வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (06/02/2018)

கடைசி தொடர்பு:12:59 (17/02/2018)

பப்ளிக் எக்ஸாம்... ஆங்கிலத் தாளில் சுலபமாக மார்க் வாங்க சில பிராக்டிகல் டிப்ஸ்! #PublicExamTips

 பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க இருக்கிறது. அதில், ஆங்கிலத் தாளைப் பொறுத்தவரை அர்த்தம் புரிந்து படிக்கிற மாணவர்கள் சுலபமாக மதிப்பெண்களை எடுத்துவிடுவார்கள். 

ஆங்கிலமா என்று பயந்து திணறவேண்டிய அவசியமில்லை. சில சிம்பிள் டிப்ஸ்களை சீக்ரெட்டுகளையும் கடைப்பிடித்தாலே மதிப்பெண் அள்ளலாம் என்கிறார்கள் ஆசிரியர்கள். இனி ஓவர் டு ஆசிரியர்கள்.  

பப்ளிக் எக்ஸாம்

பத்தாம் வகுப்புக்கான வழிமுறைகள்...

விஜயலட்சுமி,  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ண மங்கலம், திருவண்ணாமலை.

1. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்றால், பாடத்தின் முடிவில்  கொடுக்கப்பட்டிருக்கிற மாதிரி வினாக்கள் அனைத்தையும் படித்துத்தான் ஆக வேண்டும் மாணவர்களே. எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் படியுங்கள் போதும்.

2. சிறு (small question-answer) வினாக்களைப் பொறுத்தவரை, முதல் நான்கு பாடங்களில் உள்ள அனைத்துக் கேள்வி-பதில்களையும் படிப்பதோடு, பார்க்காமல் ஒரு தடவை எழுதியும் பார்த்து விடுங்கள். 

3. சில மாணவர்கள் சிறு வினாக்களுக்குக்கூட நெடு வினாக்களைப்போல படங்கள் வரைந்து பதில் எழுதுகின்றனர். அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. இது மொழிப்பாடம்தான். அறிவியல் அல்ல படங்களால் பக்கங்களை நிரப்ப. 

4. பத்தி (paragraph) வினாக்களுக்கு விடை எழுதும்போது, ஒரே ஒரு பத்தியிலோ அல்லது இரண்டு மூன்று சிறு பத்திகளாகவோ எழுதலாம். தற்போது பல பள்ளிகளில் பத்தி வினாவை, நெடு வினா போன்றே பயிற்றுவிப்பதால் பாடத்தின் தலைப்பு, அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், பாடச்சுருக்கம், இறுதியில் நீதி போன்றவற்றை எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது என்பதை நினைவில் வையுங்கள்.

5. செய்யுள் (poem) பகுதியில் ஏதாவது மூன்று செய்யுள்களைக் கட்டாயம் மனனம் செய்திருக்க வேண்டும்.

6. செய்யுளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடை எழுதும்போது, அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வரிகளிலேயேகூட சில நேரம் விடைகள்  ஒளிந்திருக்கும். கவனித்து எழுத வேண்டும். அடுத்து, செய்யுள் பகுதியில் Alliteration, Rhyming words and Rhyme Scheme ஆகிய மூன்று வினாக்களுக்குக் கட்டாயம் விடையளிக்க வேண்டும். Rhyme scheme, rhyming words ஆகியவற்றில் குழப்பம் உள்ள மாணவர்கள் இதற்கான விடைகளை இரண்டு வினாக்களிலும் ஒருசேர எழுதிவிடுங்கள். இதுவே மதிப்பெண்களை இழந்துவிடாமல் இருக்க வழி செய்யும்.

7. துணைப்பாடத்தைப் (non detail) பொறுத்தவரை  35 மதிப்பெண் முழுசாக வேண்டுமென்றால் 7 கதைகளையும் பல முறை படித்துப் பார்த்துவிட்டுச் செல்லுதலே நலம். 

8. அடுத்து, சம்மரைசிங் (summarizing). பல  மாணவர்கள்  Rough copy-ஐ பென்சிலால் அடிக்கும் வழக்கத்தைக்கொண்டிருக்கின்றனர். அது Rough draft என்று தலைப்பிலேயே தெரிந்து விடுகிறது. ஆகவே அதை அடித்துக்  காட்டவேண்டிய அவசியமில்லை. இப்படி அடிக்கும்போது சில நேரங்களில் அவசரத்திலோ, பதற்றத்திலோ நன்கு படிக்கும் மாணவர்கள்கூட Fair copy-ஐ அடித்து விடுகின்றனர், சிலர் இரண்டையும் அடித்து விடுகிறார்கள்.  இது முழுவதுமாக 10 மதிப்பெண்களை இழக்கும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.ஆகவே Rough copy-ஐ பென்சிலால் குறுக்கே  கோடிட்டு அடிக்க வேண்டாம்.

9. விளம்பரம் பற்றிய கேள்விக்குப் பதில் எழுதும்போது,  Outline வரைய வேண்டும். சிலர் வளைவு கோடுகள் போடுகின்றனர். அது அவ்வளவு சிறப்பாகத் தோற்றம் தராது. ஆகவே செவ்வக வடிவில் வரைதல் நலம்.

10.  மொழிபெயர்ப்பு அல்லது படத்தைப் பற்றி ஐந்து வரிகளை எழுத வேண்டிய கேள்விக்கு நிறைய மாணவர்கள் இரண்டையும் எழுதி நேரத்தை வீணடித்து விடுகின்றனர்.  ஏதாவது ஒன்று எழுதினாலே போதும். 

 

பரீட்சை

பன்னிரண்டாம் வகுப்புக்கான வழிமுறைகள்... 

இந்திராணி, இடுவம்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.. 

1. இணைச் சொல்(synonyms) மற்றும் எதிர்ச்சொல் (antonyms) பொறுத்தவரை உங்களுக்கு க்ளூவுடன்தான் கேள்வியே கேட்கப்படும் என்பதால், கேட்கப்பட்டிருக்கிற வார்த்தைகளுக்கு, உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் போதும். 10 மதிப்பெண் லட்டு மாதிரி கிடைத்துவிடும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிற இந்த இரண்டு பகுதி வார்த்தைகளுக்கும், அதனதன் அருகிலேயே அர்த்தம் எழுதி வைக்க வேண்டியதுதான். தெரியாத அர்த்தங்களுக்கு இருக்கவே இருக்கிறது கூகுள். 

2. அடுத்து சிங்குலர், ஃப்ளூரல்...  இதற்கும் க்ளூ தரப்படும். அதைக் கண்டுபிடித்துச் சேர்க்க வேண்டும். உதாரணத்துக்கு, Matrix  என்ற சொல்லின் இறுதியில் வருகிற ix -  எடுத்துவிட்டு, ices சேர்த்து   Matrices எனப் பன்மையாக்க வேண்டும். இப்படியே ஒரு வார்த்தையுடைய ஒருமையின் கடைசியில் வருகிற us, on போன்ற எழுத்துகளுக்குப் பதிலாக என்ன பன்மை சேர்க்க வேண்டும் என ஓரளவுக்கு மனப்பாடம் செய்துவிட்டீர்கள் என்றால்கூட, க்ளூவைப் பார்த்தவுடன் ஞாபகம் வந்துவிடும்.

3. எஸ்ஸே மற்றும் பாராகிராப் கேள்வி பதில்களில் முழு மதிப்பெண் பெற முதல் மூன்று யூனிட்களை முழுமையாகப் படித்துவிடுங்கள்.

4. முதல் மூன்று poem-களை அதன் அர்த்தம், எழுதியவர் பெயர் எனச் சகலத்துடன் படித்து வையுங்கள். மனப்பாடப் பகுதி, ERC என இரண்டையும் கவர் செய்துவிடலாம். 

5.  ஆங்கில முதல் தாளில் வருகிற கிராமரைப் பொறுத்தவரைக் கடந்த 10 வருடங்களில் திரும்பத் திரும்ப எவற்றையெல்லாம் கேட்டார்களோ அவற்றையெல்லாம் அரை நாள் ஒதுக்கி உங்களுக்கு நீங்களே டெஸ்ட் வைத்துக்கொள்ளுங்கள். 

6. துணைப்பாட  எஸ்ஸேவில் மார்க் எடுக்க முதல் 4 யூனிட் படித்தாலே போதும். இதை வைத்தே ஆங்கிலம் இரண்டாம் தாளில் வருகிற spot the errors பகுதியிலும் முழு மதிப்பெண் எடுத்துவிடலாம்.

 

எக்ஸாம்

7. ஜாப் அப்ளிகேஷன் பகுதியில் மாணவர்களைப் பற்றிய விபரங்கள் அதாவது,  பெயர், ஊர், வயது, கல்வித்தகுதி, சிங்கிள், பெற்றோர் பெயர், முகவரி, போன் நம்பர், மெயில் ஐடி. என்பது போன்ற 10 தகவல்களை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதினாலே 10 மதிப்பெண் கிடைத்துவிடும். 

8. மேப் பற்றிய கேள்விக்கு, go straight, turn right or left, and find the way மூன்று வரிகளை எழுத்துப்பிழையில்லாமல் எழுதினாலே முழு மதிப்பெண் நிச்சயம். 

9. கடைசியாக ஜெனரல் எஸ்ஸேக்கள். சயின்ஸ், சோஷியல் அவேர்னஸ், பர்சனல் என மூன்று வகைத் தலைப்புகள் தருவார்கள். இதில் சயின்ஸ் தலைப்பின் கீழ் மொபைல் பற்றி எழுதலாம். பர்சனல்  தலைப்பின் கீழ் மை ஹாபி, மை ட்ரீம் என்பதுபோல எழுதலாம்.  சோஷியல் அவேர்னஸின் கீழ் காந்திஜி பெண்கள் பற்றி பேசியுள்ள பாயின்ட்களை எழுதலாம். இதற்கு மாணவர்கள் தனியாகப் படிக்க வேண்டியதில்லை. பாயின்ட் நம்பர் மூன்றில் முதல் மூன்று பாடங்களை முழுதாகப் படியுங்கள் என்று சொன்னேன் இல்லையா? அதில் இரண்டாவது பாடத்தில் காந்திஜி பெண்கள் பற்றிப் பேசிய கருத்துகள் இருக்கின்றன. அதை ஏற்கெனவே படித்திருப்பீர்கள் அல்லவா? அதை அப்படியே இதற்கும் பயன்படுத்தி விடுங்கள். 10 மதிப்பெண்கள் அப்படியே வந்துவிடும்.

பொதுத்தேர்வில் எளிதாக ஸ்கோர் அடிக்க  சில டிப்ஸ்!