Published:Updated:

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!
காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

பிரீமியம் ஸ்டோரி

சிவகாசி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது, பட்டாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் குஷிப்படுத்தும் பட்டாசுகள் தயாராகும் சிவகாசியில்தான், குழந்தைகள் முதல் தாத்தா, பாட்டிகள் வரை குஷியாகும் இன்னொரு விஷயமும் தயாராகிறது. அதுதான், கதைப் பட்டாசு. புரியலையா... அதாங்க, காமிக்ஸ்.  

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பிரபலமான காமிக்ஸ் புத்தகங்களை, 45 ஆண்டுகளாகத் தமிழில் கொடுத்துவரும் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் நிறுவனம்  இங்குதான் இருக்கின்றன.

‘இரும்புக் கை மாயாவி’, ‘டெக்ஸ் வில்லர்’, ‘ஸ்பைடர்’, ‘லக்கி லுக்’, ‘கேப்டன் பிரின்ஸ்’ என உலக காமிக்ஸ் நாயகர்களை எல்லாம் தமிழில் பேசவைத்தவர்கள், சிவகாசியைச் சேர்ந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ். அங்கே ஒரு விசிட் அடித்தோம். முத்து மற்றும் லயன் காமிக்ஸ் பதிப்பாளர் விஜயன், புதிய காமிக்ஸ் கதைகளை வாங்கிவருவதற்காக வெளிநாடு சென்றிருக்க, அவரின் சகோதரர் பிரகாஷ் குமார் நம்மை அன்புடன் வரவேற்றார்.   

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

பார்த்ததுமே வாரி எடுத்துக்கொள்ளத் தோன்றும் வகையில், வரவேற்பறையில் காமிக்ஸ் புத்தகங்களை அடுக்கிவைத்திருக் கிறார்கள். ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டிப் பார்க்கும்போதே, அந்த காமிக்ஸ் உலகத்துக்குள் நுழைந்துவிட்ட உணர்வு. கேப்டன் டைகருடன் சேர்ந்து நாங்களும் குதிரையில் பாய்ந்துசென்றோம். ரிப்போர்ட்டர் ஜானியுடன் சேர்ந்து துப்பறிந்தோம். இரும்புக்கை மாயாவியின் மின்சார அதிர்வு, எங்கள் உடம்பிலும் பாய்ந்தது. லக்கி லுக்கும் அந்த நான்கு பொடியர்களும் எங்களைக் கிச்சுக் கிச்சு மூட்டினார்கள். கிராஃபிக்ஸ் காமிக்ஸ்களின் அட்டைப் படங்கள் ஒவ்வொன்றும் எங்கள் நேரத்தை இமைக்கா நொடிகளாக மாற்றின. இன்று முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் அந்த இடத்தைவிட்டு அசையத் தோன்றாது போலிருந்தது.    

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

‘‘அப்புறம் வந்து, பிடிச்ச காமிக்ஸை எடுத்துப் படிங்க. இப்போ, காமிக்ஸ் பிரின்ட் பண்ற இடத்துக்குப் போகலாம் வாங்க’’ என்று அழைத்துச் சென்றார், பிரகாஷ் அங்கிள்.

 உள்ளே, சத்தத்துடன் இயங்கிக்கொண்டிருந்த அச்சு இயந்திரத்தின் வழியே, புதிதாக வெளிவரப்போகும் காமிக்ஸ் புத்தகத்தின் பக்கங்கள் அச்சாகி வந்துகொண்டிருந்தன. அதன் வாசனையே மாய உலகத்துக்கு அழைத்துச் சென்றது.

‘‘காமிக்ஸ் பிரின்டிங் பிரஸ்ஸுக்கு போகப்போறேன்னு சொன்னதும் என் அப்பா, அவர் சின்ன வயசுல படிச்ச காமிக்ஸ் பற்றியெல்லாம் சொல்லி அனுப்பினார். எத்தனை வருஷமா நீங்க காமிக்ஸ் வெளியிடுறீங்க அங்கிள்?’’ எனக் கேட்டோம்.    

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

‘‘எங்க முதல் காமிக்ஸ் புத்தகம் வெளியானபோது, அநேகமா உங்க அப்பாவே குழந்தையா இருந்திருப்பார்’’ என்று சிரிப்புடன் ஆரம்பித்தார் பிரகாஷ் குமார்.

‘‘எங்களுக்குப் பூர்வீகம், மதுரை. சிவாகாசியில் தொடங்கப்பட்ட ஆரம்ப கால அச்சகங்களில் எங்களுடையதும் ஒன்று. எங்கள் தந்தை சௌந்தர பாண்டியனுக்குப் புத்தகங்கள் படிக்கிறதில் ரொம்ப ஆர்வம். நல்ல ஆங்கிலப் புலமையும் அவருக்கு இருந்துச்சு. வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் காமிக்ஸ் கதைகளை வாங்கிப் படிப்பார். அதைத் தமிழிலும் கொண்டுவந்தால், எல்லோரும் படிச்சு சந்தோஷப்படுவாங்களேனு நினைச்சார். பல வெளிநாட்டுப் பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் தொடர்புகொண்டு பேசினார். அவர்களிடம் சட்டப்படி கதைகளுக்கான உரிமை வாங்கி, தமிழில் வெளியிட ஆரம்பிச்சார். அப்படித்தான், 1972 ஆம் வருஷம் ‘முத்து காமிக்ஸ்’ என்கிற பெயரில் ‘இரும்புக் கை மாயாவி’ வெளிவந்தது. 1984 ஆம் ஆண்டு முதல் லயன் காமிக்ஸ் வந்துச்சு. மினி லயன், ஜூனியர் லயன், திகில் காமிக்ஸ் எனப் பல வெரைட்டிகளில் வெளியிட்டோம்’’ என்றார் பிரகாஷ் குமார்.    

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

‘‘சமீப காலமாக, காமிக்ஸ் படிக்கிறவங்க எண்ணிக்கை அதிகமாகி இருக்கு. புத்தகக் கண்காட்சிகளில் ‘இரும்புக் கை மாயாவி இருக்கா? ஸ்பைடர் காமிக்ஸ் இருக்கா... எனத் தேடிவந்து வாங்குறாங்க    

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

புதிய புதிய முயற்சிகளில் வெளியாகும் பல வெளிநாட்டு காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி வெளியிடுகிறோம். பொதுவா, நம் ஊரில் காமிக்ஸ் படிக்கிறவங்க, வளர்ந்த பிள்ளைகளும் பெரியவர்களும்தான். குழந்தைகளுக்கும் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் உண்டாகணும்னு அவங்களுக்குப் பிடிச்ச ஸ்மர்ப் போன்ற கேரக்டர்களின் காமிக்ஸ்களையும் வெளியிடுறோம். பெற்றோர்கள் காமிக்ஸ் படித்த அனுபவத்தைப் பிள்ளைகளிடம் சொல்லி, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும்போது, பிள்ளைகளுக்கும் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் வரும். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பது  ஓர் அனுபவம் என்றால், காமிக்ஸைப் புத்தகமாகப் படிப்பது, புதுவித அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். கற்பனை சக்தியையும் மகிழ்ச்சியையும் பெற, தொடர்ந்து காமிக்ஸ் படிங்க’’ என்று புன்னகையுடன் சொன்னார் பிரகாஷ் குமார்.

பை நிறைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

ஒருங்கிணைப்பு: செ.சல்மான்     

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

கு.ருக்மிணி, பெ.சி. சிதம்பர நாடார் ஆங்கில மே.நி. பள்ளி, விருதுநகர்.  

காமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்!

என்.ஏ.அருள் தர்ஷினி, நோபிள் பதின்ம மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு