வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (17/03/2018)

கடைசி தொடர்பு:19:21 (17/03/2018)

'ஜிமிக்கிக் கம்மல்' பாடல் மெட்டில் வாய்ப்பாடு... ஆசிரியர்களிடையே வைரலாகும் வீடியோ #CelebrateGovtSchool

அரசுப் பள்ளி

ஒரு மாணவர் கற்றுக்கொள்ளும் விதம், குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் மாற்றமடைந்தவாறே இருக்கும். இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆசிரியரே, கற்பிப்பதில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறார். காட்சி ஊடகங்களின் தாக்கம் சமூகத்தில் பரவலாக உள்ளது. அதன் வீச்சு மாணவர்களிடம் சற்று கூடுதலாகவே உள்ளது. இதை நன்கு உணர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், ப.சக்திவேல். கற்பித்தல் முறையில் புதிய வழியைக் கையாளுகிறார்.

சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் உள்ளது, பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்தின் மாமாஞ்சி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர், ப.சக்திவேல். பாடங்களைப் பாடல்களாக மாற்றி, வீடியோவாக எடுத்து, மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறார். அவரின் முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. 

அரசுப் பள்ளி

"மாமாஞ்சி ரொம்பவே உள்ளடங்கிய கிராமம். எளிமையான குடும்பப் பிள்ளைகளே இந்தப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்களின் வருங்கால வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமையப்போகும் கல்வியைக் கற்றுத்தரும் பொறுப்பில் மிகவும் கவனமாக இருக்கிறேன். பாடத்தைப் புரிந்து படிப்பது மிகவும் முக்கியம். எனவே, அவர்களை அந்தப் பாடத்தை நோக்கி ஈர்க்க, ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். நான் கணித ஆசிரியர். அதன் அடிப்படையான வாய்ப்பாட்டைத் தினமும் இரண்டு மணி நேரம் நடத்தினேன். ஆரம்பத்தில் சில மாணவர்கள் சுணங்கினாலும், ஓரிரு நாளில் ஆர்வம் வந்துவிட்டது. 20 வாய்ப்பாடுகளை நேராகவும் தலைகீழாகவும் சொல்லப் பழகிவிட்டனர். 

 

 

பாடங்களை வீடியோவாக மாற்றினால் எப்படி இருக்கும் என ஒருநாள் யோசனை வந்தது. ஒரு பாடத்தை எடுத்து, மாணவர்களையே நடிக்கவைத்து வீடியோவாக்கினேன். அதை மற்ற மாணவர்களிடம் திரையிட்டுக் காட்டியதும் ஆர்வமானார்கள். பாடம் சம்பந்தமாக நிறையச் சந்தேகங்களை எழுப்பி, தெளிவுப் பெற்றார்கள். வீடியோவில் நடித்த மாணவர்களுக்கும், தாங்கள் நடிக்கும் பாடத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் வந்தது. மற்ற மாணவர்களும் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். அது, பாடத்தை உற்சாகமாகவும் ஈடுபாட்டுடனும் படிக்க பெரிய அளவில் உதவுவதைத் தெரிந்துகொண்டேன். 

இப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களை, எங்கள் பள்ளிப் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி பதிந்து வருகிறேன். அதைப் பார்ப்பவர்களின் கருத்துகளையும் உள்வாங்கி இன்னும் செழுமையாக்குகிறேன். உதாரணமாக, 'ஜிமிக்கிக் கம்மல்' பாடல் ஹிட்டானபோது, அந்தப் பாடலின் மெட்டில், பன்னிரண்டாம் வாய்ப்பாட்டை உருவாக்கினேன். இணையத்தில் கிடைக்கும் அனிமேஷன் காட்சிகளைக்கொண்டு வீடியோவாக்கினேன். அதை மாணவர்களிடம் போட்டுக் காட்டினேன். எட்டாம் வாய்ப்பாட்டுக்கே தடுமாறுபவர்கள்கூட, பன்னிரண்டாம் வாய்ப்பாட்டை தெளிவாகச் சொல்ல, அதாவது பாடினார்கள். அது ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குரூப்களில் வைரலாகி வருகிறது. எனது இந்தப் பணியில் ஒத்துழைத்து உற்சாகப்படுத்தும் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு நன்றி" என்கிறார் சக்திவேல். 

வீடியோ பாடம் மட்டுமின்றி, மாணவர்களின் நலன் சார்ந்த விஷயங்களிலும் சக்திவேல் ஆர்வத்துடன் இருக்கிறார். தேசியத் திறனாய்வுத் தேர்வில் இந்தப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் கலந்துகொண்டு, ஒவ்வொரு முறையும் தேர்ச்சிபெற்று, மத்திய அரசின் 24,000 ரூபாய் கல்வி உதவித்தொகையைப் பெற்றுவருகின்றனர்.  

 

 

மாணவர்களின் நலன்மீது அக்கறையுடன் புதுமையான கற்பனை வளத்துடன் பணியாற்றும் சக்திவேல் போன்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருகட்டும்.

 


டிரெண்டிங் @ விகடன்