Published:Updated:

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

Published:Updated:
எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!
எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

அன்புச் சுட்டி நண்பர்களே...
 
வணக்கம்.

த்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. எங்களைப் பற்றி கவலையேபடமாட்டார்களா என நினைக்கும் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தச் சிறப்பு இணைப்பிதழ்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

CCE கல்வி மதிப்பீட்டு முறையின் கீழ், FA செயல்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள் மூலம் 40 மதிப்பெண்களும், ஒவ்வொரு பருவத்தின் இறுதியில் நடைபெறும் தொகுத்தறி மதிப்பீடு  (Summative Assessment) எனும் எழுத்துத் தேர்வு மூலம் 60 மதிப்பெண்களும் அளிக்கப்படுவது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எஸ்.ஏ-வில் மதிப்பெண்களைக் குவிக்க, பாடவாரியான வழிகாட்டுதல்கள் இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளன. தேர்வு பயத்தைப் போக்கும் டிப்ஸ் முதல், எழுதிய விடைத்தாள்களைச் சரியாகக் கட்டி ஆசிரியரிடம் ஒப்படைப்பது வரை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் அக்கறை மிகுந்த ஒத்துழைப்புடன் பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்திருக்கிறோம்.

அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும்போதும், பாதுகாத்துப் பயன்பெறும் வகையில் இந்தத் தொகுப்பு இருக்கும். இதில் உள்ள வழிகாட்டல்களை ஒவ்வொரு பருவத் தேர்வின்போதும் பின்பற்றலாம். தேர்வுகள் அனைத்திலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற வாழ்த்துகள்!

- அன்புடன் ஆசிரியர்

தமிழ்

ங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.


 

• தேர்வு என்றாலே, மாணவர்களுக்கு ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. பயத்தைவிட்டு, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

•  தமிழ்த் தேர்வைப் பொறுத்தவரை, தேர்வுக்குப் படிக்கும்போதே நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அவை, ஒரு மதிப்பெண் வினா, மனப்பாடப் பகுதி, குறுவினா, கட்டுரைப் பகுதி.

 

• ஒரு மதிப்பெண் வினாக்களான பொருள் கூறு, பிரித்து எழுதுக போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் படித்துக்கொள்ளுங்கள். இவை, எளிதில் மதிப்பெண் பெறக்கூடியவை.

 

• மனப்பாடப் பகுதியை எழுதும்போது, எழுத்துப் பிழை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, அவற்றை நன்கு படிப்பதோடு, பலமுறை எழுதிப் பார்ப்பது அவசியம். எழுதியது பிழையின்றி இருக்கிறதா என்று சுயமதிப்பீடு செய்யவும் மறக்காதீர்கள்.

 

• மனப்பாடப் பகுதியைப் புத்தகத்தில் உள்ளவாறே அடிபிறழாமல், நிறுத்தக்குறியீடுகளைத் தகுந்த இடங்களில் இட்டு எழுத வேண்டும்.

 

• தமிழ்ப் பாடத்தில், குறிப்பாக செய்யுட் பகுதி வினாக்களுக்கு விடை எழுதும்போது, வளவள என எழுதுவதைத் தவிர்த்து, சரியான விடையைப் படித்து எழுதவும்.

 

• கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்கும் போது, துணைத்தலைப்புகள் (Subtitle) இட்டு எழுதுவது சிறப்பாக இருக்கும்.

 

• கட்டுரை (அ) நெடுவினாக்களில் மையக்கருத்துக்கு அடிக்கோடிட்டு எழுதுவதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெறலாம். 

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• நெடுவினாக்களைப் படிக்கும்போதே குறிப்புகள் எடுத்துக்கொண்டு, அவற்றை நினைவில்வைத்துத் தேர்வில் விவரித்து எழுதலாம்.

 

• கடிதம் எழுதும்போது யாருக்கு எழுத வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் கடிதம் எழுதும் நடைமுறையைப் பின்பற்றித் தெளிவாக எழுதவும்.

 

• பத்தியைப் படித்து விடை அளிக்கும்போது, பலமுறை படித்துப் பார்த்து, பொருளை உணர்ந்து விடை அளியுங்கள்.

 

• அனைத்துக்கும் மேலாக, உங்களின் கையெழுத்து மிகவும் முக்கியம். அடித்தல் திருத்தல் இல்லாமல், வார்த்தைகள் மற்றும் வரிகளுக்கு இடையே தேவையான இடைவெளியுடன் தெளிவாக எழுத வேண்டும். அது, விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும்.

 

• இவற்றை நினைவில்கொண்டு தமிழ்த் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

ஆங்கிலம்

தாய் மொழிக்கு அடுத்து, நாம் அதிகம் கற்றுவரும் இன்னொரு மொழி ஆங்கிலம். அதற்கான தேர்வை நம்பிக்கையோடு எழுதத் தயாராகுங்கள்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• ஆங்கிலத்தில் நன்கு படித்தாலும் மதிப்பெண் குறைவதற்கு முக்கியக் காரணம் ஸ்பெல்லிங் (Spelling) தவறாக எழுதுவதே. அதனால், நீங்கள் படிக்கும்போதே சிரமமான வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கையும் மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.

 

• அடிக்கடி Dictation வைத்து விளையாட்டு முறையில் வார்த்தைகளில் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்கலாம்.

 

• படித்த புதிய வார்த்தையை வாக்கியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொண்டால், கேள்வி பதில் மற்றும் கட்டுரை எழுதும்போது பயன்படும்.

 

• Synonyms, Antonyms எனப் பாடத்தில் உள்ளவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து எழுதிவைத்து, தினமும் படிப்பதால் ஞாபகசக்தி கூடும். குழுவில் சிறு தேர்வும் வைத்துக்கொள்ளலாம்.

 

• மனப்பாடப் பகுதியில் Poem எழுதும்போது, தலைப்பு மற்றும் எழுதியவர் பெயரையும் எழுதினால், கூடுதல் பலன் கிடைக்கும். Poem பகுதியை ராகமாகப் பாடிப் பழகினால் மறக்காமல் இருக்கும்.

 

• துணைப்பாடத்தில் வரும் (Supplementary Reading) கதையைத் திரும்பத் திரும்பப் படிப்பது, தேர்வின்போது எழுத எளிதாக இருக்கும். 

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• மொழிப் பாடத்துக்குக் கையெழுத்து மிக முக்கியம். தெளிவாக எழுதும்போது Presentation அழகாக இருக்கும்.

 

• பாடத்தைப் புரிந்துகொண்டு படித்தால்தான், கேள்வியைச் சற்று மாற்றிக்கேட்டாலும் தகுந்த பதிலை எழுத முடியும். அதனால், புரியாத பகுதியை ஆசிரியர் அல்லது நண்பர்களிடம் கேட்கக் கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்.

 

• ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியா விட்டால், டிக்‌ஷனரியைப் பயன்படுத்துங்கள். அந்தச் சொல்லுக்குப் பொருள் பார்த்ததும், டிக்‌ஷனரியை மூடிவிடுங்கள். இன்னொரு சொல்லுக்கும் பொருள் தேடுகிறேன் எனப் படிக்கும் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.

 

• Grammar பகுதியில் உங்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் வருமோ, அந்தப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

 

• தன்னம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் படித்தால், மொழிப்பாடம் நம் கைவசமே.

- நா.கிருஷ்ணவேணி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, நல்லம்பாக்கம்.

கணக்கு

 

• கணக்குத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் வினாக்களைப் பகுத்துக் கொள்வது நல்லது.

 

• பத்து மதிப்பெண் வினாக்களான வடிவியல் மற்றும் வரைபடம் ஆகிய வினாக்களை முதலில் எழுதி, மதிப்பெண்களை ஈட்டி வைத்துக்கொண்டால் நம்மை அறியாமலேயே ஒரு தெம்பு வந்துவிடும். அதன் பிறகு, ஐந்து மதிப்பெண் வினாக்கள், இரண்டு மதிப்பெண் வினாக்கள், கடைசியாக ஒரு மதிப்பெண் என்று மாற்றி எழுதுவதும் ஒரு யுக்திதான்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• கணித அடிப்படைச் செயல்களை விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் செய்திடுங்கள்.

 

• முற்றொருமைகள், கணித வாய்பாடுகள் ஆகியவற்றைக் கறுப்பு நிறப் பேனாவால் எழுதி, கவனம் ஈர்க்கலாம். விடையைக் கட்டம் போட்டுக் காட்டலாம். சில கணக்குகளில் படிகளை அதிகம் நீட்டிக்காமல் சுருங்க எழுதி, தேவையான பகுதிகளை மட்டும் விடைத்தாளில் குறிப்பிடவும்.

 

• வடிவியலில் உதவிப்படம் அவசியம். உண்மைப்படத்தில் அனைத்துப் புள்ளிகளுக்கும் தவறாமல் பெயரிடுங்கள். பென்சிலை கூராக வைத்துக்கொண்டால் படங்கள் அழகாகும்.

 

• நுனி மழுங்கிய அளவுகோலைத் தவிர்த்து, புதிய அளவுகோலைப் பயன்படுத்தலாம். அளவெடுக்கும்போது பூஜ்ஜியம் இருக்கும் பகுதி மழுங்கி இருந்தால், அளவுகளை ஒன்றில் இருந்து தொடங்கலாம். அவ்வாறு தொடங்கினால் 10 செ.மீ. அளவெடுக்க, 11 செ.மீ. எடுத்தால்தான் சரியாக இருக்கும். அதனை மறந்துவிடாதீர்கள்.

 

• வரைபட வினாவில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கேற்ப அளவுத்திட்டங்களைக் குறிப்பிட வேண்டும். அளவுத்திட்டத்தைத் தாளின் மேற்புறம் அவசியம் எழுத வேண்டும் அதற்கும் மதிப்பெண் உண்டு. கட்டாய வினா கொடுக்கப்பட்டிருந்தால், அதற்கு அவசியம் விடை எழுதுங்கள்.

 

• ஒரு மதிப்பெண் வினாவில் மூன்று தகவல்களை நினைவில்கொள்ள வேண்டும். ஒன்று வினா எண், சரியான விடையைக் குறிக்கும் எழுத்து, சரியான விடை இவை மூன்றையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். சிலர் விடைக்குரிய எழுத்தை மட்டும் குறிப்பிடுவர். சிலர் சரியான விடையை மட்டும் குறிப்பிடுவர். அவ்வாறு இல்லாமல் மூன்றையும் குறிப்பிடுவதே சிறந்த முறையாகும்.

 

• வடிவியல் பெட்டியும் அதனுள் இருக்கும் அனைத்துக் கருவிகளும் சரியாக உள்ளனவா என முதல் நாள் சோதித்துக்கொள்ளுங்கள். தேர்வு அறையில் மற்றவர்களிடம் கருவிகளைக் கடன் கேட்காதீர்கள். கவராயம் தளர்வாக இல்லாமல் இருந்தால் மட்டுமே, வட்டங்களைச் சரியாக வரைய முடியும். எனவே, அதனைச் சோதித்து சரிசெய்யுங்கள்.

கணக்குத் தேர்வு கற்கண்டாக இனிக்க வாழ்த்துகள்.

- இரத்தின புகழேந்தி, அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.

அறிவியல்

அறிவியல் தேர்வை அசராமல் எழுதத் தயாரா?

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடைகள் அனைத்தையும் (வினா தேவையில்லை) கூடுமானவரை (முதல் பக்கத்தில்) ஒரே பக்கமாக சீரான இடைவெளிவிட்டு எழுத வேண்டும்.

 

• இரு மதிப்பெண்கள் வினாக்களை இரு பக்கமாக பிரித்து எழுதாமல் (அதாவது, சில வரிகளை ஒரு பக்கமும் மற்ற சில வரிகளை அடுத்த பக்கத்திலும் இல்லாமல்), ஒரே பக்கமாக வருமாறு எழுத வேண்டும்.

 

• ஐந்து மதிப்பெண்கள் உள்ள வினாக்களுக்கு, விடைகளைப் பத்தியாக எழுதாமல், தனித்தனி வரிகளாக (Point by Point) எழுத வேண்டும்.

 

• பொருத்துக வினாவுக்கு விடைகளை நேர் நேராக எழுத வேண்டும்.

 

• அறிவியல் தேர்வுக்கு அடிப்படையே அடிக்கோடிடுதல். சுருக்கமாக எழுதினாலும் விரிவாக எழுதினாலும், முக்கிய வார்த்தைகளைத் (key words) தெளிவாக பென்சிலால் அடிக்கோடிட வேண்டும்.

 

• உயிரியலுக்கு உயிராக இருப்பது படங்கள். அவை சிறியதாகவும் இல்லாமல், பெரியதாகவும் இல்லாமல் சரியான அளவாக இருக்க வேண்டும். பென்சிலால் வரையப்பட்ட படங்களே போதுமானவை.

 

• படங்கள் பேப்பரில் சற்றே இடது பக்கமாக வரையப்பட்டு, பாகங்கள் அனைத்தையும் வலது பக்கமாக வரைதல் நல்லது.

 

• ஒரு மதிப்பெண் வினாக்களைத் தவிர, மற்ற வினாக்களுக்குரிய விடைகளுக்கு (அடுத்தடுத்த விடைகளுக்கு) இடையே பென்சிலால் நீளமாகக் கோடிட வேண்டும்.

 

• நீலம் மற்றும் கறுப்பு நிறப் பேனாக்களைப் பயன்படுத்தி எழுதினால் மட்டும் போதுமானது. வேறு வண்ணங்கள் தேவையில்லை.

 

• அடித்தல் திருத்தல் இல்லாமல் அழகான கையெழுத்தில் சீரான அளவில் எழுத வேண்டும். அடுத்தடுத்த வரிகளுக்கு இடையே சீரான இடைவெளி இருக்க வேண்டும்.

 

• வினாத்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும் வினா எண்களையே பயன்படுத்த வேண்டும். நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ற வகையில் வரிசை எண்களைக் கொடுக்கக் கூடாது.

 

• கூடுமான வரை வரிசை எண்களை மாற்றி மாற்றி எழுதாமல் எழுதுவது நல்லது.

 

• எழுதி முடித்தபின் அனைத்துப் பக்கங்களையும் (அனைத்து வினாக்களுக்கும் விடைகள் எழுதப்பட்டுவிட்டதை) சரிபார்க்க வேண்டும்.

 

• வேதிவினைகளை அடிக்கடி எழுதிப் பார்த்துக்கொள்வது நலம். படங்களை வரைந்து பார்த்துக்கொள்வதும் சிறப்பானது.

துணிவோடு தேர்வை எழுதுங்கள். வெற்றி உங்கள் பக்கமே!

-ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

சமூக அறிவியல்

நாம் வாழும் சூழலைப் புரிந்துகொள்ள உதவும் சமூக அறிவியல் பாடத் தேர்வு எளிமையாகவே இருக்கும் இல்லையா?

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• தேர்வுக்குப் படிக்கும்போதே நண்பர்களோடு சேர்ந்து, வினாடி வினா போல பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.

 

• தேர்வு அறையில் வினாத்தாள் கொடுத்ததும், அதை இரண்டு முறை நன்கு வாசிக்க வேண்டும்.

• ஒரு மதிப்பெண் பெறும் வினாக்களுக்கு விடை அளிக்கும்போது, நான்கு வாய்ப்புகளையும் முதலில் படித்துவிட்டு சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள். ஆண்டுகள் வரும் விடைகளில் கூடுதல் கவனம் தேவை.

 

• அரசர்கள் மற்றும் ஆண்டுகள் பற்றிய விடைகளை நினைவில் வைத்துக்கொள்ள, வகுப்பில் ஏதேனும் உத்தியைக் கையாண்டிருந்தால் அவற்றை நினைவுபடுத்திச் செய்யுங்கள்.

 

• வரலாற்றுப் பாடத்தில் வரும் அரசர்கள் மற்றும் திட்டங்களின் பெயர்களில் வடமொழி எழுத்துகள் வரும். எனவே, அவற்றை எழுதுகையில் கவனமாக இருக்க வேண்டும்.

 

• வரைபடப் பகுதியே அதிக சிரமம் இல்லாமல், மதிப்பெண்களைப் பெற்றுத்தருவது. எனவே, அதை ஒருபோதும் தவறவிடாதீர்கள். வினாத்தாளில் என்ன கேட்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றைத் தெளிவாக, அடித்தல் திருத்தல் இல்லாமல் குறிக்கவும்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• விடைகள் அளிக்கும்போது புத்தகத்தில் படித்ததை அப்படியே எழுதாமல், உங்களின் சொந்த நடையில் எழுதுங்கள். அதற்காக, வளவள என எழுதி, அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. குறித்த நேரத்தில் தேவையானவற்றை மட்டுமே எழுத வேண்டும்.

 

• தேர்வின் கடைசி நேரம் வரை எழுதிக்கொண்டிருக்காமல், பத்து நிமிடங்களுக்கு முன்பே முடிக்கும்படி திட்டமிட்டு எழுதுங்கள். எழுதி முடித்ததும் அவற்றை ஓர் ஆசிரியரைப் போல படியுங்கள். அப்போதுதான் தவறுகள் கண்களுக்குப் புலப்படும். உடனே அவற்றைத் திருத்தி எழுதுங்கள்.

கவனம் சிதறாமல் தேர்வை எழுதி வெற்றிபெற வாழ்த்துகள்.

- கே.ஆர்.செல்வமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

பயத்தை வெல்வோம்!

தேர்வு என்றதுமே மாணவர்களுக்கு உடனே பதற்றம் தொற்றிக்கொள்ளும். அந்தப் பதற்றத்தில் படித்ததெல்லாம் மறந்து, தேர்வைச் சரியாக எழுத முடியாமல் போய்விடலாம். இந்தத் தேர்வு பயத்தை எளிதாக வென்றுவிடலாம். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்?

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• முதலில் நேர்மறையான எண்ணங்களோடு தேர்வை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

 

• தேர்வு என்பது படித்ததை ஆசிரியரோடு பகிர்ந்துகொள்வதுதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

 

• எப்போது படிக்க ஆரம்பித்தாலும் கடினமான பகுதியை முதலில் படித்துவிட வேண்டும். கடின பகுதிகள் அதிகம் இருப்பின், அவற்றை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் படியுங்கள்.

 

• படிக்கும்போது அரை மணிக்கு ஒருமுறை, ஐந்து நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். ஐந்து நிமிடங்களில் முடிவடையும் விளையாட்டை ஆடலாம். இப்படிச் செய்வது ஒட்டுமொத்த படிப்புச் சுமையைத் தூக்கிச் செல்வதுபோன்ற அச்சத்தை விலக்கிவிடும்.

 

• மனப்பாடம் செய்து படிக்கும்போதுதான் மறந்துவிடும். பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தால், பயம் உங்கள் அருகில்கூட வராது.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• தேர்வு எழுதும்போது சூத்திரங்கள் அதிகமாக மறந்துவிடும். அதனால், பேருந்தில் செல்லும்போது, சூத்திரங்களை மனதில் சொல்லிக்கொண்டே செல்லுங்கள்.

 

• சிலர் நடந்துகொண்டே படிக்கும் பழக்கம் உண்டு. அப்படிச் செய்யும்போது எளிதில் சோர்ந்துவிடுவர். படிப்பிலும் முழுக்கவனம் செல்லாது. படிக்கவேண்டிய பகுதிகள் குறையாமல் பயத்தை அளிக்கும். எனவே, அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதே நல்லது.

 

• தினமும் காலையில் தியானம் செய்து, மனதை ஒருநிலைப்படுத்திப் படிக்கத் தொடங்குவது நல்லது.

 

• எல்லாம் சரியாகச் செய்தாலும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு ஒத்துவராத உணவைச் சாப்பிட்டு, உடல் சுகம் இல்லாமல் போய்விட்டால் படிப்பது சிரமம் ஆகிவிடும்.

 

• தேர்வு அறைக்கு முன்கூட்டியே சென்று, நம்பிக்கையோடு வினாத்தாளை வாங்குங்கள். பயத்துக்கே பயம் காட்டலாம்.

-எஸ். இந்துமதி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, பாப்பாபட்டி, கறம்பக்குடி, புதுகோட்டை.

தேர்வு நேரத்தில்

மது எல்லா நாள்களையும் போலத்தான் தேர்வு நேரம். உடலையும் மனத்தையும் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியது அவசியம்.

தேர்வு நேரத்தில் செய்ய வேண்டியவை!

 

• ‘இந்தப் பாடம் எனக்குப் பிடிக்காது,’ ‘இதுல நான் வீக்' போன்ற எதிர்மறை எண்ணங்களை விட்டொழியுங்கள்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• அதிகாலை எழுந்தவுடன் கடினமான பாடங்களையும், சற்று அசதியான நேரங்களில் எளிய பாடப்பகுதிகளையும் படிக்கலாம்.

 

• ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தோடும் ஒரு வெள்ளைத்தாளை ஒட்டவும். அதில், கடினமான மற்றும் அதிக கவனம் தேவைப்படும் பாடப்பகுதிகளின் பக்க எண்களைக் குறித்து வைத்தால், தேர்வுக்கான  முதல் நாள் திருப்புதலில் சிரமம் இருக்காது. முக்கியமான பகுதிகள் எதுவும் விடுபடாமலும் இருக்கும்.

 

• நீண்ட நேரம் தொடர்ந்து படிப்பதால் கண்கள் சோர்வடையும். அந்தச் சமயங்களில் உங்களது உள்ளங்கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து இரு கண்களுக்கும் ஒத்தடம் கொடுக்கலாம்.

 

• தேர்வுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்களை செக் லிஸ்ட் போட்டு எடுத்துவைத்தால், எதுவும் விடுபடாமல் இருக்கும். புது பிராண்டு பேனாவை வாங்கி, தேர்வு அறையில் புதிதாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும், வழக்கமாகப் பயன்படுத்தும் பேனாவைத் தெரிவுசெய்தல் நலம்.

 

• தேர்வு அறைக்கு 15 நிமிடங்களுக்கு முன்கூட்டியே சென்றால், கடைசி நிமிட பதற்றத்தைத் தவிர்க்கலாம். அதேபோல தேர்வு நேரம் முடிவடைவதற்கு 10 நிமிடங்கள் முன்பே முடித்து, விடைத்தாளை ஒருமுறை செக் செய்வது நலம்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• வினாத்தாளை நன்கு படித்து விடை எழுதத் தொடங்கிய பின், வினாக்களுக்குரிய சரியான பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றைத் தெளிவாகவும், சரியாகவும் குறிப்பிட்டு எழுதவும். படிக்காத வினாக்கள் கேட்கப்பட்டிருந்தால் பதற்றம் அடையாமல், தெரிந்த வினாக்களுக்குத் தெளிவாக பதில் எழுதுங்கள்.

தேர்வு நேரங்களில் செய்யக்கூடாதவை:

 

• இதுவரை படிக்காமல் விட்டுவைத்திருந்த எந்தவொரு பாடப்பகுதியையும் தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் புதிதாகப் படிக்க வேண்டாம்.

 

• எண்ணெய்ப் பதார்த்தங்கள், மைதாவால் செய்த உணவுப் பொருள்களைத் தவிர்க் கலாம். கூர்மையான பொருள்களோடு விளை யாடாதீர்கள். 

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• தேர்வுக்கு முந்தைய நாள், நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பதைத் தவிர்க்கவும். இது, தேர்வு நாளன்று சோர்வை ஏற்படுத்தும். எனவே, போதுமான உறக்கம் அவசியம்.

 

• விடைத்தாளில் அதிக அளவில் அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாது. இது, விடைத்தாள் திருத்துபவருக்கு உங்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

 

• தேர்வு அறையில் மேற்பார்வையாளர் வழிகாட்டலின்படி நடந்துகொள்ளுங்கள். மற்ற மாணவரோடு பேச முயற்சிக்காதீர்கள்.

 

• ஒரு தேர்வு முடிந்தவுடன் அன்றைய தவறுகளை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர்த்து, அடுத்த நாள் தேர்வுக்கு நம்பிக்கையோடு தயாராக வேண்டும்.

- பா.பிரீத்தி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, சீர்ப்பனந்தல், சங்கராபுரம்.

காலத்தை வசப்படுத்துவோம்!

வ்வளவு விலை கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதது நேரம். அதனால், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். தேர்வு நேரத்தில் நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். எந்த நேரத்தில் எதைச் செய்யவேண்டும், எவ்வளவு நேரத்தில் அந்த வேலையை முடிக்கவேண்டும் என்ற சூட்சுமம்தான் நேர மேலாண்மை!


தேர்வுக்கு முன்: 

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• படிக்க வேண்டியவற்றைப் பட்டியலிட்டு தேர்வுகால அட்டவணை ஒன்றை உருவாக்கி, அதன்படி படித்தால் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தலாம்.

 

• important points-க்கு படிக்கும்போதே அடிக்கோடிட்டுப் படிக்கலாம். அப்படிப் படித்தால், Revise செய்யும்போது நேரம் மிச்சமாகும்.

 

• காலையில் எழுந்திருப்பதும், இரவு தூங்கச் செல்வதும் திட்டமிட்டபடி மாறாமல் இருக்கட்டும்.

 

• நண்பர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்க நினைத்தால், அதை மட்டும் பேசுங்கள். இல்லையேல், உங்கள் நேரம் மட்டுமல்ல, நண்பரின் நேரமும் பாதிக்கும்.

 

• செல்போன், தொலைக்காட்சி போன்ற வற்றை இயன்றவரை தவிர்த்துவிடுங்கள்.

 

• அறிவியலில் படங்கள் வரைய பலமுறை பழகிக்கொள்ளுங்கள். பள்ளி ஓவிய ஆசிரியரிடம் எளிய முறையில் வேகமாக வரையக் கற்றுக்கொள்வது, தேர்வில் நேரத்தைச் சேமித்துத் தரும்.

 

• தேர்வு நாளன்று வழக்கமாகப் பள்ளிக்குச் சென்றடையும் நேரத்தை மனதில்வைத்துப் புறப்படுங்கள். பேருந்தில் செல்பவர்கள் இன்னும் முன்கூட்டியே செல்வது நல்லது.

தேர்வு அறையில்:


 

• வினாத்தாளைப் படிக்கும்போதே தெளிவாகவும் பொருள்படும்படியும் படிக்கவும்.

 

• மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு குறித்த நேரத்தில் விடையளியுங்கள். விவேகமாகச் சிந்தித்து வேகமாக எழுதுங்கள்.

 

• நன்றாகத் தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுதுங்கள். பிறகு, கடினமான வினாக்களுக்கு விடையளியுங்கள்.

 

• பாட்டிலில் நீர் எடுத்துச் சென்றால், வகுப்பறையில் எழுந்து சென்று நீர் குடித்துவரும் நேரம் மிச்சமாகும்.

 

• மெயின் ஷீட்டில் சில வரிகள் எழுத இருக்கும்போதே அடிஷனல் ஷீட் கேளுங்கள். அறை கண்காணிப்பாளர் வருவதற்கும் அந்தப் பக்கத்தை எழுதி முடிக்கவும் சரியாக இருக்கும். இதன்மூலம், அவர் வரும் நேரத்தைத் தேர்வு எழுதப் பயன்படுத்தலாம்.

 

• கணிதத் தேர்வு தொடங்கும் முன்பே ஜியாமெட்ரி பொருள்களைத் தயாராக எடுத்துவைத்துவிட்டால், பயன்படுத்த எளிதாக இருக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்தவும் செய்யலாம்.

 

• தேர்வு எழுதும்போது அடுத்தவரைக் கவனிப்பதில் நேரத்தைச் சிதறவிடாதீர்கள்.

 

• பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு எழுதுவதை முடித்துவிட்டு, பக்க எண் முறையே தாள்களை அடுக்கிக் கட்டுங்கள். வினா எண்களைச் சரி பாருங்கள்.

தேர்வுக்குப் பின்:

 

• தேர்வை நீங்கள் எப்படி எழுதியிருந்தாலும், தேர்வு முடிந்து வெளியே வந்ததும், அதுபற்றி வீணாக விவாதிப்பது கூடாது.

 

• நண்பர்களுடன் விடைகளைச் சரிபார்த்துக்கொண்டோ, புத்தகத்தைப் புரட்டிக்கொண்டோ இருக்கக் கூடாது.

 

• அடுத்த நாள் தேர்வுக்குத் தேவையான பொருள்களைப் பட்டியலிட்டுச் சரிபார்த்து எடுத்துவைக்கவும்.

 

• எழுதிய விடைகளைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்தத் தேர்வுக்குத் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் தயாராகுங்கள்.

நொடிகளை வீணடிக்காமல், வெற்றிப்படி களாகப் பயன்படுத்துங்கள்.

- மூ.சங்கீதா அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

வினாத் தாளை நண்பனாக்குவது எப்படி?

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

நீங்கள் கண் விழித்துப் படித்ததைச் சரியாக எழுத, முதலில் வினாத்தாளைத் தெளிவாக அணுக வேண்டும். அதற்கான சில வழிமுறைகள் இதோ:

 

• வினாத்தாள் முழுவதையும் வாசியுங்கள். அதில் தெரிந்த கேள்விகள் எது என்பதைத் தேர்வுசெய்யுங்கள். கேள்வியை நன்றாகப் புரிந்துகொண்ட பிறகு, அதற்கான பதிலை எழுதத் தொடங்குங்கள். எழுதும்போதே பென்சிலால் முக்கியமான இடங்களுக்கு அடிக்கோடு இடவும்.

 

• வரையறு, வேறுபடுத்துக, ஒப்பிடுக, சமன்பாடு எழுதுக, என்றால் என்ன... போன்ற கேள்விகளைத் தேர்ந்தெடுத்தால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். ஆனால், இம்மாதிரியான கேள்விகளை எழுதும்போது, அதற்கான பதில் முழுமையாகத் தெரிந்தால் மட்டும் எழுதவும். சிறிய பிழைகூட மதிப்பெண்ணை இழக்கச் செய்துவிடும்.

 

• கேள்வியை எழுதத் தொடங்கும் முன்பு, அதனை எப்படி எழுதப்போகிறோம் என்பதை மனதில் யோசித்து, திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் அதற்கான பதிலை எழுதவும்.

 

• சில சமயம் பாடப்புத்தகத்தில் இல்லாத வினாக்கள் கேட்கப்படலாம். இம்மாதிரியான கேள்விகளுக்கு விடையளிக்க முயன்றாலே, அதற்கு முழு மதிப்பெண் வழங்கப்படலாம். ஆகவே, எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க முயற்சியுங்கள்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• படம் வரைந்து பாகம் குறி, சோதனையை விளக்கு போன்ற கேள்விகள் விடையளிக்கும்போது, படங்களைத் தெளிவாக வரைந்து பாகங்களைக் குறிப்பதே முழு மதிப்பெண்ணைப் பெற்றுத்தரும்.

 

• தெரிந்த வினாக்களுக்கான விடைகளை வேகமாக எழுத வேண்டும். அப்போதுதான் நேரம் கூடுதலாகக் கிடைக்கும். இந்தக் கூடுதலான நேரம், தெரியாத வினாக்களுக்கான விடையைக் குறித்துச் சிந்திக்க உதவும்.

 

• ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும்  குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுதுவதற்குத் திட்டமிடுங்கள். நேரத்தைத் திட்டமிடுதல் எல்லாப் பகுதி வினாக்களையும் எழுதுவதற்கு உதவும். 100 மதிப்பெண் எடுக்க வேண்டுமெனில், திட்டமிட்டுக் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையைச் சரியாக எழுதி முடிக்க வேண்டும்.

 

• ஒரு பதிலை எழுதும்போதே மற்றொரு கேள்விக்கான பதில், மனதில் தோன்றலாம். ஃபார்முலா, வேதிச் சமன்பாடு, சில முக்கிய வார்த்தைகள் தோன்றினாலும், அதனை பென்சிலால் கேள்வித்தாளில் குறித்துக்கொள்ளவும். அது, அந்தக் கேள்விக்கான பதிலை எழுதும்போது உதவும். மீண்டும் மறந்துபோனாலும் இதனைப் பார்த்து எழுதிக்கொள்ளலாம்.

 

• சரியான விடையளி போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, கொடுக்கப்பட்ட பதில்களில் கேள்விக்குப் பொருந்தாதது, வேறு கேள்விக்குரிய பதில் என உறுதியாக அறிந்த பதிலை பென்சிலால் அடித்துவிடவும். இப்படிச் செய்யும்போது குழப்பமான பதில்களை நீக்கிச் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

• எந்தக் கேள்விக்கும் பதில் தெரியவில்லை என்று விட்டுவிட வேண்டாம். நிச்சயமாக எல்லாக் கேள்விக்குமே 30 சதவீதம் பதிலை அறிந்துவைத்திருப்பீர்கள். ஆகவே, முயன்று எழுதிவிடுங்கள். அது, கணிசமான மதிப்பெண்ணைப் பெற்றுத்தரும்.

 

• விடைத்தாளை ஒப்படைக்கும் முன்பு நேரம் இருப்பின், நீங்கள் எழுதிய விடைகளைச் சரிபார்த்து தவறுகள் இருப்பின் திருத்த வேண்டும்.

- க.சரவணன், டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.

மறதிக்கு குட் பை!

தேர்வுக்கு இரண்டு எதிரிகள்... ஒன்று, பயம். அடுத்தது, மறதி. இவர்களை எளிதாக ஒழித்துக்கட்டலாமா?

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

• தேர்வு என்றாலே நம்மைத் தேடி வரும் பயம். படித்த பாடங்கள் மறந்துபோகும். அதனால், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் அறிவுரையைப் பெற்று, தேவையற்ற பயத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

 

• தேர்வு நேரத்தில் எந்த வேளையும் உணவைத் தவிர்க்கக் கூடாது. உணவைத் தவிர்த்தால், கண்டிப்பாகப் படித்ததை மறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், சத்தான காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

 

• தேர்வு நேரத்தில் படிக்கும் அளவுக்கு மூளைக்குத் தேவையான ஓய்வும் தேவை. அந்த ஓய்வு மனதைத் தெளிவாக்கி, மறதியை விரட்டி அடிக்கும்.

 

• படித்ததை முடிந்தவரை எழுதிப் பார்க்க வேண்டும். எழுதும் பழக்கம், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். விடையை மனதில் நன்கு பதியவைக்கும்.

 

• மனப்பாடம் செய்வதைவிட, நன்கு புரிந்து படிப்பதே நல்லது. அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், மறந்துபோகாத அளவுக்கு நினைவில் தங்கும்.

 

• உங்களின் கவனத்தைச் சிதறடிக்காது என்றால், நண்பர்களுடன் கலந்து படிக்கலாம். இப்படிப் படிப்பது ஞாபகசக்தியைக் கொடுக்கும்.

 

• அடிக்கடி மறக்கும் விஷயங்களை ‘க்ளூ' வார்த்தைகளாக எழுதிவைத்தால், மறக்கவே மறக்காது.

 

• தேர்வு நேரத்திலும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டாம். இது, உடலை ஆரோக்கியமாக்குவதுடன் மூளைச் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

 

• நீங்கள் பிரிலியண்ட்தான். ஆனாலும், ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்துகொண்டு படித்தால், மூளையின் கவனம் சிதறி மறதிக்கு வழி வகுத்துவிடும்.

 

• சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள். தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும். இது, உடல் சூட்டைக் குறைத்து, தலைவலி போன்றவை வராமல் படிப்பில் முழு கவனம்கொள்ள உதவும்.

 

• பாடத்தின் ஒரு பகுதியைப் படித்த பிறகு, அதை நினைவூட்டும் விதமாக கண்களை மூடி, படித்ததை நினைத்துப் பாருங்கள். இது, மறதியை விரட்டும் சிறந்த வழியாகும்.

 

• தேர்வுக்குத் தேவையான பொருள்களைச் சரியாக எடுத்துக்கொண்டு, வினாத்தாளை நிதானமாகப் படித்து எழுத ஆரம்பித்தால், பதற்றம் இல்லாமல் தேர்வை எழுதலாம்.

- தனலெட்சுமி கண்ணாந்தா, அ.உ.நி.பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.

தேர்வு நேரத்தில் தொலைக்காட்சி, செல்போன் நண்பர்களா... எதிரிகளா?

லைப்பைப் படித்தவுடனே அனைவரும் எதிரிகள்தான் என்று சொல்வீர்கள். தொலைக்காட்சி, செல்போன், இணையதளம் உள்ளிட்டவை நாம் பயன்படுத்தும் விதத்தி லேயே நண்பனா, எதிரியா என்பது முடிவாகும்.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

முதலில் தொலைக்காட்சியைப் பார்ப்போம். இதில் கேளிக்கை நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், மாணவர்களின் பாடம் சம்பந்தமானவை மற்றும் பொது அறிவு வளர்க்கும் நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. தேர்வு நேரத்தில், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டு, அந்த நேரத்தில் மட்டும் தொலைக்காட்சியைப் பார்க்கலாம்.

செல்போன்: செல்போன்கள் வழியாக க்விஸ் ஆப்களைப் பார்க்க முடியும். தமிழ்நாடு அரசே சிலவற்றை அளித்துவருகிறது. அவை, உங்கள் தேர்வுக்கு உதவும் என்றால் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அதேபோல பாடம் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர்கள் அல்லது நண்பர்களிடம் கேட்க செல்போனைப் பயன்படுத்தலாம். ஆசிரியரிடம் வாட்ஸ்அப் மூலம் கேள்வி கேட்டு, அதற்குரிய பதிலைப் பெறலாம்.

இணையதளம்: இணையத்தில் மாணவர்கள் உலாவுவதற்கு முன் safebrowsing ஆக்டிவேட் செய்துவிட்டு ப்ரௌஸ் செய்வது அவசியம். www.waytosuccess.org, www.padasalai.net, www.palli.in, www.kalvikural.com போன்ற பல்வேறு இணையதளங்கள் மாணவர்களுக்கான வினா வங்கிகள் பாடம் சார்ந்த பல்வேறு தகவல்களை வழங்குகின்றன. இவற்றைப் பார்ப்பதனால் தன்னுடைய ஆசிரியர் நடத்தும்முறை தவிர, பிற ஆசிரியர்கள் எவ்வாறு தங்கள் மாணவர்களைத் தயார்செய்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் முடியும்.

