வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (25/07/2018)

கடைசி தொடர்பு:13:46 (25/07/2018)

இந்தியா முழுக்க ஒரே உயர்கல்வி ஆணையம்... மத்திய அரசின் முடிவு சாதகமா, பாதகமா?

ஒற்றைத் தன்மை என்பதுதான் தற்போது ஆளும் அரசின் முக்கியச் செயல்பாடாக இருக்கின்றன.

இந்தியாவில் மிகப்பெரிய சிக்கலாகப் பார்க்கப்படுவது வேலையில்லாத் திண்டாட்டம். இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது இந்தியக் கல்விச் சூழல். இதை மையமிட்டுத்தான் `இந்திய உயர்கல்வி ஆணையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவின் உயர்கல்வி பற்றிய விஷயங்களை இதுவரை `பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)’ கவனித்துவந்தது. இந்தக் குழு, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, பல்கலைக்கழகங்களுக்கான நிதியை ஒதுக்குவது போன்ற பணிகளைச் செய்துவருகிறது; மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது. மத்திய அரசு, தற்போது இதைக் கலைத்துவிட்டுத்தான் உயர்கல்விக்கான `இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்ற ஒன்றைக் கொண்டுவருகிறது. இந்தியாவின் அனைத்துக் கல்வி அமைப்புகளையும் இதன்கீழ் கொண்டுவரப்பட்டு, இந்தியாவின் கல்வியைக் கட்டுப்படுத்தும் ஒரே அமைப்பாக இனி இந்த உயர்கல்வி ஆணையம் மட்டுமே செயல்படும்.

இது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும். இது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் சவடேகர், ``உயர்கல்விக்காக இனி இரண்டு அமைப்புகள் செயல்படும். அவற்றில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி சார்ந்த விஷயங்களிலும், உயர்கல்வி ஆணையம் தரத்திலும் கவனம் செலுத்தும். கல்வியின் தரத்தை உயர்த்தவும், உயர்கல்வியில் தரமான கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தன்னாட்சி அமைப்பைக் கொடுப்பதும்தான் இதன் நோக்கம். இதன்மூலம் கல்வி சார்ந்து மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதோ ஓ.பி.சி., எஸ்.சி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் மாற்றம் செய்வதோ இதன் நோக்கமல்ல'' என்று கூறுகிறார்.

பல்கலைக்கழக மானியக் குழு(யுசிஜி)

இதற்கு, இந்தியக் கல்வியாளர்களிடையே பெரிய எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ``கல்வியை, தனியார்மயமாக்கலின் மற்றொரு வழிமுறையே இது'' என்று அவர்கள் கூறுகின்றனர். ``இந்த ஆணையத்தின் மூலம், கல்வி நிறுவனங்கள் எளிதில் தன்னாட்சி அந்தஸ்தைப் பெற்றுவிட முடியும். இது தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும். அப்படித் தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அந்தஸ்து கிடைக்கும்போது, அவை குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளை மட்டுமே முன்னிலைப்படுத்தும். குறிப்பாக, மொழி இலக்கியங்கள், சமூகம் சார்ந்த கல்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தொழில் பிரிவு சார்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுவிடும். இது வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றால், உயர்கல்வியின் முக்கிய நோக்கமான ஆய்வுகளின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் அதிகமான கட்டணங்கள் செலுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுவிடும். இதனால் பெரும்பாலான மாணவர்களின் கல்வி தடைபட வாய்ப்புகள் இருக்கின்றன.

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசிடமிருந்து வரும் நிதியானது தற்போது மிகவும் குறைவாகவே இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரே ஆணையம் தீர்மானம்செய்யும் எனும்போது அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கவனித்து அவற்றுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவது என்பதோ, அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்பதோ இயலாதவை. எனவே, இப்போது இருப்பதுபோல மாநிலப்பிரகாஷ் ஜவடேகர் பல்கலைக்கழகங்கள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சரியாக இருக்கும். இதை மையமிட்டுத்தான் தமிழக முதலமைச்சர் இதை எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார். சமீபத்தில்கூட `இந்த உயர்கல்வி ஆணையத்தின் மூலம் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும். இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக் கனவு கேள்விக்குறியாக வாய்ப்பு அதிகரிக்கும். இதற்குப் பதிலாக மாநிலப் பல்கலைக்கழகங்களை மேம்படுத்தலாம்’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதீதமான அதிகாரம் மத்திய அரசின் கையில் சென்றுவிடும். அதே நேரத்தில் இதில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. நடுத்தரவர்க்க மாணவர்களின் கல்வியையும் அது பாதிக்கும். இப்படிப் பல்வேறு சிக்கல்கள் இந்த இந்திய உயர்கல்வி ஆணையச் செயல்பாட்டு வரையறையில் காணப்படுகின்றன.

இவ்வளவு சிக்கல்களை வைத்துக்கொண்டு புதியதாக ஓர் ஆணையத்தைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக, தற்போது இருக்கும் யுஜிசி-யையே இன்னும் மேம்படுத்தி, அதற்கான அதிகாரத்தில் சில மாற்றங்கள் செய்தாலே போதுமானது'' என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து.

தனியார்மயமாக்கல், அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்தல், ஒற்றைத்தன்மை ஆகியவைதாம் ஆளும் அரசின் முக்கியச் செயல்பாடாக இருக்கின்றன. இந்த உயர்கல்வி ஆணையத்தின் விதிகளும் அவற்றைத்தான் காட்டுகின்றன. உள்ளபடியே இது மக்களுக்குப் பயன்படும் வகையில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருக்குமானால், நிச்சயம் இது வரவேற்கப்படவேண்டியதுதான். அப்படி அமைய, இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களின் கருத்துகளையும் இந்த ஆணையம் அமைக்கும் நடைமுறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஓராண்டே இருக்கும்பட்சத்தில் இதைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை மீறிச் செயல்படுத்தி, மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.


டிரெண்டிங் @ விகடன்