Published:Updated:

அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த கிராமம்! மாணவர் சேர்க்கைக்காக அதிரடித் திட்டம் 

அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த கிராமம்! மாணவர் சேர்க்கைக்காக அதிரடித் திட்டம் 
அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த கிராமம்! மாணவர் சேர்க்கைக்காக அதிரடித் திட்டம் 

அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த கிராமம்! மாணவர் சேர்க்கைக்காக அதிரடித் திட்டம் 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள், ஊராட்சி ஒன்றியப் பள்ளியைத் தத்தெடுத்து மாணவர் சேர்க்கைக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில், சின்ன அத்திக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் கல்வித் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தனர். சுமார் 200 மாணவர்கள் வரை படித்த இந்தப் பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களே உள்ளனர். இங்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 

இந்நிலையில் தாங்கள் படித்து வளர்த்தப் பள்ளியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன், கிராமத்தில் உள்ள பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து கடந்த மாதம் பள்ளியின் மேல் அக்கறை கொண்டு, இங்குள்ள தலைமை ஆசிரியை மற்றும் குறிப்பிட்ட இரு ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். இதன் பயனாக ஓர் ஆசிரியர் உடனடியாக மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டார். தலைமை ஆசிரியை மற்றும் குறிப்பிட்ட ஆசிரியை மே மாதம் நடைபெறும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் வேறு பள்ளிக்குச் செல்வதாக அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுத்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

தற்போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்களது கிராம எல்லைக்குட்பட்ட சித்தாலம்புத்தூர், அத்திக்குளம், சின்ன அத்திக்குளத்தில் 2018-19 ம் கல்வியாண்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளனர். அதில் வரும் கல்வியாண்டில் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு எவர்சில்வர் குடம் பரிசாக வழங்கப்படும். இதில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 கிராம் தங்கக் காசு வழங்கப்படும். ஸ்மார்ட் கிளாஸ் ரூம், யோகா, கராத்தே, சிலம்பம், கேரம், டென்னிஸ், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, அவர்களுக்கு மாலை நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும். கணினி பயிற்சி வழங்கப்படும். நம்மை உயர்த்திய பள்ளி, உறுதியேற்போம், நம்பள்ளி மேல்நிலைப் பள்ளியாகும் வரை" என்று வாசகங்கள் போடப்பட்டுள்ளன.

இது குறித்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கூறுகையில், ``இனி எங்கள் கிராமப் பள்ளி வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். இனி நாங்கள் முழு ஈடுபாட்டுடன் பள்ளி வளர்ச்சிக்குப் புதியதாய் வரும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களைப் பயன்படுத்தி வளர்ச்சி காண்போம். பள்ளி வளர்ச்சிக்கு அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவோம். தற்போது ரூ.60,000 மதிப்பில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தால் ஆன இருக்கைகள் செய்ய கொடுத்துள்ளோம். பள்ளியில் அனைத்துத் தேசிய விழாக்கள் நடத்தப்பட்டு,  மாணவர்களை அனைத்துப் போட்டிகளுக்கும் தயார் செய்ய உள்ளோம். தற்போது மாணவர்களைச் சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு