Published:Updated:

புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!
புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!

கிங் விஸ்வா

பிரீமியம் ஸ்டோரி

காலத்துக்கு ஏற்ப தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, சமகால இளைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார், கதாசிரியரும் ஓவியருமான, லிங்கன் பர்ஸ் (Lincoln Peirce).

புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!

1991-ம் ஆண்டு முதல், தினசரி நாளிதழில் இவர் படைத்த ‘பிக் நேட்’ என்ற காமிக்ஸ் தொடர் இன்றளவும் பிரபலம். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக காமிக்ஸ் பாணியைக் கடந்து, நாவல் பாணியிலான ‘டைரி ஆஃப் எ விம்ப்பி கிட்’ போன்றவை சாதித்த மகத்தான வெற்றி, இவரையும் மாற்றியது. 2010-ஆண்டு அவருடைய காமிக்ஸ் நாயகனை வேறு களத்துக்கு மாற்றினார்.

நம்ம ஹீரோ நேட், ஆறாம் வகுப்பு மாணவன். அந்த வயதிலேயே ஒரு காமிக்ஸ் வரையும் அளவுக்குத் திறமைசாலி. அதிபுத்திசாலியான நேட், தேர்வுகளில் ஏன் சொதப்புகிறான் என்பது புரியாத புதிர். பிள்ளையார் பிடிக்கக் குரங்காக மாறுவதைப் போல, நேட் எது செய்தாலும் பிரச்னையிலேயே முடியும்.

செஸ் விளையாட்டில் சூரனான நேட், தன் தந்தை மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான். வேலைக்குப் போவதையே வெறுக்கும் அவனுடைய மாமாவின் காமெடிகள், பள்ளித் தோழர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் கதையை முன்னெடுத்துச் செல்கின்றன. பிரான்சிஸ், மற்றும் டெட்டி என்று இரண்டு நண்பர்கள், ஜென்னி என்ற பெண் மற்றும் ஆர்தர் என்ற போட்டியாளனும் கதையில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள். மிஸஸ் குட்ஃப்ரே என்ற டீச்சர்தான் நேட்டின் நம்பர் ஒன் எதிரி. இவரை ‘காட்ஸில்லா’ என்பான். ஒரு சிறு இசைக்குழுவை தன் நண்பர்களுடன் நடத்திவரும் நேட், எல்லாச் சிறுமிகளும் தன்னை ஹீரோவாக நினைக்கிறார்கள் என்று நம்புகிறான்.

புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!

நம்ம ஊர் எடை பார்க்கும் மெஷினில் ஒரு ஜோசிய வாக்கியமும் வரும். அதுபோல அமெரிக்காவில், அதிர்ஷ்ட குக்கீ (Fortune Cookie) என்ற தின்பண்டத்தில் வசனங்கள், ஜோசியங்கள் வரும். அதை மையமாக வைத்தே இந்த முதல் நாவல் எழுதப்பட்டுள்ளது.

காலையில் எழுந்ததும் ஸ்கூலுக்குப் போகாமல் இருக்க ஒரு தில்லாலங்கடி வேலையைச் செய்ய...வழக்கம்போல சொதப்பலாக மாட்டிக்கொள்கிறான் நேட். அவசர அவசரமாகக் கிளம்பும்போது டிபன் பாக்ஸை மறந்துவிடுகிறான். நண்பன் டெட்டி, ஒரு Fortune Cookie கொடுக்கிறான். அதில், ‘இன்று நீ அனைவரையும்விட சிறப்பாகச் செயல்படுவாய்’ என்று இருப்பதை நம்பி, பல செயல்களைச் செய்கிறான் நேட். ஆனால், வழக்கம்போல ஒவ்வொன்றிலும்  சொதப்புகிறான்.

மதியம் ஸ்கூல் கேன்ட்டீனில், 10 நிமிடத்தில் பீட்ஸா சாப்பிடும் போட்டியில் இறங்குவது முதல் ஒவ்வொன்றும் சொதப்புகிறது. அதிர்ஷ்ட குக்கீயின் ஜோசியப்படி சிறப்பாகச் செயல்பட்டானா இல்லையா என்பதே மீதிக் கதை.

2014-ம் ஆண்டு ஒரு காமிக்ஸ் தொடரை, 1,196 மீட்டர் நீளத்துக்கு உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்த பர்ஸ், ஒரு பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பள்ளியில் நடக்கும் பல விஷயங்கள் அவருக்கு அத்துபடி. அதை எப்படிச் சுவையாக, கோவையாகச் சொல்வது என்ற விஷயத்தில், ‘பிக் நேட்’ நாவல் மூலம் அட்டகாசமாக ஜெயித்திருக்கிறார் பர்ஸ்.

