Published:Updated:

ஒருமைப்பாடு பலியாகி விடும்: மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

ஒருமைப்பாடு பலியாகி விடும்: மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை
ஒருமைப்பாடு பலியாகி விடும்: மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை
ஒருமைப்பாடு பலியாகி விடும்: மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

சென்னை: யு.பி.எஸ்.சி புதிய தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஏனைய தேசிய இனங்கள் இரண்டாந்தர குடிமக்கள் என்று கருதும் போக்கு தொடருமானால், ஒருமைப்பாடு பலியாகி விடும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றங்களைக் கொண்டுவந்து புதிய முறையை அறிமுகம் செய்து உள்ளது. பேராசிரியர் அருண் நிகவேகர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, மத்திய பணியாளர் நலத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக‌, முதற்கட்டத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. இதில் முதன்மைத் தேர்வு முறையில் கொண்டு வந்துள்ள மாற்றம், இந்தி பேசாத மக்கள் மீது மத்திய அரசு இழைத்துள்ள அநீதிக்கு சாட்சியமாக இருக்கின்றது.

##~~##
மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், முதன்மைத் தேர்வை இதுவரை ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் எழுதலாம் என்று விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய முறையில், மாநில மொழிகளில் தேர்வு எழுத கட்டுப்பாடுகள் கொண்டு வந்து உள்ளனர். மாநில மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, அந்த மொழியில் முதன்மைத் தேர்வை எழுத முடியும். தமிழ் உள்ளிட்ட பிறமெழிகளை தாய்மொழியாகக் கொண்டோர் அனைவரும், தங்கள் மொழியில் தேர்வு எழுதுவதை புதிய தேர்வுமுறை தடை செய்கிறது.
இதனால், தமிழை தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் மத்திய அரசு குடிமைப்பணித் தேர்வுகளை தமிழில் எழுத முடியாது. தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்று உள்ளவர்கள் மட்டுமே எழுத முடியும். இந்த மாற்றங்களால், தமிழில் பயின்ற மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வாய்ப்பை மறுக்கிறது. இந்த புதிய நடைமுறை கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் கணிசமான அளவில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ். போன்ற உயர் பணிகளுக்குச் செல்வது அதிகரித்து வருகின்றது. முதன்மைத் தேர்வுகளை தமிழில் எழுதி ஏராளமானோர் வெற்றி பெற்று உள்ளனர். இந்நிலையில் தேர்வு முறையில் மாறுதல் செய்தால், தமிழகத்தில் இருந்து அகில இந்திய பணிகளுக்கு இளைஞர்கள் தேர்வு பெறுவது குறைந்துவிடும். இதைத்தான் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விரும்புகிறது போலும்.
ஏனைய தேசிய இனங்கள் இரண்டாந்தர குடிமக்கள் என்று கருதும் போக்கு தொடருமானால், ஒருமைப்பாடு பலியாகி விடும் என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வுமுறைகளில் கொண்டுவந்துள்ள மாற்றங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். முதன்மைத் தேர்வுகளை தமிழில் விருப்பம் உள்ள அனைவரும் எழுதிட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ வலியுறுத்தி கூறியுள்ளார்.