Published:Updated:

பள்ளி மாணவர்களும் வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டும்..! வங்கி மேலாளர் அறிவுரை

பாலஜோதி.ரா
பள்ளி மாணவர்களும் வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டும்..! வங்கி மேலாளர் அறிவுரை
பள்ளி மாணவர்களும் வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டும்..! வங்கி மேலாளர் அறிவுரை

படிக்கும்போதே மாணவர்களாகிய நீங்கள் வங்கித் தொடர்பான பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போதே வங்கியில் உங்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்கவேண்டும் என்று வங்கி மேலாளர் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலுள்ள பிற்படுத்தப்பட்ட, வசதியற்ற, நன்றாக படிக்கின்ற மாணவிகளைத் தேர்ந்தெடுத்து இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பிற மாணவ மாணவிகளையும் மனரீதியில் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் முன்னிலையிலேயே அந்த ஆறு மாணவிகளுக்கும் தொகை வழங்கும் நிகழ்ச்சி அந்தப்  பள்ளி வளாகத்திலேயே  நடைபெற்றது. ஒவ்வொரு மாணவிக்கும் ரூபாய் 5,000 வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் துரைசாமி தலைமை தாங்கி பேசும்போது, "ஒருவருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றி, அவரை அந்தஸ்து மிக்க மனிதராகவும் பெரிய வெற்றியாளராகவும் சாதனையாளராகவும் மாற்றுவது கல்வி மட்டும்தான். அதனை வலியுறுத்தும் விதமாகத்தான் 'பிச்சைப்புகினும் கற்கை நன்றே'னு ஔவ்வை மூதாட்டி கூறி இருக்கிறார். படிப்புக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது. இன்றைய பொருளாதார உலகில் அடிப்படைக் கல்வி கற்பதற்கு எந்த வகையிலும் தடைகள் வருவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. தகுதியும் திறமையும் உள்ள மாணவர்களுக்கு படிக்க உதவுவதற்கென்றே வங்கிகள்  தயாராக இருக்கின்றன. அதனை மாணவர்கள் சரியான வழிகாட்டுதல்களுடன்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

கனரா வங்கியின்  மேலாளர் மணிமாறன் பேசும்போது மாணவ, மாணவிகளுக்கு சேமிப்பின் அவசியத்தை குறித்து வலியுறுத்தினார். "பள்ளி மாணவர்களுக்காக எங்கள் வங்கி சேவை செய்ய தயாராக இருக்கிறது. இப்போதே நீங்கள் வங்கிகளுக்கு உங்கள் அப்பாவுடனோ. அம்மாவுடனோ சென்று வங்கி குறித்த பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பணம் எடுக்க, செலுத்த படிவங்களை எப்படி நிரப்பவேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்க எங்கள் வங்கி துரிதமாக செயல்பட்டு வருகிறது. ஆகவே, மாணவர்களாகிய நீங்கள் இப்போதே உங்களுக்கான கணக்கைத் தொடங்கி, அதில் பணத்தைச் சேமிக்கப் பழகுங்கள் " என்று அறிவுரை கூறினார்.