குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது...!வரலாற்று சாதனையாக 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது.

TNPSC


தமிழகம் முழுவதும் 301 தாலுகா மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. 6,962 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வாணைய வரலாற்றிலேயே சாதனை நிகழ்வாக இந்தத் தேர்வை 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் எழுதவிருக்கிறார்கள். தேர்வுப் பணிக்காக 1.25 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்பப்பாடம், தேர்வுக் கூடத்தின் பெயர் ஆகியவை அச்சிடப்பட்ட விடைத்தாள் இந்தத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் முறைகேடுகள், தவறுகள் குறையும். தேர்வு முடிவுகள் வெளியிட ஆகும் கால அவகாசமும் கணிசமாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடும் கட்டங்களின் எண்ணிக்கைப் பற்றிய விவரத்தைக் குறிப்பிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நேரம் முடிந்த பின்னர் கூடுதலாக 5 நிமிடம் கால அவகாசம் வழங்கப்படும். 

தேர்வுக்கூட நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன், கால்குலேட்டர், புத்தகங்கள் போன்றவற்றை தேர்வுக்கூடத்துக்குள் கொண்டுசெல்ல அனுமதியில்லை. கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவற்றையும் அணியக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தேர்வர்களிடம் முழு பரிசோதனை செய்யப்படும். நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தேர்வை சென்னையில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் எழுதுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!