இணையத் தேடுதலில் கூகுள், பிங் போன்ற தளங்கள் மூலம் வினாக்களை டைப் செய்தால், அதற்குரிய விடைகள் வரும். அவை, ஆங்கிலத்தில் வந்தாலும் தமிழில் மொழிபெயர்க்கவும் முடியும். இணையத்தில் டிக்‌ஷனரியைப் பயன்படுத்தவும் செய்யலாம்.

இத்தனை வசதிகளை இணையம் உள்ளிட்ட டெக் விஷயங்கள் வழங்கினாலும், சுய ஒழுக்கமும் நேர மேலாண்மையும் மிக முக்கியம். மாணவர்கள் இவற்றிலேயே மூழ்கிவிடாமல் தொழில்நுட்ப உதவி தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- ஸ்ரீதிலீப், அ.மே.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்கள்

தேர்வு நேரத்தில் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களும் இருப்பர். அவர்கள் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ள அவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்குச் சில யோசனைகள்...

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!


 

• கண்ணாடி அணிந்துள்ள மாணவர்கள், மறக்காமல் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். இல்லையென்றால், தேர்வு எழுதுவதில் சிரமப்பட நேரிடலாம். ஏதேனும் ஒரு சூழலில் கண்ணாடி உடைய நேரிட்டால், மாற்று ஏற்பாடு செய்வதற்கு முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது.

 

• மாற்றுத்திறனாளி மாணவர்களை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வது என்பதை முதல் நாளே முடிவுசெய்ய வேண்டும். அப்போதுதான் தேர்வுக்குத் தாமதமின்றி வர இயலும்.

 

• தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மாணவர்கள், படிக்கும் ஆர்வத்தில் மருந்து எடுத்துக்கொள்ள மறந்துவிடக் கூடாது. தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் மருந்து சாப்பிடுவதாக இருந்தால், தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும்.

 

• திக்கிப் பேசும் மாணவர்களை யாரேனும் கேலி செய்தால், அதுபற்றித் துளியும் கவலைபடாமல் தேர்வுக்குத் தயாராகப் பழக்க வேண்டும். தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் ஏதேனும் கேட்க வேண்டும் எனில், எந்தத் தயக்கமும் இல்லாமல் கேட்கச் சொல்லுங்கள்.

 

• மாணவிகளுக்கு மாதவிடாய் சமயமாக இருப்பின், அதற்குத் தயார்நிலையில் அனுப்புங்கள். இல்லையென்றால், பதற்றத்தில் படித்தது எல்லாம் மறந்துபோகும் வாய்ப்பு அதிகம். எலுமிச்சை, இஞ்சிச் சாறு கலந்த ஜூஸ் போன்றவற்றை எடுத்துவந்து குடித்தால், அடிவயிற்று வலி குறைந்து நிம்மதியாகத் தேர்வு எழுதலாம்.

 

• நடக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. தற்போது அவர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அறைகள் கீழ்த் தளத்திலேயே ஒதுக்கப்படுகின்றன. பெற்றோர்கள் எங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே விசாரித்து, ஒருவேளை மாடியில் ஒதுக்கப்பட்டிருந்தால், அதை மாற்றி அமைக்கச் சொல்லவேண்டும்.

எல்லாவற்றையும்விட அவர்களின் தன்னம்பிக்கையை ஒரு துளிகூட குறைந்துவிடாமல் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருங்கள். எல்லா மாணவர்களைப்போல அவர்களும் தேர்வில் ஜொலிப்பார்கள்.

- து.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

செக் லிஸ்ட் 

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

ஹால் டிக்கெட்
ஐடி கார்டு
நன்றாக எழுதும் பேனாக்கள் இரண்டு.

இரண்டு பேனாக்களிலும் இங்க்... நிப் சரியான அளவில்.
சீவப்பட்ட பென்சில்கள் இரண்டு.

ஷார்ப்னர், எரேஸர்,
ஜியோமெட்ரி பாக்ஸ்
கறுப்பு மற்றும் நீல நிற ஸ்டிக் பேனாக்கள் (முக்கியமான பகுதிகளை அடிக்கோடு போடுவதற்கு)
கர்ச்சீஃப் (சாதாரண காட்டன் கர்ச்சீஃப்) 

விடைத்தாள்களைக் கட்டுவதற்கான நூல் (எதற்கும் கைவசம் இருப்பது நல்லது)

பரீட்சை கிளிப், அட்டை (தேவை என்றால்)

தண்ணீர் பாட்டில்.

தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லக்கூடாதவை:

செல்போன், கணித உபகரணப் பெட்டி, பவுச், கூரிய கத்தி, பிளேடு, குட்டிக் குட்டி பொம்மைகள், புத்தகங்கள், நோட்டுகள், அதிகமான பணம் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும்.
செய்யக்கூடாதவை:

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

தேர்வு அறைக் கண்காணிப்பாளர் தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது.

சக மாணவர்கள் பேப்பர் கொடுத்தால் வாங்கக் கூடாது.

யாரிடமும் எதையும் கடன் கேட்கக் கூடாது.

யாருக்கும் சைகை காட்டக் கூடாது.

வினாத்தாளில் தேர்வு எண் தவிர வேறு எதுவும் எழுதக் கூடாது.

எஸ்.ஏ- வை ஈஸியாக்கலாம் வாங்க!

தொகுப்பு: வி.எஸ்.சரவணன் படங்கள்: ச.வெங்கடேசன், வீ.சக்தி அருணகிரி, அ.குரூஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism