Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திரானா தவளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திரானா தவளை
அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திரானா தவளை

ஆயிஷா இரா.நடராசன்

பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திரானா தவளை

ன்பு நண்பர்களே,

நான், இந்திரானா தவளை மிகுந்த பதற்றத்தோடு எழுதுகிறேன்.

உலகில், மொத்தம் 7,000-க்கும் மேற்பட்ட தவளை இனங்கள் உள்ளன. ஆனால், ‘இந்தியப் பகுதியிலேயே பரிணாமவியல்படி தோன்றிய ஒரே தவளை இனம், நாங்கள் மட்டும்தான்’ என்று உயிரியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.   

அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திரானா தவளை

மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களாக நாங்கள் இருக்கிறோம். மனித இனம், புவியில் தோன்றி ஒரு மில்லியன் ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், இந்திரானா தவளை அல்லது இந்திரானா குந்தியா எனும் நாங்கள், இந்த மண்ணில் 50 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறோம். ஆனால் நாங்கள், எப்போது வேண்டுமானாலும் ஒருவர்கூட மீதமின்றி அழிந்துபோய்விடும் அபாயத்தில் இருக்கிறோம் நண்பர்களே.

தண்ணீரிலும் நிலத்திலும் வாழ முடிந்தவர்கள் நாங்கள். உலகிலேயே மிகச் சிறிய தவளை இனம் இரண்டோ மூன்றோதான் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். அதில், நாங்களும் அடக்கம். எங்களது உடலின் மொத்த அளவு 33 மில்லி மீட்டர்தான். பழுப்பும் மஞ்சளும் கலந்த உடல்நிறம். எங்களது கால்களில், பொதுவாகத் தவளைகளுக்கு இருக்கும் செதில்கள் கிடையாது. ஆனால்,  அவற்றுக்குப் பதிலாகக் காற்றுப் பைகள் உள்ளன. இதனால், பல்லிகளைப்போல எங்களால் மரத்தில் ஏறவும் தண்ணீரில் நீந்தவும் முடியும். அடர்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில், உலர்ந்த இலைகளுக்கு நடுவே, வெளியில் தெரியாமல் எங்களது, பழுப்பு மஞ்சள் நிறம் காக்கிறது.

பலகோடி ஆண்டுகளாக, கிடைக்கும் பூச்சிகளையும் இலைப் புழுக்களையும் உண்ணுகின்றோம், எங்களது அபூர்வ குணமுடைய கழிவின்மூலம் காடுகளுக்கு உரம் தந்து செழிக்கவைக்கின்றோம் நாங்கள். ஆனால் மனிதன் சுற்றுலாவுக்காகவும் ஒரு மரக் காடுகளான யூக்லிப்டஸ், தேக்கு மரம் ஆகியவற்றை வளர்ப்பதற்காகவும் அவர்களின் பண வெறிக்காகவும் வனங்களைஆக்கிரமித்ததாலும் மிக வேகமாக நாங்கள் அழிந்துபோனோம்.

நாங்கள் வசிப்பது, வனாந்திரம். அருகில் நீர்நிலை இருக்க வேண்டும். தன்னிச்சையாக வளர்ந்த இயற்கைக் காடுகளே எங்கள் வாழிடம். அவைகளின் ஊடாக உங்கள் வாகனங்களை ஓட்டி, அவை வெளியிடும் கார்பன் மோனாக்சைடு புகை காற்றில் கலந்து, எங்கள் உணவு ராஜ்ஜியமான சிறு புழு பூச்சிகளை அழித்து, எங்களது சுவாசக் குழாய்களையும் நஞ்சாக்கி, பேரழிவை ஏற்படுத்திவிட்டீர்கள். இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் பாலித்தீன் பைகள் வேறு.

1986-ல், பேராசிரியர் டுபோயிஸ் எனும் ஜெர்மானிய உயிரியல் அறிஞர்தான் எங்கள் இனத்தை, முதன்முதலில் படம் பிடித்தவர். அதுவரை வெளியே தெரியாமலே வாழ்ந்து, வனத்தையே உயிர்ப்பித்த எங்கள் இனம், சென்ற ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் அமைப்பில் விநோதமான விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஆமாம் நண்பர்களே. எங்கள் இனம் 2020-ஆம் ஆண்டைப் பார்க்கப்போவதில்லையாம். எங்களைக் காப்பாற்றுங்கள். உங்கள் சந்ததிதான் எங்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு...

இந்திரானா தவளையின் பேரழிவு குறித்த விழிப்புஉணர்வை நண்பர்களிடையே ஏற்படுத்தவேண்டும்.

பாலித்தீன் பை பயன்பாட்டை ஒழிக்க வேண்டும்.

வாகனச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பரிசோதனைசெய்து, கார்பன் மோனாக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பிரசாரம் செய்ய வேண்டும்.

உங்களை நம்பித்தான், இந்தப் பெரிய வேலையை ஒப்படைக்கிறோம். செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி!

இப்படிக்கு,

இந்திரானா தவளை, மேற்குத்தொடர்ச்சி மலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு