வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (26/02/2018)

கடைசி தொடர்பு:20:10 (26/02/2018)

``தாய்மொழிவழிக் கல்வியே அவசியம்!'' - புதிய கல்விக்கொள்கைக் குழு முன்னாள் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் மறைவு!

புதிய கல்விக்கொள்கையைப் பரிந்துரை செய்யும் குழுவின் முன்னாள் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் (79) ஐ.ஏ.எஸ்., டெல்லியில் மரணமடைந்தார். இவர், புதிய கல்விக்கொள்கையைப் பரிந்துரை செய்ய 2015-ம் ஆண்டு மனிதவளத் துறையில் ஏற்படுத்தப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக இருந்தவர். மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கல்வி

2016-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசுக்கு 90-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை வழங்கினார். இவர், வழங்கிய பல பரிந்துரைகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்புடையதாக இல்லாததால், பரிந்துரைகளை வெளியிடுவதில் காலம் தாழ்த்தியது மனிதவளத் துறை. 

`மத்திய அரசு பரிந்துரைகளை வெளியிடவில்லை என்றால், நானே அவற்றை வெளியிடவேண்டியிருக்கும்' என்று சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய பிறகே, மத்திய அரசு பரிந்துரைகளை இணையதளத்தில் வெளியிட்டது. 

டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன், தஞ்சாவூரில் பிறந்தவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்டமும், இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரியிலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி படித்திருக்கிறார். இந்திய ஆட்சிப்பணியில் தேர்வாகி உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றியவர். 1996-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை மத்திய அரசின் கேபினேட் செயலாளராகப் பணியாற்றினார். முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும், மத்திய அரசின் கைத்தறித் துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் மதிப்புமிகு செயல் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

மத்திய அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு, சிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார். 2015-ம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கைக்கான பரிந்துரைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பரிந்துரைகள், கல்வியாளர் மற்றும் அரசியல் கட்சியினரிடம் ஆதரவையும் எதிர்ப்பையும் உருவாக்கின.

டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் வழங்கிய பரிந்துரைகளில் மிக முக்கியமானவை:

ஐ.ஏ.எஸ் பணியைப்போலவே, இந்தியன் எஜுகேஷன் சர்வீஸ் (Indian Education Services) என்ற பெயரில் கல்விக்கு என தனியே ஒரு துறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். 

உள்நாட்டு வளர்ச்சியில் கல்விக்காக 6 சதவிகித நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள், தகுதித்தேர்வின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் தேர்வுசெய்வதற்கான வழிமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். 

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்னரே அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தலுக்கான சிறப்புப் பயிற்சி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பயிற்சிச் சான்றிதழை, பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் தேர்வு எழுதி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசும் மாநில அரசும் மழலையர் பள்ளிக்கான பாடத்திட்டத்தையும் கொள்கைகளையும் வகுக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை அந்தந்த மாநில மொழியிலேயே பாடங்களை நடத்தலாம். அதன் பிறகு பிறமொழிகளில் அனுமதிக்கலாம். மாநில மொழி, ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிக்கொள்கையைக் கடைப்பிடிக்கலாம். 

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்குத் தேர்வைக் கொண்டுவர வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் தேசிய அளவில் திறன்தேர்வு நடத்திட வேண்டும். வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுக் கல்வி வழங்க வேண்டும். 

மதிய உணவுத்திட்டத்தை, மேல்நிலை வகுப்புகளுக்கும் நீட்டிக்க வேண்டும். கல்விப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். வெளிநாட்டில் சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களின் வளாகங்களை இந்தியாவில் தொடங்க அனுமதி வேண்டும் போன்ற பல பரிந்துரைகள் இவரால் முன்வைக்கப்பட்டன. இவை குறித்த பல்வேறுவிதமான கருத்துகளும் எழாமல் இல்லை. ஆயினும் இவரின் கருத்துகளும் பரிந்துரைகளும் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்