Published:Updated:

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!
விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்படங்கள்: எஸ்.தேவராஜன்

பிரீமியம் ஸ்டோரி

கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்வது, விளையாடுவது, பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது என்று மட்டுமே இல்லாமல், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துக்கு உதவும் வேளாண்மை நிலையத்துக்குச் சென்றால் என்ன என்ற யோசனை வந்தது. எங்கள் கடலூர் மாவட்டம், பாலூரில் இருக்கும் வேளாண்மை மற்றும் காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சில சுட்டிகளையும் அழைத்துக்கொண்டு சென்றேன். பரந்து விரிந்த பசுமையான பண்ணை, குளுகுளு காற்றுடன் எங்களை வரவேற்றது. அந்த இடத்தின் சிறப்பின் சில துளிகள் உங்களுக்காக...  

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் 1905-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வடகிழக்கு மண்டல விவசாயிகள் நலனை முன்னேற்றவும் வேளாண்மை ஆராய்ச்சிக்கு இரண்டாவது மாதிரி பண்ணையாகவும் அமைந்ததுள்ளது.    

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

வேளாண்மையில் பல புதுமைகளை எளிமையாகக் கையாளும் விதத்தில், இந்நிலையம் பல்வேறு வழிமுறைகளை ஆய்வுசெய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்காகப் பல வேளாண்மை தொழில்நுட்ப யுக்திகளைக் கண்டறிந்துள்ளது. சரியான பருவத்தைக் கண்டறிதல், பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களைத் தேர்வுசெய்தல், சரியான இடைவெளி, உரமிடும் முறை, நீர்ப்பாசன முறைகள், களை கட்டுப்பாடு முறைகள், பயிர் பாதுகாப்பு யுக்திகள் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகிறது. 

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

1981-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைவதற்கு முன்பே, 1939-ம் ஆண்டு பாலூர் (கார்த்திகை சம்பா) என்ற நெல் ரகத்தையும் 1942-ம் ஆண்டு பாலூர் 2 (பூம்பாலை) என்ற நெல் ரகத்தையும் அறிமுகப்படுத்தியது.  1946-ம் ஆண்டு பாலூர் - 1 என்ற கேழ்வரகு ரகத்தையும் இந்நிலையம் கண்டுபிடித்தது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 1989 முதல் காய்கறி ஆராய்ச்சி நிலையமாகவும் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில்தான் 72% பலா உற்பத்தியாகிறது. 1992-ம் ஆண்டு பாலூர் 1 என்ற தரமான பலா ரகத்தைக் கண்டுபிடித்தது. இந்த ரகமானது வருடத்துக்கு இரண்டு முறை காய்க்கும். பிசுபிசுப்பற்ற சுவைமிக்க சுளைகள் இதன் சிறப்பு. இந்த ரகத்தில் வருடத்துக்கு 15,000 ஒட்டுச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்கப்படுகின்றன.  

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

பாகல், கத்திரி, மிளகாய், வெண்டை, புடலங்காய் ஆகியவற்றில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, வெள்ளரி போல அப்படியே சாப்பிடும் வகையில் புதிய வகை சுரைக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. 2013-ம் ஆண்டு இந்த நிலையம் கண்டறிந்த சிறுகீரை ரகம், மூன்றே வாரங்களில் விளைந்து பயனளிக்கிறது.     

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

தரமான விதைகளை இயற்கையான முறையில் வருடத்துக்கு 1,600 கிலோ அளவு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளிக்கிறது இந்த நிறுவனம். இங்கு மண்புழு உரம், மலர்கள் சாகுபடி, மாடித்தோட்டம் எனப்பல வழிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.   

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

இயற்கை வேளாண்மையில் இணையற்று விளங்கி விவசாயிகளுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக விளங்கும் பாலூர் ஆராய்ச்சி நிலையத்தின் மண்ணைத் தொட்டு வணங்கிவிட்டு விடைபெற்றோம்.

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

தி.ஸ்ரீ ஸ்வர்ணா, P.S.B.B மில்லெனியம் ஸ்கூல், கடலூர்.

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

செ.சௌமித்ரா, P.S.B.B. மில்லெனியம் ஸ்கூல், கடலூர்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு