Published:Updated:

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!
புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

ஸ்கூபி டூகிங் விஸ்வா

பிரீமியம் ஸ்டோரி

ஷாகி ரோஜர்ஸ், ஃப்ரெட் ஜோன்ஸ், டேஃப்னி ப்ளேக் & வெல்மா டின்க்லி. இந்த நான்கு பேரும் ஊர் ஊராகச் சுற்றி, பேய்களைப் பற்றிய தவறான கருத்துகளை விளக்குவதையே வேலையாகக்கொண்டவர்கள். ஆனால், அவர்களுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அருகில் வருவது, ஷாகியின் நாயான ஸ்கூபி டூ தான். அட, ஸ்கூபி டூ அவர்களுக்கு உதவ வரவில்லை. பயத்தில் நடுங்கி, அது ஷாகியின் இடுப்பில் ஏறி உட்காரவே வரும். ‘பயந்தாங்கொள்ளியான ஒரு பெரிய நாய்’ என்பது எப்படி நகைமுரணாக இருக்கிறதோ, அப்படித்தான் ஸ்கூபி டூ உருவான கதையும்.    

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

கார்ட்டூனில் வன்முறை: 1968-69ஆம் ஆண்டு, ‘தொலைக்காட்சியில் வரும் இளையர்களுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் வன்முறை அதிகமாக இருக்கிறது’ என்று அமெரிக்காவில் உள்ள பெற்றோர் சங்கம், போராட்டம் நடத்தியது. இவர்கள், குழந்தைகள் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தணிக்கைக்குழு ஒன்றை உருவாக்கினர். டாம் & ஜெர்ரி கார்ட்டூனை உருவாக்கிய ஹன்னா & பார்பெரா குழுமத்தின் கார்ட்டூன் நிகழ்ச்சிகள்தான் அதீத வன்முறையால் தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகளாக இருந்தன. சி.பி.எஸ் தொலைக்காட்சி நிர்வாகி ஃப்ரெட் சில்வர்மேன், பதின்ம வயதினருக்கான, குழு சார்ந்த கார்ட்டூன் தொடர்களைத் தயாரிக்கும்படியாக ஹன்னா & பார் பெராவிடம் கேட்டுக்கொண்டார். புகழ்பெற்ற பாடகர் ஃப்ரான்க் சினாத்ராவின் பாடலில் வந்த டூ-பி-டூ-பி-டூ என்ற வார்த்தைகளில்லா பாடல் முடிவைக் கருத்தில்கொண்டு, டூ மச் (Too Much) என்ற பெயரை, ஸ்கூபி டூ என்று மாற்றி, தொடருக்கு ஒப்புதல் அளித்தார், சில்வர்மேன். ஸ்கூபி டூ தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர் தொடங்கியது.

ஸ்கூபி டூ:
ஸ்கூபி, ஒரு சாப்பாட்டுப் பிரியன். எந்த ஒரு ஆபத்து வந்தாலும் (சிறியதோ, பெரியதோ), உடனே நண்பன் ஷாகியின் இடுப்பில் தாவி அமர்ந்துக்கொள்ளும் அளவுக்கு தைரியசாலி, அந்த ஏழு வயது ஸ்கூபி. இவர்கள் பயணம்செய்யும் வாகனத்தின் பெயர், மிஸ்டரி மிஷின்.

ஸ்கூபியின் நண்பன்: ஷாகி ரோஜர்ஸ், எப்போதுமே பச்சை நிற டி-ஷர்ட்டும், சாக்லேட் கலரில் பேன்ட்டும் அணிந்து, சாப்பிடுவதை மட்டுமே முழுநேரப் பணியாகக்கொண்ட ஷாகிதான், ஸ்கூபி டூவின் உற்ற நண்பன். கதையில் முக்கியமான கட்டங்களில், தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை மறந்து, ஷாகியும் ஸ்கூபியும் எங்காவது சென்று சாப்பிட ஆரம்பித்துவிடுவது, தொடரின் வாடிக்கையான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று.

குழுத் தலைவன் ஃப்ரெட் ஜோன்ஸ்: எதிரிகளைப் பிடிக்கத் தீவிரமாகத் திட்டமிடுவதில் வல்லவன், ஜோன்ஸ். ஆனால், அவனது திட்டங்களை ஷாகியும் ஸ்கூபியும் தொடர்ந்து சொதப்பி, எதிரிகளைத் தப்பவைத்து விடுவார்கள். கடைசி நேரத்தில் அவர்களை வளைத்துப் பிடிப்பது, இந்தத் தொடரின் முடிவில் தோன்றும் ஒரு ரெகுலரான காட்சி.     

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

டேஞ்சர் டேஃப்னி: ஊதா நிற உடையணியும் டேஃப்னி, ஒரு பெரிய செல்வந்தரின் மகள். அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வதாலேயே, இந்தப் பட்டப்பெயர் இவளுக்கு வாய்த்தது.

புத்திசாலி வெல்மா: அடிக்கடி தன்னுடைய கண்ணாடியைத் தொலைத்துவிட்டுத் தடுமாறுவதாகக் காண்பிக்கப்பட்டாலும், வெல்மாதான் இந்தத் துப்பறியும் குழுவின் மூளையாகச் செயல்படுபவள். ஷாகியும் ஸ்கூபியும் ஏதாவது வேலைசெய்ய மறுக்கும்போது, அவர்களுக்கு நொறுக்குத்தீனியை லஞ்சமாகக் கொடுத்து வேலை வாங்கும் வெல்மா, இந்தக் குழுவிலேயே உருவத்தில் மிகவும் சிறியவளாக இருந்தாலும், ஆபத்து நேரத்தில் குழு உறுப்பினர்கள் அனைவரையும் தன்னுடைய தோள்களில் சுமந்துகொண்டு ஓடுவதாகச் சித்திரிக்கப்படுவது, தொடரின் வழக்கமான காட்சி.

கதையின் அமைப்பு: இவர்களது வாகனம் அடிக்கடி ரிப்பேர் ஆகும். எங்கெல்லாம் வாகனம் ரிப்பேர் ஆகி நிற்கிறதோ... அங்கே, ஒரு சாகசம் காத்திருக்கும். பழைய பங்களாவில் இருக்கும் பேய், ஏரியாவையே பயமுறுத்தும் மர்ம உருவம், பயங்கரமான உருவங்கள் என்று பலரையும் விரட்டி அடிப்பதுதான் ஸ்கூபி டூ குழுவின் வேலை.    

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

டேஞ்சர் டேஃப்னி, வழக்கம்போல ஆபத்தில் சிக்கிக்கொள்வாள். ஃப்ரெட்டும் வெல்மாவும் அவளைத் தேடுவார்கள். ஷாகியும் ஸ்கூபியும் சாப்பாட்டுப் புராணத்தைத் தொடங்கியிருப்பார்கள். கதையில் வரும் மர்மத்தைக் கண்டறிய ஃப்ரெட்டும் வெல்மாவும் ஒரு பொறியை அமைப்பார்கள். ஆனால், அந்தப் பொறியில் ஸ்கூபியும் ஷாகியுமே சிக்கிக்கொள்வதுபோல அமைந்து, கடைசியில் ஸ்கூபியின் ஒரு தற்செயலான நடவடிக்கையால், எதிரிகள் மாட்டிக்கொள்வார்கள். இப்படியாக, பேய் மர்மங்கள் எல்லாமே ஏமாற்று வேலை என்பதைத் தொடர்ந்து மக்களுக்கு உணர்த்துவதாகக் கதை முடியும்.

ட்ரால் பிரிட்ஜில் மர்ம ராட்சஸன்:
புதிதாகத் திறக்கப்பட்ட பாலத்தில், ஒரு பெரிய ராட்சச உருவம் வந்து மக்களை மிரட்டுகிறது. அதைத் துப்பறியச் செல்லும் நமது குழுவுக்குமே ஆபத்துகள் வருகின்றன. அந்த ராட்சசன் யார்? உண்மையில் அவன் ராட்சசன்தானா... அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதை ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

ஜோ ரூபி & கென் ஸ்பியர்ஸ் (கதாசிரியர்கள்)

ஜோ ரூபி, முதலில் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் அனிமேஷன் துறையில் வரைகலைஞராகத்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு, எடிட்டிங், ராணுவம் என்று அவரது வாழ்க்கை திசைமாறிச் சென்றுக்கொண்டிருந்தது. ஆனால், கென் ஸ்பியர்ஸை அவர் சந்தித்த உடனே, அவரது வாழ்க்கை ஒரு புதிய கோணத்தில் திரும்பியது. இவரும் கென்னும் இணைந்து, இரட்டை எழுத்தாளர்களாக பல கதைகளைத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுதத் தொடங்கினார்கள். 1969ஆம் ஆண்டு இவர்கள் உருவாக்கிய ஸ்கூபி டூ என்ற கார்ட்டூன் தொலைக்காட்சித் தொடர் இவர்களது வாழ்க்கையை மட்டுமல்ல, பல தலைமுறையைச் சார்ந்த சிறுவர்களது ரசனையையும், நம்பிக்கையையுமே மாற்றியது.

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

ஐயவோ டகமாட்டோ (ஓவியர்) 

ப்பானியரான டகமாட்டோவின் தந்தை, அமெரிக்காவில் குடியேறியவர். 1945ஆம் ஆண்டு டகமாட்டோ வால்ட் டிஸ்னியில் சேர்ந்து, பல புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு வரைகலைஞராகப் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு, இவர் 1961ஆம் ஆண்டு டாம் & ஜெர்ரியைத் தயாரித்த ஹான்னா & பார்பெரா ஸ்டுடியோவில் சேர்ந்தார். இவர்தான் ஸ்கூபி டூவை வடிவமைத்தவர். ஜோ ரூபி, ஆர்ச்சி தொடரில் வரும் நாய் கதாபாத்திரத்தைப் போல ஒன்றை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.

டகமாட்டோ, தன்னுடைய சக பெண் ஊழியர் வீட்டில் வளர்க்கப்படும் கிரேட் டேன் வகை நாயின் குணாதிசயங்களை முழுவதுமாக கேட்டு, அதற்கு நேர் எதிரான குணாதிசயத்தைக் கொண்ட ஒரு நாயாக டூ மச் என்ற பெயருடன் இந்த நாயை உருவாக்கினார். அதுதான் பின்னர் பெயர் மாற்றப்பட்டு, ஸ்கூபி டூவானது.

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

கதை: Scooby Doo 81: Troll Bridge

கதாசிரியர்:
ஷோலி பிஷ் (Sholly Fisch)

ஓவியர்: வால்ட்டர் கார்ஸன் (Walter Carzon)

மொழி: ஆங்கிலம்

வயது:
5 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.

வெளியீடு: 2017, May 10

பதிப்பாளர்: DC Comics

புத்தக அளவு: 16.8 x 25.9 CM

பக்கங்கள்: 22

விலை:
2.99 $

கதை:
பேய், பிசாசு எல்லாம் எதுவுமில்லை என்பதை உணர்த்தும் இளைஞர் குழுவின் மற்றுமொரு சாகசம்.

கதை வரிசை: மொத்தம் 81 புத்தகங்கள்.

சிறப்புகள்:
1969 முதல் அமெரிக்கா உட்பட உலகின் அனைத்துச் சிறுவர் இலக்கிய விருதுகளையும் பெற்ற தொடர் இது. திரைப்படங்கள், கார்ட்டூன் தொடர், காமிக்ஸ், என்று ஸ்கூபி டூவின் ராஜாங்கம் தொடர்கிறது.

சிறப்பு அம்சம்:
இளம் வயதில் நாம் பார்க்கும் காட்சிகள் நம்முடைய மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிடும். ஆகவே இந்த வயதில் சரியானக் காட்சிப் படிமங்களை உருவாக்கினால், அது எதிர்காலத்தைச் சரியான வழியில் செம்மையாக வழிப்படுத்த உதவும். இந்தக் கோட்பாட்டை மனதில் கொண்டு இளம் சிறார்கள் மனதிலிருக்கும் பேய், பிசாசு மற்றும் அமானுஷ்யங்களைப் பற்றிய பயத்தையும் அச்ச உணர்வையும் போக்க உதவும் வகையில், உருவாக்கப்பட்டதே ஸ்கூபி டூ என்ற உலகப்புகழ்பெற்ற கார்ட்டூன் தொலைக்காட்சித் தொடர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு