Published:Updated:

கற்றல் கற்பித்தலில் கலகல மாற்றங்கள்! - கல்வித்துறையில் புரட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கற்றல் கற்பித்தலில் கலகல மாற்றங்கள்! - கல்வித்துறையில் புரட்சி
கற்றல் கற்பித்தலில் கலகல மாற்றங்கள்! - கல்வித்துறையில் புரட்சி

ஞா.சக்திவேல் முருகன்

பிரீமியம் ஸ்டோரி

ம் பள்ளிக் கல்வித்துறையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு நல்ல மாற்றங்கள் பல, நடந்துவருகின்றன. இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸும்தான். 

கற்றல் கற்பித்தலில் கலகல மாற்றங்கள்! - கல்வித்துறையில் புரட்சி

பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் இந்த  மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வது, பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் எதிர்காலத் திட்டமிடலுக்கு உதவியாகவும் இருக்கும்.

இதுநாள் வரை தனியார் பள்ளிகள்,  பொதுத்தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விளம்பரம் செய்து சேர்க்கை நடத்திவந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், மாநில அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படுவது இந்த ஆண்டு கைவிடப்பட்டு, பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டன. இதை, கல்வியாளர்கள் மட்டுமன்றி பெற்றோர்களும் பெரிய அளவில் வரவேற்றார்கள்.   

கற்றல் கற்பித்தலில் கலகல மாற்றங்கள்! - கல்வித்துறையில் புரட்சி

தற்போது, பள்ளிக் கல்வித்துறையில் நடந்துள்ள முக்கிய மாற்றம், புதியப் பாடத்திட்டங்கள். இதற்கு ஆலோசனை வழங்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களும் அதற்கு அடுத்த அடுத்த கல்வியாண்டுகளில் முறையே 2, 7, 10, 12  மற்றும் 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களும் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இந்தக் கல்வியாண்டு (2017-18), 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்தோடு தகவல் தொழில்நுட்பவியல் பாடமும் சேர்க்கப்படும். இதுவரை பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு என்பது பெயர் அளவில் மட்டுமே நடைபெற்று வந்தததால்; தேசிய அளவில் நடக்கும் நீட், ஜேஇஇ போன்ற தேசியப் போட்டித் தேர்வுகளில், 11 ஆம் வகுப்புப் பாடத்திலிருந்து  கேட்கப்படும் சரிபாதிக் கேள்விகளுக்குப் பதிலளிக்க தமிழக மாணவர்களால் இயலவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில், இந்தாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு  உண்டு. 11ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் முக்கியத்துவம்பெறும் வகையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்துக்கும் இனி 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடைபெறும். ஒவ்வொரு ஆண்டிலும் மொத்த மதிப்பெண்கள் 600. இரண்டு ஆண்டையும் சேர்த்து 1200 மதிப்பெண்கள். இவ்வாறு நடைபெறும் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் 10 மதிப்பெண்களுக்குச் சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், மாணவர்களின் மனப்பாட வழிக் கற்றலைக் குறைத்து, புரிந்து படிக்கும் வகையில் மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    

கற்றல் கற்பித்தலில் கலகல மாற்றங்கள்! - கல்வித்துறையில் புரட்சி

வகுப்புவாரியான சீருடை, தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளும் படிக்கும் வகையில், கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்ப வகுப்புகளில் 25 சதவிகித ஏழைக்குழந்தைகள் சேர வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் அதைச் சரிவர செயல்படுத்தவில்லை. இந்த ஆண்டு முதல், அந்த இடங்களுக்குக் கணினி வழியில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒளிவுமறைவு இல்லாத சேர்க்கையைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதுதவிர, ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளையும் கல்வி அதிகாரிகளுக்குப் புத்துணர்வு வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தத்  திட்டமிட்டிருக்கிறார்கள்.

தற்போது, பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் மாற்றங்கள், நல்ல விளைவுகளையும் அகில இந்திய அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

தயச்சந்திரன் ஐஏஎஸ், கல்வித்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றதும், கைவிடப்பட்ட நிலையில் களையிழந்து காணப்பட்ட, ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்தும் பணியைத் துவங்கி இருக்கிறார். முதற்கட்டமாக, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் புத்தகங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு, ஒரு மாத கோடைக்காலப் பயிற்சி; இளைஞர்களுக்கு, ஊக்கப்படுத்தும் சிறப்புச் சொற்பொழிவுகள், ஐஏஎஸ் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேரடியாகக் கலந்துரையாடும் நிகழ்ச்சி என, நூலகத்தை நோக்கி இளைஞர்களைத் திருப்பியிருக்கிறார்.

இதுநாள் வரை தமிழகப் பாடநூல் கழகம் என்பது மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்களை மட்டுமே தயாரித்து வழங்கி வந்தது. இனி, மிகச்சிறந்த இலக்கியங்களையும், இதர மொழிகளில் இருக்கும் மிகச்சிறந்த படைப்புகளையும் மொழிமாற்றம் செய்ய வழி வகைசெய்திருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பாடப் புத்தகங்கள் தவிர்த்து தமிழக பாடநூல் கழகம் பல புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகங்களை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, புதிய பதிப்புகளை வெளியிடவும், அவற்றை மாவட்ட நூலகங்களுக்கும் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள நூலகங்களுக்கும் வழங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஊரகப் பகுதிகளில் உள்ள நூலகங்களையும் மாவட்ட நூலகங்களையும், இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்திவருகிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில், போட்டித் தேர்வுக்களுக்கான புத்தகங்களை அதிகளவில் நூலகங்களில் இடம்பெறச்செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் உள்ள ஆங்கில இதழ்களையும் தமிழ் இதழ்களையும் நூலகங்களில் இடம்பெறச் செய்து, அவற்றை, கடைக்கோடியில் உள்ள மாணவர்களும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆக்கபூர்வமான மாற்றங்களைச் சுட்டிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு