Published:Updated:

வகுப்பறையில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய பூண்டி அரசுப் பள்ளி மாணவிகள்!

வகுப்பறையில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய பூண்டி அரசுப் பள்ளி மாணவிகள்!
வகுப்பறையில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய பூண்டி அரசுப் பள்ளி மாணவிகள்!

வகுப்பறையில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய பூண்டி அரசுப் பள்ளி மாணவிகள்!

ஞ்சை மாவட்டம், பூண்டியில் உள்ளது அந்த அரசு உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுபவர், ஜெயபிரபு. அவருடைய வகுப்பறையில் இரண்டு மாணவிகள் அழகாக நாதஸ்வரம் வாசித்த வீடியோவை, ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``கடந்த வாரம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது, தமிழர் கலை மற்றும் பண்பாடு பற்றிச் சொல்லிட்டிருந்தேன். மாணவர்கள் மத்தியில் தமிழர் கலைகள் பற்றி எந்த அளவுக்குத் தெரிஞ்சிருக்கு எனப் பார்க்க, `கலை சம்பந்தமா யாருக்கெல்லாம் என்னென்ன விஷயங்கள் தெரியும்?'னு கேட்டேன். இந்திரா காந்தி என்கிற மாணவி, `எனக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரியும்'னு சொன்னார். தொடர்ந்து, `எனக்குக் கரகாட்டம் தெரியும், சிலம்பம் சுற்றத் தெரியும்'னு பல மாணவர்கள் சொன்னாங்க. 

இந்தச் சின்ன வயசிலேயே நாதஸ்வரம் வாசிக்கத் தெரியும்னு இந்திரா காந்தி சொன்னது பிரமிப்பை ஏற்படுத்துச்சு. வகுப்பில் வாசிச்சுக் காட்ட முடியுமான்னு கேட்டதுக்குக் கொஞ்சமும் தயங்காமல் சம்மதிச்சார். தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டுட்டு, ஏற்பாடு பண்ணினேன். 'சார், என் அத்தை பொண்ணு பிரியதர்ஷினியும் நானும் சேர்ந்துதான் வாசிப்போம். வகுப்பறையிலும் சேர்ந்து வாசிக்கலாமா?'னு கேட்டார். பிரியதர்ஷினி அப்பா, தவில் வாசிக்கிறவர். அதனால், அவரையும் வரச்சொன்னோம். அவங்க கூட்டணி வகுப்பில் வாசித்தபோது மெய்சிலிர்த்துப் போயிடுச்சு. வகுப்பறைகளில் மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தவும் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கணும் புரிஞ்சது. புதிய பாடப்புத்தகத்தில், தமிழர் கலை குறித்தான இந்தப் பாடம் இடம்பெறாமல் இருந்திருந்தால், இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்காமலே போயிருக்கும். இந்த மாணவியரின் திறமையும் தெரியாமலேயே போயிருக்கும். இவங்க வாசித்துமுடிச்சதும், மற்ற மாணவர்களும் இசை, நடனம் என ஏதேனும் ஒன்றைக் கற்கப்போவதாக உறுதி எடுத்துக்கிட்டாங்க. எதிர்வரும் சுதந்திர தினத்தன்று எங்கள் பள்ளியில், ஊர்மக்களையும் பெற்றோர்களையும் வரவெச்சு இந்த மாணவியரை மறுபடியும் வாசிக்கச் செய்யலாம்னு இருக்கோம்'' எனப் பூரிப்புடன் பேசினார் ஆசிரியர் ஜெயபிரபு.

மாணவி இந்திரா காந்தி, ``எங்க ஆங்கில ஆசிரியர், எங்களுக்காக வகுப்பறை டெஸ்க்கை மேடை மாதிரி அமைச்சுத் தந்தாங்க. தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் நாங்க வாசிக்கிறதைப் பார்த்துப் பாராட்டினாங்க. பிரியதர்ஷினியும் நானும் குளோஸ் ஃப்ரண்ட்ஸ். மாமா வீட்ல கத்துக்கிறதுனால எங்க வீட்டுலேயும் கத்துக்க அனுப்பினாங்க. எனக்கு வருங்காலத்துல பி.ஹெச்.டி முடிச்சு மியூசிக் டீச்சர் ஆகணும்னு ஆசை'' எனப் புன்னகைக்கிறார்.

மாணவி பிரியதர்ஷினி, ``என் அப்பா தவில் வாசிக்கிறாங்க. ரெண்டாவது படிக்கும்போதே அப்பாகிட்ட கேட்டுட்டே இருந்தேன். ஏழாவது படிக்கும்போது நாதஸ்வர வகுப்பில் சேர்த்தாங்க. மூணு வருஷமா நாதஸ்வரம் கத்துக்கிறேன். மாரியம்மன் கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கிற செல்வம் சார்தான் எங்களுக்குக் கத்துக்கொடுத்தார். நானும் இந்திரா காந்தியும் சேர்ந்து நிறையக் கச்சேரிகளில் வாசிச்சிருக்கோம். ஸ்கூலிலும் என் ஃப்ரண்ட்ஸுகளுக்கு நாங்க நாதஸ்வரம் வாசிக்கும் விஷயம் தெரியும்ன்னாலும் இப்போதான் முதன்முதலா வாசிப்பைப் பார்த்தாங்க. ரொம்பப் பாராட்டினாங்க. எனக்கும் வருங்காலத்துல பி.ஹெச்.டி முடிச்சு மியூசிக் டீச்சர் ஆகணும்னு ஆசை'' என்றார் உற்சாகமாக.

பிரியதர்ஷினியின் அப்பா வீரையன், ``என் பொண்ணுக்குச் சின்ன வயசுலேயே இசை ஆர்வம் இருந்தது. நான் தவில் வாசிக்கிறதால் பொண்ணுக்கு நாதஸ்வரம் கற்றுக்கொடுக்க நினைச்சேன். காலையில் ஆறு மணிக்குக் கூட்டிட்டுப் போய் செல்வம் சார்கிட்ட விடுவேன். அவர்தான் பேஸிக் முழுக்க கற்றுக்கொடுத்தார். பிறகு, அவருடைய சொந்தக்காரர் மகாதேவன் சார்கிட்ட கத்துக்கிட்டாங்க. எங்க சொந்தக்காரங்களும் சொல்லிக்கொடுத்திருக்காங்க. சேலம் அ.சங்கர் என்பவர், யூ-டியூப்ல சினிமா பாடல்களை சுரத்தோடு கற்றுக்கொடுப்பார். அதைப் பார்த்தும் கத்துக்கிட்டாங்க. அவரை நாங்க சந்திச்சதில்லே. அவருக்கும் மனசார நன்றி சொல்லிக்கிறோம்'' என்றார் பரவசத்துடன். 

அடுத்த கட்டுரைக்கு