Published:Updated:

”அழகப்பா இது அழகாப்பா?” - அண்ணா முதல் பாரதியார் வரை, பல்‘கொள்ளைக்’ கழகங்களின் கதை! பகுதி-2

”அழகப்பா இது அழகாப்பா?” - அண்ணா முதல் பாரதியார் வரை, பல்‘கொள்ளைக்’ கழகங்களின் கதை! பகுதி-2
”அழகப்பா இது அழகாப்பா?” - அண்ணா முதல் பாரதியார் வரை, பல்‘கொள்ளைக்’ கழகங்களின் கதை! பகுதி-2

”அழகப்பா இது அழகாப்பா?” - அண்ணா முதல் பாரதியார் வரை, பல்‘கொள்ளைக்’ கழகங்களின் கதை! பகுதி-2

மிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. இன்றைக்குக் கல்வியின் தரத்தைத் தாழ்ந்த தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். பணம் கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்கிற நிலைமை பல்கலைக்கழகங்களில் உண்டு என்பது ஊரறிந்த உண்மையாகப் போய்விட்டது. கல்விதான் இப்படியென்றால் பேராசிரியர்கள் பணியிடங்கள்முதல் துணைவேந்தர் பதவிவரைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்த ஊழலுக்கு, ஊனும் உடலுமாக இருப்பவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிகளின் இயக்குநர்கள், செனட் கமிட்டி துணைவேந்தர்கள் தேர்வுக் குழுவினர். இவை எல்லாவற்றையும்விட ஆளுநர் அலுவலகம் வரைக்கும் லஞ்சம் நீண்டுகொண்டே போகிறது. அந்த அளவுக்குத் தமிழகத்தில், கல்வி பணத்துக்காக விற்கப்படும் பெட்டிக்கடைகள்போல் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புரோக்கர்களை வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கைக்குப் பிறகாவது பல்கலைக்கழகங்கள் சுத்தம் செய்யப்படுமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது. இந்தப் பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இருக்கிறதா என்கிற கோணத்தில் நாம் விசாரணையில் இறங்கினோம்.

அழகப்பா பல்கலைக்கழகம்:

''ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை  மாவட்ட மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக வள்ளல் அழகப்பா செட்டியார், தன்னுடைய சொத்துகளைக் கொடுத்து இந்தப் பகுதி மக்களுக்காக அறிவுக் கண்ணைத் திறந்தார். 1947-ம் ஆண்டு அழகப்பா செட்டியார் கல்வி அறக்கட்டளை சார்பாக அரசினர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 440 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அழகப்பா பல்கலைக்கழகம் 1985-ம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரி தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 226 ஆசிரியர்களும் 222 ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். பல துணைவேந்தர்களை இந்தப் பல்கலைக்கழகம் பார்த்திருந்தாலும் தற்போது துணைவேந்தராக இருக்கும் சுப்பையா பதவியேற்றபிறகு இப்பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறது. 

அதாவது, ‘ஏ’ ப்ளஸ் தகுதி. கடலுக்குள் மூழ்கிய பூம்புகாரைக் கண்டுபிடிக்கக் கீழடி அகழ்வாராய்ச்சி போன்று கடலுக்குள் கண்டுபிடிப்பது. தொண்டியில், கடல்சார் டூரிஸம் டெவலப்மென்ட் அதன் விரிவாக்கம்: கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து புதிய துறைகள். அதாவது, கணிதத் துறை மற்றும் கடலியல் மற்றும் கடலோரவியல் துறையும், மத்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்பு நிதியாகச் சுமார் 90 லட்சம் ரூபாய் பெறப்பட்டிருக்கிறது. உயிரித் தொழில்நுட்பத் துறைக்கு ஐ.டி.சி. கொல்கத்தா மற்றும் டேப்லெட் இந்தியா லிமிடெட் சென்னை நிறுவனங்கள் ஆலோசனை திட்ட ஆய்வுக்காக 142 லட்சம் ரூபாய் பெறப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் நூலகம், தமிழர் பண்பாட்டு மையம், மியூசியம் உள்ளிட்டவற்றை அமைத்திருக்கிறார்.

     மத்திய அரசு  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் செம்மையினை ஊக்குவிப்பதற்காக 7 கோடி ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம், தமிழ்ப் பண்பாட்டு மையம், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், இத்தாலி, மெக்ஸிகோ ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிஜிட்டல் நூலகம், எக்கோ பார்க், மாற்றுத்திறனாளிக்கான வளப்பள்ளி, பல்கலைக்கழக அறிவியல் ஆய்வு உபகரணங்கள் மையம் இதுபோக அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கட்டடங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இந்தப் பல்கலைக்கழகமும் ஒன்று என்பதால், தற்போதுகூட மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவே டெல்லி சென்றிருக்கிறார் சுப்பையா. இவருக்கும், இன்னும் துணைவேந்தர் பதவி ஆறுமாதங்களே இருக்கிறது. இதற்குள்ளாகவே இருக்கும் அனைத்து வகையான டெண்டர்களையும் விடுவதற்கு அசுரவேகத்தில் வேலை நடக்கிறது. இதில் எல்லாம் சுப்பையாவுக்குப் பணம் கொட்டக் காத்திருக்கிறது. இது தவிர, வேறுசில முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இவற்றை மத்திய விசிலென்ஸ் ஆய்வு செய்ய வேண்டும் என்று புகார்கள் அனுப்பப்பட்டுவருகிறது'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

யார் இந்த சுப்பையா?

 இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் பட்டமங்கலம் கிராமம். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அசுர வேகத்தில் துணைவேந்தர் பொறுப்பில் அமரும் அளவுக்கு வந்ததற்குக் காரணம் அவருடைய படிப்பே. கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்துவிட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாளராகச் சேர்ந்தார். தோள் கொடுப்பான் தோழன் என்பதுபோல் இவரது நண்பரான தங்கமூர்த்தி, புதுக்கோட்டை அருகே திருகோகர்ணம் என்கிற இடத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். சுப்பையா துணைவேந்தர் பதவியை எட்டிப்பிடித்து உயர்வதற்கு ரோடு போட்டுக் கொடுத்தவர் தங்கமூர்த்திதான். புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தவருக்கு இன்றைக்குக் கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்தது எப்படி என்கிற கேள்வியும் கேட்கப்படுகிறது.

துணைவேந்தரானது எப்படி? 

''நாககுடியைச் சேர்ந்த வழக்கறிஞர்; சண்முகம். இவர் மகன் துணை ஆட்சியராக இருக்கிறார். இந்தக் குடும்பம் சசிகலாவுக்கு நெருக்கமான உறவு. இந்த உறவைப் பயன்படுத்திக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராக வந்து அமர்ந்தார். அதற்கு தட்சணையாக 7 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. பல்கலைக்கழகத்துக்குள் தன்னை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்கள் டம்மியாக்கப்பட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த மாணிக்கவாசகம், இந்தப் பல்கலைகழகத்துக்குத் துணைவேந்தராக வருவதற்கு முயற்சி செய்தார். ஆனால், விசி ரேசில் கிடைக்கவில்லை. துணைவேந்தராக சுப்பையா வந்தபிறகு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் தாங்க முடியாமல் மாணிக்கவாசகம் பதிவாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தமிழ்த் துறையின் பேராசிரியர் பாண்டிக்கும் துணைவேந்தருக்கும் டக் ஆஃப் வார் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டி, பல்கலைக்கழகத்துக்குள் சாதிச் சங்கம் நடத்துகிறார். இவருக்குப் போட்டியாகத் துணைவேந்தர் பதவி தனக்கு சப்போர்ட்டிவாக இருக்க... தன்னுடைய சாதிச் சங்கங்களைப் பல்கலைக்கழகத்துக்குள் உலாவவிடுகிறார். பல்கலைக்கழகத்துக்குள் சாதி தலைவிரித்தாடுகிறது.

பண மதிப்பிழப்பு வந்த நேரத்தில் காரைக்குடி கோல்டன் சிங்கர் ஹோட்டலில் பழைய ரூபாய் நோட்டுகள் ஒன்றரைக் கோடி பிடிபட்டது. போலீஸார் விசாரணையின்போது அமராவதி புதூரில் இயங்கிவரும் ராஜராஜன் இன்ஜினீயரிங் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்தவர் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், இந்தக் கல்லூரியின் பங்குதாரர்களில் ஒருவராக இருப்பவர் துணைவேந்தர் சுப்பையா என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இவருடைய பணத்தைக் கல்லூரி வழியாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் என்றெல்லாம் அந்த நேரத்தில் பேச்சுகளாக இருந்தது. அந்தப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இவர் துணைவேந்தராக வந்தபிறகு போடப்பட்ட பணியிடங்கள் உதவிப் பேராசிரியர் வரைக்கும் இருபது லட்சம் முதல் முப்பது லட்சம் வரைக்கும் பணம் கொடுத்துத்தான் வேலை வாங்கியிருக்கிறார்கள். இவர், பணம் நேரடியாக வாங்குவதில்லை. பல பிரிவுகளாகப் பிரித்து அவர் கொடுக்கச் சொல்லும் இடத்தில் கொடுத்தால் வேலை உறுதி. இவர், இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக வந்தபிறகு பல்கலைக்கழகம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடிப்படைக் கட்டமைப்புகள், புதிய திட்டங்கள், புதிய துறைகள் என உருவாக்கி அதன்மூலம் சம்பாதித்தவர் இவர். அடிப்படைக் கட்டமைப்பு, பல்கலைக்கழகம் வளர்ச்சி என இதன்மூலமாகச் சம்பாதித்திருக்கிறார்'' என்கிறார்கள் பல்கலைக்கழக அதிகாரிகள்.

கேன்டீன் 

''துணைவேந்தராகப் பொறுப்பேற்றதும் கேன்டீனை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படி டெண்டர்வைத்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வருடம் செல்லச்செல்ல கேன்டீன் துணைவேந்தருக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம், தரமில்லாத உணவு கொடுக்கிறார்கள். இவரைப்போல பல்கலைக்கழகத்தைக் கட்டிப்போட்டவர்கள் பட்டியலில் எந்தத் துணைவேந்தரும் கிடையாது. மாணவர்களில் ஆரம்பித்து இப்பல்கலைக்கழக நிரந்தர வேந்தர் குடும்பம் வரைக்கும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார் சுப்பையா'' என்கின்றனர் கல்லூரியாசிரியர்கள்.

அடுத்த கட்டுரைக்கு