வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (02/03/2018)

கடைசி தொடர்பு:15:58 (02/03/2018)

சர்வர் கோளாறு... விடைத்தாள் ஸ்கேனிங்... `செட்' தேர்வில் முறைகேடு? #StateEligibilityTest

கடந்த இரண்டு ஆண்டுகளாக `செட்' (State Eligibility Test) தேர்வை நடத்திவருகிறது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம். இந்தத் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், பல முறைகேடுகள் நடப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

அன்னை தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வு

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் திறனறிவுத் தேர்வில் (NET) தேர்ச்சி பெறுபவர்கள் விரிவுரையாளர்களாகவும், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசின் உதவித்தொகையுடன் ஆய்வை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தேசியத் திறனறிவுத் தேர்வைப்போல, மாநிலத் திறனறிவுத் தேர்வு (State Eligibility Test) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சிமுறையில் நடத்திவருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் `செட்' தேர்வை நடத்திவருகிறது. இந்த ஆண்டு, மார்ச் மாதம் 4-ம் தேதி செட் தேர்வு நடக்கவுள்ளது. 

செட் தேர்வை நடத்த அனுமதி கிடைத்த நாளிலிருந்தே அன்னை தெரசா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. 2015-ம் ஆண்டு, அன்னை தெரசா பல்கலைக்கழகம் முதல்முறையாக செட் தேர்வை நடத்தி தேர்வு முடிவை வெளியிட்டபோது, தேர்ச்சி பெற்றவர்களின் பெயரை வெளியிடவில்லை. இதனால், இரண்டாவது முறை தேர்வு நடத்தியபோது, தேர்வு முடிவுகள் வெளியானவுடன் உயர்கல்வித் துறை தலையிட்டு தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலைக் கேட்டு வாங்கிக்கொண்டதாகச் சொல்கின்றனர். 

இதுகுறித்து நெட் - செட் அசோசியேஷன் சங்கத்தின் ஆலோசகர்களாக உள்ள நாகராஜனிடமும் சுவாமிநாதனிடமும் பேசினோம்... 

முனைவர் நாகராஜன், ``அரசு பாலிடெக்னிக்கில் உள்ள காலி இடங்களுக்கான 1,058 விரிவுரையாளர்களைத் தேர்வுசெய்ய, தமிழக ஆசிரியர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் விடைத்தாளில் (ஓம்.எம்.ஆர் ஷீட்) மாற்றம் செய்து மதிப்பெண் கூட்டி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளாக, செட் தேர்வை எத்தனை பேர் எழுதினார்கள், அதில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை என்ன, அதில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றவர்கள் என்ற விவரத்தை வெளியிட பல முறை கேட்டும் இதுவரை வெளியிடாமல் இழுத்தடித்துவருகிறது அன்னை தெரசா பல்கலைக்கழகம். ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களிலிருந்து 15 சதவிகிதம் பேரை மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கிறது. இதுபோன்ற எந்த விதிமுறையையும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தும் செட் தேர்வில் கடைப்பிடிப்பதில்லை. 

நாகராஜன்அனைத்துத் தேர்வு முடிவுகளும் அனைவரும் பார்க்கும்வகையில் இருக்கும். ஆனால், செட் தேர்வில் மற்ற மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிடாமல் மறைத்துவருகிறார்கள். அனைத்துத் தேர்வுகளிலும் தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளோடு விடைத்தாளின் கார்பன் காப்பியும் வழங்கப்படும். இதற்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய செட் தேர்விலும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தும் செட் தேர்வில் கேள்வித்தாளையே திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர். 

தேர்வு விடைத்தாளான ஓ.எம்.ஆர் தாளைத் (Optical Mark Recognition) திருத்தி முடித்தவுடன் அந்தத் தாளை ஸ்கேன்செய்து பதிவேற்றிவிடுவது வழக்கம். ஆனால், செட் தேர்வின் விடைத்தாளைப் பதிவேற்றுவதுமில்லை. மற்றவர்கள் மதிப்பெண்ணை யாரும் பார்க்காத வகையில் மொபைலில் ரகசிய எண்ணை அனுப்பி அதன் பிறகே மதிப்பெண்ணைப் பார்க்கும்வகையில் மாற்றி அமைத்திருக்கின்றனர். இதனால், தகுதி பெறாதவர்களையும் தகுதிபெற்றவர்களாக மாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. 

தேர்வை நடத்தவும் தேர்வு முடிவை வெளியிடவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நெட் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தரவரிசைப்படுத்தப்பட்டு அதில் 15 சதவிகிதம் பேரைத்தான் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பார்கள். ஆனால், செட் தேர்வில் 15 சதவிகிதம் என்பதை நிர்ணயிக்காமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துவருகிறார்கள். இனியாவது, முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முடிவுகளை அறிவிக்க வேண்டும்" என்றார். 

முனைவர் சுவாமிநாதன், ``இந்தியா முழுவதும் பல்கலைக்கழக மானியக் குழு நெட் தேர்வை நடத்திவரும்போது, செட் தேர்வை நடத்தவேண்டிய அவசியமில்லை. இந்த ஆண்டு, அன்னை தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வுக்கான விண்ணப்பத்தை இணையவழியே வழங்கியபோது, `வருமானச் சான்றிதழ் விவரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்' என அறிவித்தது. பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வில்கூட வருமானச் சான்றிதழ் கேட்கப்படாத நிலையில், செட் தேர்வில் கேட்கப்படவேண்டிய அவசியம் என்ன?

சுவாமிநாதன்செட் தேர்வின் மூலம்,  அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், தேர்வு எழுதுபவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழகம் எந்த வசதியையும் செய்வதில்லை. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, `சர்வர் பிரச்னை' எனக் கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையைக் கருத்தில்கொண்டு விண்ணப்பிக்க ஒன்றிரண்டு நாள்கள் நீட்டிருத்திருக்கலாம். ஆனால், அதுபோல்  நீட்டிக்கவுமில்லை. தேர்வுக்குத் தேவையான வினாத்தாளை பல்கலைக்கழகம் தயாரிப்பதற்குப் பதில், வெளிநபர்களின் உதவியுடன்தான் தயாரிக்கப்படுகிறது.

`ஓ.எம்.ஆர் வடிவிலான விடைத்தாளைத் திருத்துவதற்கு வெளி நிறுவனத்தை அணுக மாட்டோம்' என்று தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்த முடிவின்படி, செட் தேர்விலும் வெளி நிறுவனத்தை அணுகாமல் தேர்வு முடிவை வெளியிட வேண்டும். மேலும், செட் தேர்வு முடிந்தவுடன்  கேள்வித்தாளை தேர்வு எழுதியவர்கள் எடுத்து வரவும் அனுமதிக்க வேண்டும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்