பொது அறிவு
Published:Updated:

புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்

புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்

கிங் விஸ்வா

ப்ரல் மாதம், ‘தி பாஸ் பேபி’ என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி, சூப்பர் ஹிட்டாகி  இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம், அமெரிக்காவைச் சேர்ந்த படைப்பாளி மார்லா ஃப்ரேஸி என்பவரது சிறுவர் இலக்கியப் புத்தகமான ‘தி பாஸ் பேபி’யை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் வழக்கமான விஷயங்களை முற்றிலும் ஒரு மாறுபட்ட பார்வையில், அட்டகாசமான ஓவியங்களுடன் சொல்லியிருந்த இந்தப் புத்தகம், லட்சக்கணக்கில் விற்பனையானது. உலகின் பல நாடுகளில், பல மொழிகளில் இந்தப் புத்தகம் வெற்றிபெற, இதன் எளிமையான வடிவமைப்பே காரணம்.  

புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்

புத்தகத்தின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட மார்லா, இதன் இரண்டாம் பாகத்தையும் கொண்டுவந்தார். ஒரு குழந்தை, எப்படி பெற்றோர் உலகத்தையே மாற்றிவிடுகிறது என்பதை முதல் பாகத்தில் எழுதியிருந்தார். இரண்டாம் பாகத்தில், அந்தப் பெற்றோரின் இரண்டாவது குழந்தையின் வருகை அப்பா, அம்மா, முதல் குழந்தை ஆகிய மூன்று பேரின் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்று ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்.

குழந்தை வளர்ப்பும் கார்ப்பரேட் கம்பெனியும்:

 பெற்றோர்கள் என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும், அதெல்லாம் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வரையில்தான். எப்போது ஒரு குழந்தை பிறக்கிறதோ, அன்று முதலே அவர்கள், வீடு என்னும் கார்ப்பரேட் கம்பெனியில் அடிப்படை ஊழியர்களாக மாறிவிடுகின்றனர். அவர்களின் குழந்தைதான் அந்தக் கம்பெனியின் C E O (தலைமைச் செயல் அலுவலர்). ஏனென்றால், குழந்தையாக இருக்கும்போது அந்த முதல் குழந்தை சொல்வதுதான் வேத வாக்கு. அதன் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

இப்படி, கேட்டதெல்லாம் கிடைத்த வாழ்க்கையில், திடீரென்று ஒரு சிறிய புயல். ஆமாம், அந்த முதல் குழந்தைக்கு ஒரு தங்கச்சிப் பாப்பாவோ, தம்பிப் பாப்பாவோ வீட்டுக்கு வருவதைப் பார்த்ததிலிருந்தே உள்ளூர பயம் வருகிறது. ஏனென்றால், இதுநாள் வரை தன்னுடைய பதவிக்குப் போட்டியே இருந்ததில்லை. ஆனால், இனிமேல் அப்படியா?   

புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்

மாற்றம் தரும் புதிய சி இ ஓ:

 புதியவரின் வருகை, இதுவரையில் இருந்த நிலைமையை மாற்றிவிட, அதை நம்முடைய சுட்டிப் பையனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனும் என்னென்னவோ செய்து பார்க்கிறான். ஆனால், புதுப் பாப்பாவைக் கொஞ்சுவதில், அதனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, இவன் மீது காட்டுவதே கிடையாது. ஒரு கட்டத்தில், நொந்துபோன பழைய பாஸ், கவனத்தைத் தன்மீது ஈர்க்க, சேட்டைகளை ஆரம்பிக்கிறான்.

பொது இடங்களுக்குப் போகும்போது ஆடைகளைக் கழற்றிப் போடுவது... வீட்டில் இருக்கும் பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது என்று இவன் என்னதான் விதம்விதமாக சேட்டைகள் செய்தாலும், புதிய பாஸுக்குக் கிடைக்கும் மரியாதை என்னவோ தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. முதன்முறை, சோகமாக தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்குகிறான் பழைய பாஸ். ஆனால், அப்போது ஒரு விஷயம் நடக்கிறது. அந்த உணர்ச்சிகரமான விஷயம் என்ன என்பதை இந்த அழகான புத்தகத்தை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோருக்குப் பரிசு:

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசாகக் கொடுக்க வேண்டும். சினிமாவில் பழைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் காட்டுவதுபோல, இந்தப் புத்தகம் அவர்களுக்கும் பல ஃப்ளாஷ்பேக் நினைவுகளை வரவழைக்கும். தம் குழந்தை செய்த சேட்டைகள், அதை அவர்கள் சமாளித்த விதம் எனப் பல நினைவுகளைக் கிளறுவதோடு, அவர்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாத விஷயங்களை எடுத்துரைக்க உதவும். 

புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்


அதன்மூலம், தனக்காகப் பெற்றோர்கள் என்னென்ன தியாகங்களைச் செய்துள்ளார்கள், எப்படிப்பட்ட இன்னல்களைக் கடந்துள்ளார்கள் என்று புரிந்துகொள்ள உதவும். அதனால், பெற்றோர்கள் மீதான மரியாதையும் அன்பும் கூடும்.

மிகவும் குறைவான வார்த்தைகளில், அழகான, ரசிக்கும்படியான ஓவியங்களையும் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டும். 

புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்

கதை: The Boss Baby & The Bossier Baby

கதாசிரியர் & ஓவியர்: Marla Frazee (மார்லா ஃப்ரேஸி)

மொழி:
ஆங்கிலம் (ஆரம்ப நிலை).

வயது:
4 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.

வெளியீடு: 2011 (முதல் பாகம்), 2016 (இரண்டாவது பாகம்).

பதிப்பாளர்: Simon & Schuster

புத்தக அளவு: 22.5 x 25.4 Inches

பக்கங்கள்: 40 (முழுவதும் வண்ணத்தில்).

விலை: முதல் பாகம் ரூ 167,  இரண்டாவது பாகம் ரூ470

கதை: ஒரு குழந்தையின் சுட்டித்தனங்கள்.

கதை வரிசை: மொத்தம் 2 புத்தகங்கள்.

சிறப்புகள்: அமெரிக்காவின் தலைசிறந்த சிறுவர் இலக்கிய ஓவிய விருதான ‘கல்டெகாட்’ விருதை இரண்டு முறை பெற்றது.

சிறப்பு அம்சம்:
இந்த இரண்டு கதைகளையும் அடிப்படையாகக்கொண்டு, ‘தி பாஸ் பேபி’ என்ற பெயரில் ஒரு கார்ட்டூன் படம் வெளியானது. அதுவும் சூப்பர் ஹிட்.

புத்தக உலகம் - சுட்டிக் குழந்தை! - திபாஸ்

மார்லா ஃப்ரேஸி

நீங்கள் மெக்டோனல்ட்ஸ் உணவகத்துக்குச் சென்றால், அங்கே, பார்சல் கட்டித் தரும் (Happy Meal Box) காகித அட்டையிலான பார்சல் பெட்டியின் டிசைனை இன்னொரு முறை உற்றுப்பாருங்கள். ஏனென்றால், அந்த டிசைனை உருவாக்கியவர்தான், இந்த மார்லா. பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே, இவர் ஒரு கதை எழுதினார். அதற்கு அவரே ஓவியமும் வரைந்தார். ‘நட்பு வட்டம்’ என்ற அந்தப் புத்தகம், மாகாண அளவிலான பரிசைப் பெற்றது. அதன் பிறகு, ஓவியர், வடிவமைப்பாளர் என்றெல்லாம் பல துறைகளில் ஜொலித்திருக்கிறார். ஹீமேன் பொம்மைக் கம்பெனியிலும் பணியாற்றி, பொம்மைகள் வடிவமைப்பிலும் பல புதுமைகளைச் செய்திருக்கிறார் மார்லா.

பத்திரிகைகள், விளம்பர நிறுவனங்கள், பெரிய பதிப்பகங்களில் ஓவியராகப் பணியாற்றி வந்த மார்லா, மறுபடியும் ஓர் எழுத்தாளராக மாற ஒரு ராட்டினமே காரணம். ஒருமுறை தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தபோது, மார்லாவின் மூன்று மகன்களும் தொடர்ச்சியாக ராட்டினத்தைப் பற்றியே பேசி வந்தது மார்லாவுக்குப் புதுமையாக இருந்தது. அதன்பிறகுதான், அவர் சிறுவர்களின் உலகம் பார்க்கும் பார்வை எவ்வளவு விந்தையானது என்பதை உணர்ந்து, மறுபடியும் கதைகளை எழுத ஆரம்பித்தார். அப்படி ஆரம்பித்த முதல் கதையின் பெயர், ‘ராட்டினம்’ (Roller Coaster). இவரே ஓவியம் வரைந்தார். அந்தப் புத்தகம் பெரிய அளவில் பேசப்பட, மார்லா தொடர்ச்சியாகப் பல கதைகளை எழுதி, ஓவியமும் வரைந்துவருகிறார்.