
படிப்பில் மட்டுமல்லாது பிறவற்றிலும் சூப்பர் குழந்தைகளாக விளங்க, உங்களின் மூளைத்திறனை அவர்கள் முறையாகச் செயல்படுத்தவேண்டும். அதற்கு, சுட்டிகள் தாங்கள் ஈடுபடும் செயலில் கவனத்தை ஒருமுகப்படுத்துவது, நேரத்தைப் பயனுள்ளவையாக மாற்றுவது, திட்டமிட்டு வேலை செய்வது, தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.
கவனம் செலுத்துதல்:
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் நம் கவனம், அந்தச் செயலின்மீது இருக்க வேண்டும். அதற்காக, சில பழக்கங்களை நம் அன்றாட வாழ்வில் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அவை...
1. நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள்.
2.வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்காமல், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை சிறிது ஓய்வெடுங்கள்.
3. அறைகளைக் காற்றோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்.
4. நறுமணம் வீசும் மலர்களை, பொருள்களை முகர்ந்துபாருங்கள்.
5.ஆழ்ந்த தூக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுகளை உண்பது ஆகியறவற்றைப் பின்பற்றுங்கள்.
6.மொட்டைமாடியில் தோட்டம் அமைத்துப் பராமரியுங்கள்.
7. தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
8. பிடித்தமான இசையைக் கேளுங்கள்.
9. தியானம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
10. வீட்டில் செல்லப்பிராணிகள் அல்லது தொட்டிகளில் மீன் வளர்க்கப் பழகுங்கள்.
11. தினமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள்.
12. அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
நேர மேலாண்மை:

நேரத்தைச் சிறப்பாகக் கையாளத் தெரிந்தவர்களே சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள். இன்றைய போட்டி மிகுந்த உலகில், ஒரு விநாடியைக்கூட வீணடிக்காதீர்கள். ஏனெனில், நேர மேலாண்மை நமது கட்டுப்பாட்டில் இல்லாதபோது, மற்ற செயல்பாடுகளும் நமது கட்டுப்பாட்டிற்கு வருவது கடினமாகும்.
1. உங்களின் ஓய்வு நேரத்தில், நீங்கள் அதிகம் செலவிடும் தேவையில்லாத செயல்பாடுகளைப் பட்டியலிடுங்கள்.
2. ஒரே நேரத்தில், பல வேலைகளைச் செய்யும் பழக்கத்தை நிறுத்துங்கள். அப்படிச் செய்வதால், உங்களால் எந்த வேலையையும் முழுமையாக முடிக்க முடியாமல்போகலாம்.
3. கடினமான வேலையைச் செய்யப் பழகுங்கள்.
4. ஒரே மாதிரியான வேலையை எடுத்துச் செயல்படுங்கள்.
5. சொல்லும் வார்த்தையை எழுத்துப் பிழையில்லாமல் எழுதக்கூடிய செயலியைப் (டிக்டேஷன் ஆப்ஸ்) பதிவிறக்கம் செய்து, பயிற்சிபெறுங்கள்.
6. உங்களிடம் கெட்ட பழக்கங்கள் இருக்குமானால், அவற்றைக் கைவிடுங்கள்.
7.‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைதளங்களில் இருந்தால், அதிலிருந்து உடனே வெளியேறுங்கள்.
வேலைகளில் முக்கியத்துவம்:

உரிய செயல்களை உரிய காலத்தில் முடித்தால்தான், அதன் பயனையும் இலக்கையும் முழுமையாக நம்மால் அடைய முடியும்.
1. கட்டாயம் செய்யவேண்டியவை, செய்யவேண்டியவை, செய்ய விரும்புபவை எனத் தினமும் செய்ய வேண்டியவற்றை மூன்றாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
2. மிக முக்கியமாகச் செய்யவேண்டிய மூன்று விஷயங்களை மட்டும் பட்டியலிடுங்கள்.
3. அதில் மிக முக்கியமானதை முதலில் தேர்வுசெய்யுங்கள்.
4. அந்த முக்கியமான வேலையைச் செய்ய, நீங்கள் நிர்ணயித்த இலக்கு உறுதுணையாக இருக்கிறதா? இல்லையென்றால், அதைச் செய்வதைத் தவிருங்கள்.
5. ஒரு வேலையை உங்களால் மட்டுமே செய்ய முடியுமா, அது மிக முக்கியமானதா என்ற இரண்டு கேள்விகளுக்கும் இல்லை என்பது உங்கள் பதில் என்றால், அதையும் பட்டியலிலிருந்து நீக்கிவிடவும்.
6. நாளை என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை இன்று இரவே தீர்மானியுங்கள்.
7. வேலைகளில் உங்கள் படைப்புத்திறனைப் பயன்படுத்திச் செய்யவேண்டியதை முதலில் செய்யவும்.
8. பெரிய வேலையை, சிறு சிறு வேலையாகப் பிரித்துக்கொண்டு செய்து பழகலாம்.
9. பெரிய வேலையை எடுத்துக்கொண்டு, அதை மிகக் குறைவான நேரத்தில் செய்து முடிக்கலாம்.
10. கடினமான வேலையை முதலில் செய்துவிட்டு, பிறகு உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்யுங்கள்.
உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்:

நீங்கள் உற்சாகமாக இருப்பதும் உங்களை ஊக்கப்படுத்தக் கூடிய சில செயல்களைச் செய்வதும் அவசியம்.
1. நீங்கள் எட்டிப்பிடித்த வெற்றி சிறியதாக இருந்தாலும் அதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.
2. சிறு சிறு வேலைகளுக்கு மத்தியில் சாக்லேட் சாப்பிடுங்கள்.
3. எப்போதும் மகிழ்ச்சியாகவும் சிரித்தமுகத்துடனும் இருங்கள்.
சிறு வயதிலேயே இத்தகைய நடைமுறைகளை நீங்கள் பின்பற்றினால், வாழ்க்கை முழுவதும் வெற்றியாளர்களாகவே வளர்வீர்கள் என்பது உறுதி.