வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (24/02/2018)

கடைசி தொடர்பு:10:24 (24/02/2018)

பெல்ட், காலணி இல்லாமல் தேர்வு அறைக்குள் நுழைய வேண்டும்...! தேர்வுத்துறை கெடுபிடி

பொதுத்தேர்வுக்காக தீவிரமாகப் படித்து வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் -1 மற்றும் பிளஸ் - 2  மாணவர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தேர்வுத்துறை.

தேர்வுத்துறை


பிளஸ் - 2 மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரையும், பிளஸ் - 1 மாணவர்களுக்கு மார்ச் 7-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 16-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 16-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. மூன்று வகுப்புகளில் இருந்தும் பொதுத்தேர்வு எழுதுபவர்கள் 27 லட்சம் பேர். இவர்களுக்கு, நேற்று முதல் பள்ளிகளில் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வு நுழைவுச்சீட்டிலேயே தேர்வறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகளை அறிவித்துள்ளது தேர்வுத்துறை. 

`தேர்வு அறைக்குள் நுழையும்போது ஹால் டிக்கெட் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஷூ, பெல்ட், காலணி, இல்லாமல்தான் தேர்வு அறைக்குள் நுழைய வேண்டும். தேர்வு அறைக்கு செல்போன் உள்ளிட்ட எந்தவிதமான மின்சாதனங்களையும் எடுத்து வரக்கூடாது. நேரத்தை மட்டும் காட்டக்கூடிய சாதாரண கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்து வரலாம். தேர்வு எழுதும்போது, ஸ்கெட்ச் பேனா அல்லது வண்ண பென்சில்களைப் பயன்படுத்தி எழுதவோ, அடிக்கோடிடவோ கூடாது. 

மாணவர்கள் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களைக் கிழிக்கவோ அல்லது தனியாகப் பிரித்து எடுத்துச்செல்லவோ கூடாது. தேர்வில், மாணவர்கள் துண்டுச்சீட்டு வைத்திருந்து, பார்த்து எழுதினாலோ, பிற மாணவர்களின் தேர்வுத்தாளை பார்த்து எழுதி பிடிபட்டாலோ, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் காவல்துறையில் பிடித்துக் கொடுக்கப்படுவார்கள்' என்று அறிவுரை வழங்கியுள்ளது தேர்வுத்துறை.

தேர்வுத்துறை

இதுதவிர, தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் குறித்தும் தனியே ஆலோசனை வழங்கி இருக்கிறது தேர்வுத்துறை. இதில், தேர்வு எழுதும் இடத்திலும், நாற்காலிக்கு அருகிலும் எந்தவிதமான துண்டுச்சீட்டுகள் இல்லை என்பதைத் தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்வுக்கு வராதவர்களின் இடம் காலியாகவே இருக்க வேண்டும். அந்த இடத்தில் மற்ற மாணவர்கள் அமர்ந்து தேர்வெழுதக் கூடாது. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர்ந்து தேர்வெழுத வேண்டும். 

தேர்வு தொடங்கும்போது, தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள பக்க எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் பக்கங்கள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளின், முதன்மைப் பக்கத்தில் தேர்வு எழுத உள்ளவரின் புகைப்படம், பெயர், தேர்வுப் பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்த பின்பே தேர்வு எழுத ஆரம்பிக்க வேண்டும். 

தேர்வு எழுதுபவர்கள் விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது பெயரையோ, தேர்வு எண்ணையோ எழுதக் கூடாது. கணித அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, விடையைக் கண்டறிய விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்படுகிறது என்ற விவரத்தைக் கடைசி இரண்டு பக்கங்களை எழுதும்போதே தேர்வு அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் கால விரயம் தவிர்க்கலாம்.

ஐந்து வினாக்களுக்குப் பதிலளியுங்கள் என்று அறிவுறுத்தும்போது, ஆறு கேள்விகளுக்கு பதிலளித்து ஒரு கேள்விக்கான பதிலை ஓவர் சாய்ஸில் எழுதி, பின்னர் விடைகளைக் கோடிட்டு அடிக்கும்போது, ‘மேற்கண்ட விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவினால் எழுத வேண்டும். இவ்வாறு அடிக்கும்போது, தேர்வு எழுதுபவரின் பெயரோ, அல்லது கையெழுத்தோ, தேர்வு அறைக்கண்காணிப்பாளரது கையொப்பமோ எதுவும் விடைத்தாளில் இடம்பெறக் கூடாது. 

தேர்வுத்துறை பொதுத்தேர்வு

தேர்வு எழுதிய பின் திருப்தியில்லாமல், ஒரு சில மாணவர்கள் விடைத்தாளின் அனைத்துப் பக்கங்களையும் கோடிட்டு அடித்துவிட்டுத் தேர்வு அறையிலிருந்து வெளியேறி விடுகின்றனர். இன்னும் சில மாணவர்கள், ஒரு சில விடைகளை மட்டும் அடித்துவிடுகின்றனர். இதுபோன்று செய்பவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கவும், அடுத்த ஓராண்டுக்கு தேர்வு எழுதத் தடை விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், தேர்வுத்தாளில் எந்தவிதமான குறுக்குக் கோடிட்டு அடித்தலைத் தவிர்ப்பது நல்லது. விடைத்தாளில், விடைகள் எழுதாத பக்கங்கள் இருந்தால், அதனைக் குறுக்குக் கோடிட்டு நிரப்ப வேண்டும்' என்று அறிவுறுத்தியிருக்கிறது தேர்வுத்துறை. 


டிரெண்டிங் @ விகடன்