கதாசிரியர் & ஓவியர்: லிங்கன் பர்ஸ் அமெரிக்கா

புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!

53 வயதாகும் பர்ஸ், காமிக்ஸ் மற்றும் சிறுவர் இலக்கியத்தில் நுழைந்ததற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார்.

1. நிறைய படிப்பது

2. எதிர்பார்ப்பின்றி ஆர்வத்துடன் ஒரு செயலைச் செய்தல்.

3. சரியான அறிவுரையை மதித்துச் செயல்படுதல்.

பர்ஸ் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அவரது பெற்றோர்களின் பழைய காமிக்ஸ் புத்தகங்களைப் புரட்டி, படம் பார்க்க ஆரம்பித்தார். புகழ்பெற்ற Peanuts காமிக்ஸ் புத்தகங்கள் அவரைக் கவர்ந்தன. அவற்றைப் பார்த்து தானும் ‘கிறுக்க’ ஆரம்பித்தார். அந்த ஆர்வம் படிப்படியாக முன்னேற, முறையாக ஓவியம் கற்றுக்கொண்டார்.

பள்ளி மாணவர் இதழில் ‘மூன்றாவது மாடி’ என்ற பெயரில் ஒரு காமிக்ஸ் கதைத் தொடரை வரைந்துக்கொண்டிருந்தார் பர்ஸ். அப்போது, ஓவியர்களுக்கான முகவரிப் புத்தகம் கிடைத்தது. அதில் இருந்த காமிக்ஸ் பதிப்பகங்கள் மற்றும் சிண்டிகேட்டுகளுக்கு, தான் வரைந்த ஓவியங்கள் மற்றும் காமிக்ஸ் கதைகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி அனுப்பிவைத்தார். இது, யுனைடெட் மீடியா சிண்டிகேட்டில் எடிட்டராக இருந்த சாராவின் பார்வைக்குச் சென்றது.

பர்ஸின் ஓவியங்கள் மற்றும் கதை சொல்லும் பாணியைக் கண்ட சாரா, தனிப்பட்ட முறையில் அவரை அழைத்து பல அறிவுரைகளைக் கூறினார். அதில் ஒன்று,  ‘பல கதாபாத்திரங்களை ஒரே சமயத்தில் மையப்படுத்தி கதை எழுதுவதைவிட, ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைச் சுற்றி கதைகளைப் படைத்தால், வாசகர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வர்’ என்பது. பர்ஸ், அந்த அறிவுரையைச் சரியாகப் பயன்படுத்தினார். பின் நாட்களில், ஒரு பெரிய காமிக்ஸ் தொடரை ஆரம்பிக்க எண்ணியபோது, அவர் எடிட்டராக தேர்ந்தெடுத்தது சாராவைத்தான்.

புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!

கதை: Big Nate: In a Class By Himself

கதாசிரியர் & ஓவியர்: Lincoln Peirce

மொழி: ஆங்கிலம் (ஆரம்ப நிலை).

வயது: 6 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.

வெளியீடு:
2010 (முதல் கதை. 2016 வரை 8 புத்தகங்கள்)

பதிப்பாளர்: Harper Collins

புத்தக அளவு:
14 x 21 Inches

பக்கங்கள்: 224

வாங்க: கடைகள் & இணையதளம்.

கதை: ஆறாம் வகுப்பு மாணவனின் அசட்டுத்தனங்கள்.

புத்தக உலகம் - சொதப்பல் சிகரம்!

சாதனை: உலகிலேயே மிகவும் நீளமான காமிக்ஸ் தொடர் என்ற கின்னஸ் சாதனை, மொத்தம் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் 25 மொழிகளில் வெளிவந்து, தற்போது புத்தக வடிவிலும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

சிறப்பு அம்சம்: தொடர்ந்து தோல்விகளையும் சக வகுப்பு மாணவர்களுடனான ஒப்பீட்டால் அவமானமும் அடைந்து வருகிறான் ஒரு ஆறாம் வகுப்பு மாணவன். இப்படிப்பட்ட சூழலில் எப்படி அவன் தனது தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க முடியும் என்பதை மனோதத்துவ ரீதியில் கையாளும் புத்தகம். படிக்க ஆரம்பிக்கும் இளையோர்க்கான ஜாலியான கதை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு