Published:Updated:

`நீட்'டை வெல்ல உதவிக்குக் காத்திருக்கும் மொழிப்போர் தியாகியின் பேத்தி #Neet

`நீட்'டை வெல்ல உதவிக்குக் காத்திருக்கும் மொழிப்போர் தியாகியின் பேத்தி #Neet

தமிழ் மொழிக்காக உச்சபட்ச தியாகத்தைச் செய்த மொழிப்போர் தியாகி, அரங்கநாதன். அவரின் மகன் அன்பழகனின் மகளான கோமதி, சிறுவயதுமுதலே மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில் படித்துவந்தவர்.

`நீட்'டை வெல்ல உதவிக்குக் காத்திருக்கும் மொழிப்போர் தியாகியின் பேத்தி #Neet

தமிழ் மொழிக்காக உச்சபட்ச தியாகத்தைச் செய்த மொழிப்போர் தியாகி, அரங்கநாதன். அவரின் மகன் அன்பழகனின் மகளான கோமதி, சிறுவயதுமுதலே மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில் படித்துவந்தவர்.

Published:Updated:
`நீட்'டை வெல்ல உதவிக்குக் காத்திருக்கும் மொழிப்போர் தியாகியின் பேத்தி #Neet

ந்தியாவில் மற்ற மாநிலங்களைவிடவும் தனித்துவமானது தமிழ்நாடு. மாநில சுயாட்சி தொடங்கி இடஒதுக்கீடு வரை தமிழகம் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்துவருகிறது. அதில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, இந்தி எதிர்ப்புப் போராட்டம். 

மத்திய அரசு இந்தியைத் திணித்தபோது வெகுண்டு எழுந்து அதற்கு எதிராகப் போராடினர் தமிழக மக்கள். இந்தப் போரில் தமிழர்கள் தம் இன்னுயிரைக் கொடையாகக் கொடுத்துக் களமாடினர். 1965 ஜனவரி 26 அன்று, இந்தி ஆட்சி மொழியாகும் என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. தமிழே மூச்சாக வாழ்ந்த சிவலிங்கம் அன்றைய தினம் தன்னைத் தீக்கு இரையாக்கினார். அவரின் தியாகம் சென்னை, விருகம்பாக்கம் அரங்கநாதனை உலுக்கிவிட்டது. திராவிட இயக்கப் பற்றாளரான அரங்கநாதன், வீர விளையாட்டுகள் கற்றுத் தேர்ந்தவர். உடற்பயிற்சிக்கூடம் அமைத்து, இளைஞர்களுக்குக் பயிற்சி கொடுத்துவந்தவர். தமிழ் மொழிமீது இந்தி ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க, ஜனவரி 27-ம் நாள் நள்ளிரவில் தீக்குளித்தார். 

அப்போது அவர் எழுதியிருந்த கடிதத்தில், ``இந்திக்கு வால் பிடிப்பவர்களே, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லிவிட்டு இந்தியைப் புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!" எனக் குறிப்பிட்டிருந்தார். தீக்குளித்த அரங்கநாதனுக்கு வயது 34. மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்த நிலையில், தாய்மொழிக்காக இந்த மாபெரும் தியாகத்தைச் செய்தார். எண்ணற்றோரின் தியாகத்தால் இந்தித் திணிப்பு நிறுத்தப்பட்டது.

இப்படித் தமிழ் மொழிக்காக உச்சபட்ச தியாகத்தைச் செய்த மொழிப்போர் தியாகி, அரங்கநாதன். அவரின் மகன் அன்பழகனின் மகளான கோமதி, சிறுவயதுமுதலே மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில் படித்துவந்தவர். டியூசன் ஏதும் வைத்துக்கொள்ளாமலே 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1121 மதிப்பெண் பெற்றுவிட்டார். ஆனால், அவரின் கனவுக்குக் குறுக்கே நின்று வழிவிட மறுக்கிறது நீட் தேர்வு. அதுகுறித்து கோமதியிடம் பேசினேன்.

``நான் விருகம்பாகம் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் ப்ளஸ் டூ படிச்சேன். பயோ மேத்ஸ் குரூப். அப்பா டிவி ஷோரூமில் கிளீனராக வேலைப் பார்க்கிறாங்க. அம்மா ஹவுஸ் வொஃய்ப். டியூசன் வைத்துக்கொள்ளும் சூழல் இல்லை. அதனால், ஸ்கூலில் சொல்லிக்கொடுப்பதைப் புரிஞ்சுட்டு நல்லாப் படிச்சேன். அப்போதான் நீட் எக்ஸாம் பற்றி ஸ்கூல்ல சொன்னாங்க. அதுக்காக, அரசு தரும் பயிற்சிக்காக என்னையும் இன்னொரு பொண்ணையும் செலக்ட் பண்ணி, ஓ.எம்.ஆரில் இருக்கும் சத்யபாமா யுனிவர்சிட்டிக்கு அனுப்பினாங்க. நாங்க போன இரண்டாம் நாளே, அந்தப் பொண்ணு அங்கே இருக்க முடியலைனு வந்துட்டாங்க. நான் 23 நாளும் அங்கேயே இருந்து படிச்சேன்.

காலேஜ் லெக்சர்ஸ் வந்து கிளாஸ் எடுத்தாங்க. வீக்லி டெஸ்ட் உள்பட நிறைய மாடல் எக்ஸாம்ஸ் நடத்தினாங்க. இங்கிலீஷில் கிளாஸ் எடுத்ததால் ஆரம்பத்தில் புரிஞ்சுக்க கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் சமாளிச்சுட்டேன். நீட் எக்ஸாமை எழுதறதுக்கான தைரியமும் வந்துடுச்சு. எக்ஸாம் அன்னிக்கு என்ன மாதிரி டிரஸ் போட்டுக்கணும், எதெல்லாம் எடுத்துட்டு போகக் கூடாது எனத் தெளிவாகச் சொல்லியிருந்தாங்க. அந்த விஷயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எக்ஸாமில் கேட்டிருந்த கேள்விகள், என்.சி.ஆர்.டி புத்தகத்தில் இருந்தாம். அந்தப் புத்தகங்களை நாங்க கண்ணால் பார்த்ததில்லை. நாங்க படிச்ச பாடத்திட்டங்களில் அதிகபட்சம் 20 சதவிகித கேள்விகள் கேட்டிருந்தாலே அதிகம். என்னால் முடிஞ்ச அளவு நல்லா எழுதிட்டு வந்தேன்" என்று நம்பிக்கையுடன் வந்த கோமதிக்கு, மருத்துவப் படிப்புக்கான மதிப்பெண் கிடைக்கவில்லை.

என்.சி.ஆர்.டி பாடங்களிலிருந்தே அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என்றால், அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு என்ன மதிப்பு என்பதுதான் கல்வியாளர்கள் பலரின் கேள்வி. நீட் தேர்வு கேள்விகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்ததிலும் நிறைய குளறுபடிகள் என்ற செய்திகள் வந்தன. எது எப்படியோ, நீட் தேர்வு அரசுப் பள்ளியில் படிக்கும் எளியப் பொருளாதாரப் பிள்ளைகளுக்கு இடையூறாக இருந்துவருகிறது என்பதே பலரின் எண்ணம். அவர்களில் கோமதியும் ஒருவராகிவிட்டார். தற்போது, பொறியியல் படிப்பதற்கான முனைப்பில் இருக்கிறார். ஆனால், அவரது கனவு மருத்துவராக வேண்டும் என்பதுதான்.

``எனக்கு இப்பவும் டாக்டருக்குப் படிக்கவே விருப்பம். அதுக்காக, ஒரு வருஷம் காத்திருந்து அடுத்த வருட நீட் எக்ஸாம் எழுதவும் தயார். ஆனால், எங்க வீட்டுச் சூழல் நீட் கோச்சிங் பணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கு. யாராவது ஹெல்ப் பண்ணினால் நிச்சயம் நல்லாப் படிச்சு, நீட் எக்ஸாமை எழுதுவேன். சிலர் உதவறதாவும் சொல்லியிருக்காங்க. ஆனா, இப்பவரை அது முடிவாகத் தெரியலை. காத்திருக்கிறேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழகத்தின் சுயமரியாதையை உலகுக்கே அறிவித்த மொழிப்போர் தியாகியின் வாரிசு ஒருவரின் நியாயமான விருப்பத்தை, அதற்காக தன் உழைப்பை 100 சதவிகிதம் செலுத்தியும் தொடமுடியாத அந்த இலக்கை அடைய உதவ வேண்டியது, அம்மொழிப் போரின் பலனாக ஆட்சி பீடம் கிடைத்த அரசின் கடமை. தமிழ் மொழியை நேசிப்போரும் முன்வருவார்கள் என்றே நம்புவோம்.