Published:Updated:

'ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு': இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் எஸ்கேப்!

'ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு': இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் எஸ்கேப்!
'ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு': இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் எஸ்கேப்!

சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள், 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் இடம் பெறவில்லை.

சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள், 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் இடம் பெறவில்லை.

மத்திய அரசு கொண்டுவந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதனால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சட்டம் பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகள், அரசிடமிருந்து நிதியைப் பெற்றுவிட்டு, மாணவர்களுக்கு இடம் வழங்குவதில்லை. இதனிடையே, கடந்த ஆண்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, மெட்ரிக் பள்ளிகளில் மட்டுமல்லாமல், சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளிலும், ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள், 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் இடம் பெறவில்லை.

இதுகுறித்து ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளிலும், ஏழைகளுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டே, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரனைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். தாமதம் ஆன காரணத்தால், அடுத்த ஆண்டு (இந்த ஆண்டு) கொண்டு வருகிறோம் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் பட்டியலில் சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் இல்லை. மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தில், அந்தப் பள்ளிகளே இல்லை என்றால் எப்படி? எனவே, அவரது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். அதேபோல, தற்போதைய விதிகளின்படி, உண்மையான ஏழை மாணவர்கள் இதில் சேரும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, மற்ற மாநிலங்களில் உள்ளது போல, விதிகளை மாற்ற வேண்டும்.

தற்போது இந்தத் திட்டத்துக்காக, ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இது 2,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இந்தத் திட்டம், உண்மையாகவே ஏழை மாணவர்களைச் சென்றடைகிறதா என்பதை, அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை முதன்மைக் கல்வி அலுவலர் அலுலகத்தில், ம.தி.மு.க-வினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு