்தருகிறார், இந்திய அபாகஸின் எம்.டி. மற்றும் சி.இ,ஓ,வான பஷீர் அகமது. 

கணக்கு

1. நம் வீட்டுக் குழந்தைகளைத் தருமி பாணியில் சொல்வதென்றால், அவர்களுக்குப் பிடித்தது ஐஸ்க்ரீம்; பிடிக்காதது கணக்கு. அதற்காக, ஸ்கூலில் கணக்குப் பாடம் நடத்தாமல் இருக்க மாட்டார்களே. அதனால், 'கணக்கும் ஒரு சப்ஜெக்ட்தான். அதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை' என்று அவர்கள் மனதில் அடிக்கடி பதியவைத்துக்கொண்டே இருங்கள். கணிதம் மீதான பயம் மெதுமெதுவாக மறையும். 

2. கணிதம் நன்கு போடத் தெரிந்தவர்கள் புத்திசாலிகள்; அது தெரியாதவர்கள் மக்குகள் என்கிற கான்செப்டை உங்கள் பிள்ளைகளின் மனதில் துளி அளவுகூட பதியவிடாதீர்கள். 

3. ஒன்று, இரண்டு, மூன்று என எண்களை நேரடியாக அறிமுகப்படுத்தாதீர்கள். 1 கேரட், 2 டெடி பியர், 3 முட்டை என வீட்டில் இருக்கும் பொருள்கள் வழியே விஷூவலாக அறிமுகப்படுத்தினால், எண்கள் அவர்கள் மனதில் கலர்ஃபுல்லாகப் பதியும். 

கணக்கு

4. 'அம்மா எனக்கு மேத்ஸே வர மாட்டேங்குது' என உங்கள் பிள்ளை ஃபீல் பண்ணினால், அவனி(ளி)டம் இருக்கும் பிற திறமைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டுங்கள். 'அவற்றையெல்லாம் சூப்பராக செய்யும் உன்னால், கணிதத்தையும் சிறப்பாகப் போட முடியும்' என நம்பிக்கை விதையுங்கள். 

5. தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, பிள்ளைக்குப் பாடம் எடுங்கள். பாடம் என்றால், ஒரே இடத்தில் உட்காரவைத்து நடத்துவதல்ல. 'எத்தனை டைல்ஸ் இருக்குனு எண்ணுவோமா? நீ அந்தப் பக்கம் இருந்து எண்ணிட்டு வா. நான் இந்தப் பக்கம்' எனச் சொல்லி, ஹாலின் டைல்ஸை எண்ணுங்கள். குழந்தைபோல ஒவ்வொர் டைல்ஸிலும் ஜம்ப் செய்யலாம். இதுபோல கிச்சனில் இருக்கும் கரண்டிகள், தட்டுகள் ஆகியவற்றையும் எண்ணச் சொல்லலாம். 

கணக்கு

6. சின்னப் பிள்ளைகள் கணக்கை விளையாட்டாக கற்றுக்கொள்ள, கேம்ஸ், ஆப்ஸ் எல்லாம் வந்துவிட்டன. அவற்றை டவுன்லோடு செய்து பயன்படுத்தக் கொடுங்கள். 

7. பால்கனியில் அமர்ந்துகொண்டோ, அல்லது சாலையோர பூங்காவில் அமர்ந்துகொண்டோ, 'ரோட்டுல எத்தனை கார், எத்தனை பைக் போகுது கவுன்ட் பண்ணு. அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் எது அதிகம் போச்சுனு சொல்லு' எனச் சவால் விடுங்கள். '16 கார், 28 பைக்கா? 28-ல் 16 போச்சுன்னா எவ்வளவு?' என்று கேளுங்கள். இதுபோல கூட்டலையும் சொல்லவைக்கலாம். இது மனதில் பதிவானதும், பெருக்கல், வகுத்தல் என ஸ்டெப் பை ஸ்டெப்பாக பிள்ளைகளைக் கணிதத்தில் முன்னேற்றுங்கள். 

8. திடீரென உங்களுக்கு மறந்துவிட்டதுபோல நடிப்பதும், கணிதத்தைப் பிள்ளைகள் மனதில் பதியவைக்கும் ஒரு வழியே. 'நேத்து கீரைக்காரப் பாட்டிக்கு 15 ரூபாய் கொடுக்கணும். இன்னிக்கு 15 ரூபாய். ஆனால், 15 பிளஸ் 15 எவ்வளவுனு மறந்துபோச்சே. ஃபார்ட்டிதானே?' எனக் கேளுங்கள். 'இல்லேம்மா... தெர்ட்டி' என்று பிள்ளை சொன்னதும், 'தாங்க்ஸ் செல்லம். நல்லவேளை டென் ரூபீஸ் அதிகம் கொடுத்துட்டிருப்பேன்' எனப் பாராட்டுங்கள். 

கணக்கு

9. கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற அடிப்படை முடிந்ததும் ஏறு வரிசை, இறங்கு வரிசை போன்றவற்றையும் விளையாட்டாகச் சொல்லலாம். தரையில் ஒரு ரயில் பொம்மையையும், ஸ்டேஷன்கள்போல வைத்து, 'ஒரு ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்புது. வழியில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு நம்பர்' என ஆரம்பியுங்கள். 'விழுப்புரத்தில் நிற்கிறப்போ என்ன நம்பர்? திருச்சியில் நிற்கிறப்போ என்ன நம்பர்?' எனக் கேளுங்கள். பிறகு, 'அந்த டிரெய்ன் ரிட்டன் வருது. இப்போ, திருச்சியில் நிற்குது. என்ன நம்பர்?' எனக் கேளுங்கள். 

10. உங்களுக்குக் கணிதம் பிடிக்காத பாடம், அதில் பள்ளி காலத்தில் நீங்கள் திணறினீர்கள் என்றால், அதையெல்லாம் பிள்ளையிடம் சொல்லாதீர்கள். 'அப்பா/ அம்மா மாதிரி எனக்கும் வரலை. தட்ஸ் ஆல்' என கூலாக கணிதத்தைத் தள்ளி வைத்துவிடுவார்கள், கவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!