சென்னை ஐ.ஐ.டி-யில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் விண்ணப்பிக்க 24.01.2018 கடைசி நாள்! #IIT

ஐ.ஐ.டி (IIT) என்றதும் நமக்கு நினைவில் வருவது, JEE தேர்வும் GATE தேர்வும்தான். சென்னை ஐ.ஐ.டி-யில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்பின் கீழ் பொருளாதாரம், வரலாறு, இலக்கியம், தத்துவம், கொள்கை, பெண்ணியம் போன்ற பாடங்களைப் படிக்க முடியும். இந்தப் படிப்பில் சேர, தற்போது ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள், 24.01.2018. 

IIT

சென்னை ஐ.ஐ.டி-யில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர் வெங்கடராமன் கணேஷிடம் பேசினோம்...

``ஐந்தாண்டு படிப்பு என்பது, பல்துறை சார்ந்த (inter-disciplinary approach) பார்வைகொண்டது. ஆழமான அறிவை உருவாக்குவதற்கான பரந்துபட்ட ஒரு தளத்தை உருவாக்குவதே இந்தப் படிப்பின் நோக்கம். ஒரு விஷயத்தை, சமூக அறிவியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவம் எனப் பலதரப்பட்ட கோணங்களில் அணுகும் முறையில் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளது.

ஐஐடிஇங்கு, சமூக அறிவியலின் உட்பிரிவுகளிலும் இலக்கியங்களிலும் அதிக அளவில் கவனம் செலுத்தப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் இலக்கியம், தத்துவம், மொழியியல், தர்க்கம், வரலாறு, பொருளாதாரம், பெண்ணியம், அரசியலமைப்புச் சட்டம், ஜெர்மன் அல்லது பிரெஞ்சு மொழி (முதல் ஆண்டில் மட்டும்) என அத்தனை படிப்புகளும் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. இதனால் சமூகம் சார்ந்த ஒவ்வொரு பிரச்னையையும் ஆழ்ந்த பார்வையோடும் வரலாற்று நுணுக்கங்களோடும் அணுக முடியும். 

முதல் இரண்டாண்டுகளுக்கு, பொதுவான படிப்புகள் கற்றுத்தரப்படும். மூன்றாம் ஆண்டில், ஆங்கிலப் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களை English Studies பிரிவிலும், மேம்பாட்டுப் பிரிவில் ஆர்வம் உள்ளவர்களை Development Studies பிரிவிலும் பிரிக்கப்படுவர். மாணவர் விருப்பப்பட்டால், ஒரு செமஸ்டரை வெளிநாட்டில் சென்று பயின்று வருவதற்கான வாய்ப்புகளும் இங்கு உண்டு" என்றார். 

தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் ஐ.ஐ.டி-யில் இத்தகைய படிப்பு படிப்பது சிறப்பு. இங்கு படிப்பவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களிலும், உலக வங்கி, ஆசிய வங்கி, பொருளாதார நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் சிலர், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர். மத்திய-மாநில அரசின் மேம்பாடு சார்ந்த, அரசின் கொள்கைகள் சார்ந்த துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. வெளிநாடுகளில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கவும் அதிக அளவில் செல்கின்றனர். நிறைய தேடல்களுடன் `சமூகத்தில் மாற்றங்கள் விதைக்க வேண்டும்' என நினைப்பவர்கள் அனைவருக்கும் ஏற்ற துறை, இது! 

இந்தப் படிப்பில் சேர, ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 15.04.2018 அன்று நுழைவுத்தேர்வு நடைபெறவிருக்கிறது. பொதுப்பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் 2,400 ரூபாய். மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் 1,200 ரூபாய். பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவில் படிப்பவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 

மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே நடைபெறும். நுழைவுத்தேர்வில் வரலாறு, புவியியல், அன்றாட நிகழ்வுகள், பொருளாதாரம், சூழலியல், இலக்கியம், இந்தியக் கலாசாரம், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள், கொள்குறி முறையில் இருக்கும். இந்தத் தேர்வை ஆன்லைனில் எழுத வேண்டும். இதைத் தவிர கூடுதலாக, ஒரு கேள்விக்குக் கட்டுரை வடிவில் பதிலளிக்கவேண்டியிருக்கும். 46 இடங்கள் உள்ளன. மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

மேலும் தகவல்களுக்கு : hsee.iitm.ac.in

Do you like the story?

Please Appreciate the Author by clapping!