Published:Updated:

சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!
சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

அ.அருணசுபா - வி.ஸ்ரீனிவாசுலு

பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

‘எந்த ஒரு விஷயத்தையும் திறந்த மனதுடன், புரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் புலன் காட்சியாகப் பார்க்க வேண்டும்’ என்கிறார் ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்குமார்.
 சுட்டி ஸ்டார்களின் சந்திப்பு சென்னை, தி.நகரில் உள்ள செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுட்டி ஸ்டார்கள், தங்கள் நண்பர்களைச் சந்தித்த உற்சாகத்தில் இருந்தார்கள். கல்வி, கலை, கலகலப்பு என அந்த நாள் முழுவதும் கொண்டாட்டமாக அமைந்திருந்தது.

சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

புலன் காட்சி பாடம்!

 நிகழ்ச்சியின் ஆரம்பமே சுட்டிகளுக்குச் சவாலும் கலகலப்புமாக இருந்தது. சில ஓவியங்கள், படங்களைக் காண்பித்த செந்தில்குமார், அவற்றில் இருந்த வித்தியாசமான காட்சிகளைக் கண்டுபிடிக்க செய்தார். ‘‘வாழ்வில் முன்னேற நம் பார்வையைப் பொதுவான குணத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பார்கள். இவற்றில், இந்தக் கோணம்தான் சிறந்தது, இந்தக் கோணம் சரியில்லை என்றெல்லாம் கிடையாது. ஒரு விஷயத்தில் இது இப்படித்தான் என்று சொன்னால், ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். அப்போதுதான் புதிய புதிய விஷயங்கள் பிறக்கும். ஐந்து புலன்களான பார்த்தல், கேட்டல், உணர்தல், முகர்தல், ருசித்தல் ஆகியவற்றுடன் ஆறாவது புலனாகப் பகுத்தறிவையும் நாம் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு காட்சியைப் பார்க்கும், அணுகும் செயலே, புலன்காட்சி (Perception) எனப்படுகிறது. இந்த ஆறு புலன்களையும் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவாகிறார்கள். இதையே நம் படிப்பு விஷயத்திலும் பயன்படுத்த வேண்டும். மருத்துவம், இன்ஜினீயரிங், சாஃப்ட்வேர் என்பவை மட்டுமே படிப்பு கிடையாது. இவற்றையெல்லாம் தாண்டி பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன’’ என்றவர், அவற்றைப் பற்றிச் சொல்லச் சொல்ல, வந்திருந்த பெற்றோர்களும் வியந்துபோனார்கள்.

சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

`‘இப்போது உங்களுக்கு ஒரு சார்ட் கொடுப்போம். அதில் உங்கள் பெயர், உங்கள் பலம், உங்களின் பலவீனம், எதிர்காலத் திட்டம், நீங்கள் கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு விஷயம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். ஆனால், அவை எழுத்துகளாகவோ, எண்களாகவோ இல்லாமல் குறிப்பால் உணர்த்துவதாக இருக்க வேண்டும்.’’ என்று செந்தில்குமார் சொன்னதும், சுட்டிகள் இரட்டை உற்சாகத்துடன் களத்தில் இறங்கினார்கள்.

சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

பெற்றோருடன் ஒரு புரிதல்!

 சுட்டி ஸ்டார்கள் சார்ட் சவாலில் இறங்கியதும், பெற்றோர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்கினார் செந்தில்குமார். ‘‘நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஏன் விவாதங்கள், முரண்பாடுகள் உருவாகின்றன எனத் தெரியுமா? ஒரு விஷயத்தை நம் குழந்தைகள் எப்படி யோசிக்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்வதில்லை. நம்மைப் போலவே அவர்களும் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அது நடக்காதபோது அடங்காதவன், பிடிவாதக்காரி என்று பட்டம் கொடுக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் ஓர் உலகம். அவர்களுக்குத் தனிப்பட்ட திறமைகள், அவற்றைச் செயல்படுத்தும் விதம் என மாறுபாடுகள் இருக்கும். நாம் அவற்றை அடையாளம் காண்பதே இல்லை. அங்கேதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. முதலில் உங்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கவனித்து, அதில் முழுமையாக ஈடுபடுத்துங்கள். படித்து வேலைக்குச் செல்வது மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது’’ என்றார் செந்தில் குமார். அவருடன் ஒரு மணி நேரம் உரையாடிய பெற்றோர்கள் முகங்களில் தெளிவும் மகிழ்வும் நிறைந்திருந்தன.

சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

மந்திரமா... தந்திரமா?

 தங்கள் பெயர், கனவுகளை வரைபடங்களாக மாற்றிய சுட்டி ஸ்டார்கள் மதிய உணவுக்குச் சென்று வந்ததும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன் கலகலப்பு கலந்த அறிவியல் உணவை ஊட்ட வந்தார். நீரில் விளக்கை எரியவைப்பது, வெறும் கையில் திருநீறு வரவழைப்பது, குளிர்பானத்தைக் காது வழியே குடிப்பது என இவர் செய்த ரகளையில் அரங்கமே சிரிப்பு மழையில் நனைந்தது. எல்லாம் முடிந்த பிறகு, ‘இவை எதுவுமே மந்திரங்களில்லை. அறிவியல் தந்திரங்கள்தான்’ என்றவர், ஒவ்வொன்றின் பின்னால் இருக்கும் அறிவியலைச் சொல்லி ரகசியங்களை உடைத்தார்.

சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

அடுத்ததாக ‘மெளனத்தில் பேசலாமா?’ என அழைப்பு விடுத்து மேடை ஏறினார்கள்,  ஜி மைம் ஸ்டூடியோஸ், என்னும் சென்னை  நிறுவனத்தைச் சேர்ந்த மைம் கலைக் குழுவினர். செல்போனை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை மைமிங்கில் நிகழ்த்திக் காட்டினார்கள். அடுத்து ஜக்ளிங் கலைஞர் மஸ்தான் ‘கால் பந்தை விதவிதமாக ஜக்ளிங் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்!

‘‘சுட்டி ஸ்டார் திட்டத்தில் சேர்ந்த இந்த எட்டு மாதங்களில், என்னுடைய ஒவ்வொரு செயலிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. எதையும் தைரியமாக அணுகுவது, தலைமைப்பண்பு ஆகியவற்றில் மேம்பட்டுள்ளேன். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் நம்முடைய பங்களிப்பு எப்படியெல்லாம் மறைமுகமாக உள்ளது எனப் புரிந்துகொண்டேன். இன்றைய ஒருநாள் பயிற்சி முகாம் என்னை இன்னும் தெளிவுபடுத்தி இருக்கிறது. எனது முன்னேற்றத்தில் இந்த நாளும் சிறந்த படிக்கட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்று ஒரு சுட்டி ஸ்டார் சொன்னதும், அதை ஆமோதிப்பது போல ஒலித்தது, பிற சுட்டி ஸ்டார்களின் உற்சாகக் கரவொலி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு