Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - காட்டெருமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அழிய விடல் ஆகாது பாப்பா! - காட்டெருமை
அழிய விடல் ஆகாது பாப்பா! - காட்டெருமை

ஆயிஷா இரா.நடராசன்

பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - காட்டெருமை

ன்புள்ள நண்பர்களே...

நான் காட்டெருமை... மிகுந்த கலக்கத்தோடு எழுதுகிறேன். பேரழிவின் விளிம்பில் மனம் நடுங்கச் சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காடுகளின் நீர்நிலைகள், புதர்கள் மற்றும் புல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தோம். வன நீர் எருமை (Wild water buffalo) என உலகம் எங்களை அழைக்கிறது. பாபுலஸ் ஆர்னி (Bubalus arnee) என்பது உயிரியல் பெயர். ‘ஆர்னி எருமைகள்’ என்று இந்திய மக்கள் எங்களை அழைப்பார்கள்.

வீடுகளில் பால் வழங்கும் எருமைகளின் மூதாதையர்கள் நாங்கள். ஆனால், மனிதர்களால் பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். மரணக்கடவுள் எமனின் வாகனமாக எங்களை நம்புபவர்கள் உண்டு. ஏழை பணக்காரன், நல்லவன் தீயவன், சாதி வேறுபாடு என எமன் பார்ப்பது இல்லை. எல்லாருக்கும் ஒரே நியதி. அதனால்தான் அவன் ‘எம தர்மன்’ என்று அழைக்கப்படுகிறான். ‘எமனேறும் வாகனமே’ எனப் பாட்டெல்லாம் எங்களைப் பற்றி உண்டு. இயற்கையின் எந்த விஷயமும் எங்களை அச்சுறுத்தாது. அதையே, சூடும் சொரணையும் இல்லாதவர்களைத் திட்டுவதற்கு எங்களை உதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள் நண்பா.

இரண்டு மீட்டர் நீளம் வரைகூட வளரும் கொம்புகள், எங்களுக்கான அடையாளம். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், அஸ்ஸாம் முதல் முதுமலை வரை கோடிக்கணக்கில் நாங்கள் இருந்தோம். புலி, சிறுத்தை, ஓநாய், கழுதைப்புலி எனப் பலவற்றால் வேட்டையாடப்படும் விலங்குகள்தாம் நாங்கள். ஆனாலும் மனிதர்களால் சந்தித்த அழிவே அதிகம்.

அழிய விடல் ஆகாது பாப்பா! - காட்டெருமை

1986-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் 3,700 என அதிர்ச்சிகரமாகக் குறைந்துபோனோம். இப்போதோ, ‘இந்தியா முழுவதும் அங்குலம் அங்குலமாகத் தேடினாலும் மொத்தமாக 600 காட்டெருமைகளே இருக்கும்’ என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.யு.சி.என் என்கிற உலக விலங்குப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. நாங்கள்  அழிவுநிலை விலங்குகளின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோம்.

நண்பா, எங்கள் வாழிடங்கள் சுருங்கிடக் காரணங்கள் பல. அனல்மின் நிலையங்கள் உள்பட பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்காக நாங்கள் வாழும் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. எங்களின் தோலுக்காகவும், சாகச செயல்பாடுகளுக்காகவும் ஓட ஓட வேட்டையாடப்பட்டோம்.

கொம்புகளோடு கூடிய எங்கள் தலையைப் பாடம் செய்து பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். அதை வாங்குவதை, அதிர்ஷ்டம் என்றும், அந்தஸ்து என்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அது ஓர் இனத்தின் அழிவு என யோசிப்பதே இல்லை.
நண்பா... எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். சதுப்பு நிலக்காடுகளை அழிப்பதை நிறுத்திட விழிப்புஉணர்வை ஏற்படுத்துங்கள். பூமியில் வாழும் உரிமை, எல்லா உயிர்களுக்கும் உண்டு என்பதை உணர்த்துங்கள்.

செய்வீர்களா நண்பர்களே?

உங்களை நம்பும் காட்டெருமை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு