10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 10½ லட்சம் பேர் எழுதுகிறார்கள்


சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்.
கடந்த 1ஆம் தேதி தொடங்கிய பிளஸ்2 பொதுத் தேர்வு நாளையுடன் தேர்வு முடிவடையும் நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 3012 மையங்களில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவிகள். இவர்கள் அனைவரும் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதுபவர்கள். இவர்கள் தவிர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகு விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
##~~## |