Published:Updated:

சமூகம் மாணவர்களுக்கு அளிக்கும் சம்பளம்... மரணம்!

சமூகம் மாணவர்களுக்கு அளிக்கும் சம்பளம்... மரணம்!
சமூகம் மாணவர்களுக்கு அளிக்கும் சம்பளம்... மரணம்!

கோடிகோடி ரூபாயாகப் புழங்கும் ஒரு கல்விச்சந்தை. ஏ.சி வகுப்பறைகள். ஒவ்வொரு விலைக்கும் ஒவ்வொரு வகையான கல்வி. தடிமன் தடிமனான புத்தகங்கள். வாயில் நுழையாத பெயர்களில் விதம் விதமானத் தேர்வுகள். இவற்றைக் கடந்து உள்ளே நுழைந்தால் உங்களுக்குக் கிடைக்கிறது உயர்கல்வி எனும் 'சாம்ராஜ்யம்'.

துருப்பிடித்த சைக்கிள் அல்லது நசுங்கிச் செல்வதற்கு ஏதோ ஒரு பேருந்து. சத்துணவுத் திட்டத்தில் மதிய உணவு. பாடப்புத்தகங்களை வாசித்து போதுத்தேர்வுகளை எழுதி கனவுகளுடன் காத்திருக்கும் இன்னொரு பக்கம். 

இந்த இருவேறு அமைப்பினரையும் இந்த உயர்கல்வி எனும் கட்டமைப்பு எப்படிப் பார்க்கிறது?

'உயர்கல்விக்குள் யார்யாரெல்லாம் வரவேண்டும்' என்பதில் இருக்கும் அரசியலைப் பார்ப்பதா? அல்லது பள்ளிக்கல்வி முறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பதா என்று நாம் அனைவரும் குழம்பிக்கொண்டிருக்கும்போதே நம் கண்ணருகே இன்னொரு காட்சியையும் காண்கிறோம். அரசுப்பள்ளிகள் என்றால் இந்தச் சமூகம் எவ்வளவு விலகிச் செல்கிறதோ, அதே அளவுக்கு அரசுக் கல்லூரிகள் என்றால் போட்டி போட்டுக்கொண்டு அனுமதிக்காக நிற்கிறது. பள்ளிக் கல்வியை நன்றாக உற்றுப்பார்த்தால் இங்கு இருப்பது இரண்டு வெவ்வேறு உலகங்கள்.

சென்னையில் நீங்கள் நுழைவுத்தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றால் ஓராண்டுக்குக் குறைந்தபட்சம் ஒன்று முதல் ஒன்றரை லட்ச ரூபாய் தேவைப்படும். இது பயிற்சி மையத்தில் நீங்கள் நேரடியாகப் பயிற்சி எடுத்தால் இந்தக் கட்டணம். சென்னையின் புகழ்பெற்ற 'சர்வதேச' கல்வி நிறுவனங்களில், இத்தகைய நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிக் கட்டணம், பள்ளிக் கட்டணம், தங்கும் விடுதி என்று அனைத்தையும் சேர்த்துக் கொடுத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு எளிதாகப் பத்துமுதல் பன்னிரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும். இரண்டு ஆண்டுகள், படிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. நித்தமும் தேர்வுகள்தான். நீங்கள் எந்த ‘அணியில்’ இருக்கிறீர்கள் என்று அட்சரசுத்தமாக விளக்கிவிடுவார்கள்.

அடிப்படையில் ஒரு புத்தகம், அதில் இருக்கும் அடிப்படைத் தகவல்களையும், தோற்றங்களையும்வைத்து மாற்றி மாற்றி கடினமான கேள்விகளுக்கு எப்படி விடையளிப்பது என்பதைக் கற்றுக்கொடுக்கவே இந்தப் பயிற்சி மையங்கள். ஆழமான ஞானம் என்பது இங்கெல்லாம் எட்டாக்கனி. ``வாரத்தேர்வு, மாதாந்திரத் தேர்வு, மாதிரித் தேர்வில் மாதிரி மதிப்பெண் என்ன..." என்று வெறும் மதிப்பெண்களை நோக்கியே ஒரு பெருங்கூட்டம் ஓடும். அதில் உண்மையான ஆர்வம் கொண்ட சில பிள்ளைகளும் இருக்கவே செய்வார்கள். இரண்டு ஆண்டு பயிற்சி என்பதெல்லாம் கடைசியாக உணர்ந்துகொள்பவர்களுக்குதான். நான்கு ஆண்டுகள் - ஒன்பது, பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பயிற்சி என்பதுதான் இன்று பெரும்பாலான நுழைவுத்தேர்வுச் சந்தைகளின் ‘standard package’. இந்த நுழைவுத்தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும்போதே பள்ளி அளவில் நடைபெறும் தேசிய திறனறித் தேர்வு போன்ற தேர்வுகளுக்கும் பிள்ளைகள் தயார் ஆவார்கள். இன்னொரு புறம், வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்காத, அல்லது வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மாணவர்கள். வேறெங்கும் செல்லவேண்டாம். மாணவர்களிடம் பேச்சு கொடுத்தால் அவர்களே கூறிவிடுவார்கள், எத்தகைய பாகுபாடுகள் நிலவுகின்றன என்று.

கல்வி பயிற்றுவிக்கும் முறை, வாய்ப்புகள் மட்டும் என்றில்லாமல், உளவியல்ரீதியாகவே நிறைய பாகுபாடுகள் மாணவர்களிடையில் காட்டப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளும் கலந்துகொள்ளும் போட்டிகளுக்கும், கருத்தரங்கங்களுக்கும் சென்று பாருங்கள். ஒரு சீருடையை வைத்து மிகநுணுக்கமாக மாணவர்களை எடைபோடுவதெல்லாம் மிகச் சாதாரணம். சத்தம்போடும் ஒரு வகுப்பறையை “ஹேய்! என்ன...  ஸ்கூல் ஸ்டுடண்ட்ஸ் மாதிரி பிஹேவ் பண்ணுறீங்க?” என்று ஆசிரியர் அதட்டுவதை எவ்வளவோ குழந்தைகள் கடந்துவந்திருப்பார்கள். பள்ளிக்கல்வியிலே இவ்வளவு பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிலவி வரும்போது, அனைவருக்கும் ஒரேமாதிரியான தேர்வு முறை என்பது எவ்வகையில் அறமுடையதாகும்?

நுழைவுக்கட்டணமாக 1500 ரூபாய் கட்டி, அதற்குமேல் நீங்கள் போடும் அனைத்து இரும்பு விதிகளையும் கடந்து மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்தால் ஒவ்வொரு மொழியிலும் கேள்விகள் வித்தியாசமாக இருக்கின்றன. சீர்மைப்படுத்தப்பட்ட ஒரு தேர்வு முறை, மாணவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்று கூறி அமல்படுத்தப்பட்ட ஒரு திட்டம், இத்தனை ஓட்டை உடைசல்களோடு இருக்கும்போது, கள்ள மவுனம் சாதித்து என்ன பயன். பள்ளிக்கல்வியைப் போலல்லாமல், மிக மிகக் குறைவான இடங்களையே உயர்கல்விக் கூடங்கள் கொண்டுள்ளன. அதற்குக் குறைவான பயிற்சிக்கூடங்கள் இருந்தபோது, மாணவர்கள் அங்குசென்று பயிற்சி எடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தேர்வுமுறை எளிதாக இருந்ததால் தேர்வு முறை இன்னும் கொஞ்சம் கடினமாக்கப்பட்டது. அதனால் இன்னும் கொஞ்சம் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன. கேள்விகள் இன்னும் கடினமாக மாறின. கடினமான கேள்விகள்; இன்னும் பல பயிற்சிக்கூடங்கள். முழுக்க முழுக்க வணிகமயமாக்கப்பட்ட ஒரு நடைமுறையால் இன்று சமூகத்தில் ஒரு சாரார் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டாலும், அதற்குத் தீர்வு காண்பதைவிட அதை மேலும் மேலும் அரசியலாக்குகிறார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த உயர்கல்விக்கூடங்களில் உங்களுக்கு அனுமதி வேண்டுமென்றால் உங்களுக்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில தகுதிகள் வேண்டும். ஆனால், அந்தத் தகுதிகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன? நுழைவுத்தேர்வு எழுதியே உள்ளே நுழைய முடியும் என்பதன் மூலமாக, நுழைவுத்தேர்வு என்பதில் கூடுமான பயிற்சிபெறும் மாணவர்களுக்குச் சாதகமாகத்தானே உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றம் பெற்றுள்ளன? மார்க் கலண்டர் என்ற அறிஞர் தகுதி என்பதற்கான அளவுகோலினை இவ்வாறு முன்வைக்கிறார்: அடிப்படைக் கல்வி எவ்வாறு கிடைத்தது, ஒய்வு, முறையான வசதிகளுடன் அந்தப் பிள்ளையால் படிக்க முடிந்ததா, தேவையான பயிற்சிகள் பெறுவதற்கு வசதிகள் இருந்ததா? வழிகாட்டுதல் என்பது யாரின் மூலமாகக் கிடைத்தது, அந்தப் பிள்ளை எவ்வளவு உழைத்தது? என்று அனைத்துப் பின்னணிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் அவர். அப்படிப் பார்த்தால்,
அனிதாவும், பிரதீபாவும் தகுதியானவர்கள்தானே. வசதி இல்லை என்பதால்தானே அவர்களின் கனவுகளோடு அவர்களும் கருகினார்கள். 1176 மதிப்பெண்களும், 1125 மதிப்பெண்களும் உழைத்துவாங்கிய மதிப்பெண்கள்தானே.

அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட முறையில் கோளாறு என்றால் மாறவேண்டியது மாணவர்கள் அல்ல, இந்தக் கல்வி முறை! இவ்வளவு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களுக்காக இந்த அரசு குறைந்தபட்சம் என்ன செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி என்பது முழுமையாக அவர்களுடைய சந்தேகங்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.

உயர்கல்வி குறித்தான பொதுப்பார்வைகளை உடைத்தெறிந்துவிட்டு, அனைத்து மாணவர்களையும் தகுதியுடையவர்களாக மாற்றுவது, அவரவர் விருப்பப்படும் துறைக்குச் சிறந்த அடித்தளமிடுவது ஆகியவை பள்ளிக்கல்வியின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். 

சமூகப் பின்னணியிலிருந்து மீண்டு உயர்ந்த இடங்களை நோக்கிச் செல்வதற்குப் போதுமான தகுதிகள் இருந்தும், இந்தச் சமூகம் அவர்களுக்குச் சம்பளமாக அளித்தது மரணம். இனியாவது விழித்துக்கொள்வோமா?