ஒரு மின்மோட்டார், பொதுவாக நிமிடத்துக்கு 1440 முறை சுழல்கிறது. உங்கள் வீட்டு மிக்ஸி அந்த வேகத்தில்தான் சுழல்கிறது. ஆனால், கிரைண்டரும் அந்த வேகத்தில் சுழல முடியுமா? பாதி அரைத்துக் கொண்டிருக்கையில் கிரைண்டர் 1440 RPM (Revolution Per Minute) வேகத்தில் சுழன்றால் என்னவாகும் என்று சற்றே எண்ணிப்பாருங்கள். உங்கள் அம்மாவோடு சேர்ந்து, நீங்களும் அப்பாவும் வீட்டுச் சுவர் மற்றும் தளங்களில் அப்பியுள்ள அரிசி மாவைச் சுரண்டிக்கொண்டிருக்க வேண்டும். அப்படியொரு நிலை நமக்கு ஏற்படாதிருக்க, மோட்டாரிலிருந்து கிடைக்கும் வேகத்தை மட்டுப்படுத்தி, கிரைண்டரைத் தேவையான வேகத்தில் சுற்றவைக்க ஓர் அமைப்பு வேண்டுமல்லவா?

அந்த அமைப்புதான் பற்சக்கரங்கள்! மோட்டார் மற்றும் எஞ்சினின் வேகத்தைக் குறைப்பது மட்டுமின்றி அதிகரிப்பது, இடம் மாற்றுவது, திசைமாற்றுவது என பல வேலைகளைப் பற்சக்கரங்கள்தான் செய்கின்றன. வாகனங்களிலும் எந்திரங்களிலும் தொழிற்சாலைகளிலும் பற்சக்கரங்களின் பணி இன்றியமையாதது.
எந்திரவியல் பாடத்தில், பற்சக்கரங்களைப் பற்றிப் படிப்பதுதான் மிக சுவாரசியமான பகுதி என்பார்கள். படத்தில் காணப்படும் (படம்1) பற்சக்கரங்களைக் கவனியுங்கள். இந்த ஒரு படத்திலிருந்து மட்டுமே நாம் எத்தனை விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் எனப் பார்க்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. சுற்றும் சக்கரத்துக்கு (Driver Gear) இணையான அச்சில் (Parallel Axis), சுற்றப்படும் சக்கரம் (Driven Gear) இருந்தால் ஆற்றல் அருகில் இருக்கும் அந்த அச்சுக்கு மாற்றப்படுகிறது. ஆனால், சுழலும் திசை மாறிவிடுகிறது.
2. திசை மாற்றம் கூடாது, அதே திசைச் சுழற்சிதான் வேண்டுமென்றால் இரண்டுக்கும் ஊடே திசைமாற்றிச்சக்கரம் (Idler Gear) ஒன்றைப் பொருத்திவிடலாம்.
3. சுற்றும் சக்கரத்தை விட சுற்றப்படும் சக்கரத்தின் பற்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால், சுழலும் வேகம் பாதியாகக் குறையும்.
விதம்விதமான பற்சக்கரங்களைக் கொண்டு, அச்சின் திசையை மாற்றுவது, கோணத்தை மாற்றுவது, வேகத்தை மாற்றுவது, சுழலும் திசையை மாற்றுவது, சுழலும் கோணத்தை மாற்றுவது, சுழற்சியிலிருந்து நேர்க்கோட்டு இயக்கத்துக்கு ஆற்றலை மாற்றுவது, ஒரு அச்சிலிருந்து பல அச்சுகளுக்கு இயக்கத்தை மாற்றுவது, சுழற்சி மாற்றத்துக்கிடையே தேவையான தடைகளை ஏற்படுத்துவது என ஏராளமான வேலைகளைச் செய்ய முடியும்.

எல்லாம் சரிதான், பற்சக்கரங்கள் என்றாலே வட்ட வடிவில்தான் இருக்கவேண்டுமா? படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள சதுர வடிவ பற்சக்கரத்தைக் (படம்2) காணுங்கள்! இது வேலை செய்யும் என்று நினைக்கிறீர்களா? யோசிக்கவும்!
விடை: நிச்சயமாக இந்தச் சதுர வடிவ பற்சக்கரங்கள் வேலை செய்யும். பற்சக்கரங்கள் இயங்குவது சுற்றுப்புறவடிவ (Perimeter) ஒற்றுமையின் அடிப்படையில்தான் என்பதால், வட்டம், சதுரம் மட்டுமின்றி எந்த வடிவமாக இருப்பினும் இயங்கும்.