Published:Updated:

'அரசுப் பள்ளியை விட்டுப் போவதற்கு அழுகையா இருக்கு' - பிரியாவிடையில் மாணவர்கள் ஆனந்தக் கண்ணீர்!

எனக்கு இந்த பள்ளியை விட்டு போகவேண்டும் என்று எண்ணும்போது அழுகையே வருகிறது.மனசே இல்லை

'அரசுப் பள்ளியை விட்டுப் போவதற்கு அழுகையா இருக்கு' - பிரியாவிடையில் மாணவர்கள் ஆனந்தக் கண்ணீர்!
'அரசுப் பள்ளியை விட்டுப் போவதற்கு அழுகையா இருக்கு' - பிரியாவிடையில் மாணவர்கள் ஆனந்தக் கண்ணீர்!
'அரசுப் பள்ளியை விட்டுப் போவதற்கு அழுகையா இருக்கு' - பிரியாவிடையில் மாணவர்கள் ஆனந்தக் கண்ணீர்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பிரியாவிடை  அளிக்கும் விழா பெற்றோர், ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது.

ஒவ்வொருவராக மெழுகுவத்தியில் ஒளியைப் பகிர்ந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். விழாவில் மாணவ, மாணவியரின் நாடகம், திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருத்தினர் சந்திரமோகன்  மாணவர்களிடையே கலந்துரையாடல் நடத்தினார். அவர் பேசுகையில், "நாம் எல்லா விஷயங்களையும் எட்டிப்பிடிக்க முடியும். இது விந்தை உலகம். பருப்பு வடையை வைத்து எலியைப் பிடிப்பதுபோல, ஆசிரியர் நடத்தும் பாடத்தை மட்டும் படிப்பது சிறந்த செயலாகாது. மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் இவைகளை ஒருங்கிணைத்தாலே ஆறறிவாகும். எந்த ஒரு செயல் செய்யும் போதும் திட்டமிடல் அவசியம். மண்ணில் பிறந்த நாம், உலகில் ஏதேனும் சாதிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்குவது என்பது மட்டும் போதாது. அனுபவ அறிவும் அவசியம். அறிவைத் தேடி நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நூலகங்களுக்கு சென்று அறிய வகை புத்தங்களைப்  படிக்க பழகிக்கொள்ள வேண்டும்.

ஆங்கில ஏடுகளைப் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆங்கில அகராதியைப் படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வார்த்தைகள் வீதம் ஒரு மாதத்துக்கு 90 வார்த்தைகள் படித்துவிடலாம். சிறு வயதில் கனவு பெரிதாக இருக்க வேண்டும். அப்துல் கலாம் இதைத்தான் அறிவுறுத்துகிறார். ஏன், எதற்கு என்று சிந்திக்க வேண்டும். எந்த ஒரு செயல் செய்தாலும் செய்தவருக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் படித்த பள்ளி, உங்கள் பெற்றோர், உடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள். நன்றி செல்லும்போதுதான் அந்தச் செயல் முழுமையடைகிறது" என்றார்.

8-ம் வகுப்பு மாணவி சின்னம்மாள், "நான் ஆறாம் வகுப்பு வரை முன்பு படித்த பள்ளியில் எந்தப் போட்டியிலும் பங்கேற்றது கிடையாது. ஏழாம் வகுப்பில் இந்தப் பள்ளிக்கு வந்த பிறகு, இங்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் தொடர்ந்த தூண்டுதல் காரணமாக அனைத்து போட்டிகளிலும் பங்கெடுத்து, 20 சான்றிதழ்கள் வைத்துள்ளேன்" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே," எனக்கு இந்தப் பள்ளியை விட்டுப் போக வேண்டும் என்று எண்ணும்போது அழுகையே வருகிறது. மனசே இல்லை" என்று கண்ணீர் சிந்தினார்.

8-ம் வகுப்பு மாணவர் ரஞ்சித், "இந்தப் பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு முதல் படித்துவருகிறேன். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சுமார் 42 சான்றிதழை வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.

பல்வேறு போட்டியில் பதக்கம் வென்ற மாணவி காவ்யா, "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்ந்தேன். அஞ்சல் அலுவலகம், அரசு தோட்டக்கலைப் பண்ணை, காவல் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் நேரடியாக களப்பயணம் சென்று வந்துள்ளேன். இதன்மூலம் எனக்கு பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்தது. மூன்று ஆண்டுகளில் திருச்சி, மதுரை, சென்னை என அனைத்து ஊர்களில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று 21 சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன். சென்னையில், ஐ.நா.சபை மூலம் நடைபெற்ற அறிவியல் தொடர்பான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றது, எனது வாழ்நாளில் மறக்க இயலாத நினைவாகும். எனது தாயார் கூலி வேலைபார்ப்பதால், சென்னை வரை என்னை அழைத்துச்செல்ல இயலாத நிலையில், பள்ளியில் ஆசிரியை மூலமாக என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று, இந்தப் போட்டியில் வெற்றிபெற்று பதக்கம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

இவ்வாறாக, ஒவ்வொரு மாணவரும் பள்ளியுடனான தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஆனந்தக்கண்ணீரில் நிறைவுற்றது விழா.