பொது அறிவு
Published:Updated:

தேனே... தேனே!

தேனே... தேனே!
பிரீமியம் ஸ்டோரி
News
தேனே... தேனே!

ச.பூஜா - படங்கள்: சி.ராபர்ட்

தேன் என்று சொன்னதுமே, பாப்பாக்கள் முதல் தாத்தாக்கள் வரை அனைவரின் வாய்க்குள்ளும் நாக்கு நாட்டியமாடும். மரங்களிலும் சில கட்டடங்களின் உயரமான இடங்களிலும் இயற்கையாக தேனீக்கள் கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், உலக மக்கள் பயன்படுத்தும் தேனின் அளவுக்கு இது போதாது. எனவே, தேன் வளர்ப்பு என்பது உலகம் முழுவதும் உள்ளது. அதில் ஒன்றுதான், பெட்டிகளில் தேனீக்களைக் கூடுகட்டவைத்துத் தேன் சேகரிப்பது. அப்படி ஓர் இடத்துக்கு, ‘தேனே... தேனே’ எனத் தேடிச்சென்றேனே... தேனீ வளர்ப்பு விவசாயிகளைச் சந்தித்தேனே... விஷயங்களைச் சேகரித்தேனே!     

தேனே... தேனே!

பெரம்பலூர் மாவட்டம், அய்யர்பாளையம் என்ற கிராமத்தில் வேல்முருகன் மற்றும் செங்கோட்டுவேல் என்ற விவசாயிகள், பெட்டிகளில் தேனீ வளர்ப்பு செய்கிறார்கள். அதுபற்றி அவர்களிடம் பேசினேன்.

“இந்தத் தேனீ வளர்ப்பை எப்படி ஆரம்பிச்சீங்க?’’        

தேனே... தேனே!

‘‘பசுமை விகடனில் படிச்சுதான் தேனீ வளர்ப்பது பற்றி தெரிஞ்சுக்கிட்டோம். வேளாண் அறிவியல் மையம் மூலமாக பெட்டித் தேனீ வளர்ப்பு முறையை அறிந்துகொண்டோம்.’’

‘‘தேனீக்கள் மரத்தில் கூடு கட்டுவதற்கும், பெட்டியில் வளர்ப்பதற்கும் என்ன வேறுபாடு?’’

‘‘இந்தப் பெட்டியில் மேல் பகுதியில் ஆறு, கீழ்ப் பகுதியில் ஆறு என 12 சட்டங்கள் இருக்கும். இந்தச் சட்டங்களில்தான் தேனீக்கள் கூடு கட்டும், அவ்வளவுதான்.   மற்றபடி பெரிய வேறுபாடு இல்லை. இயல்பாக, தேனீக்கள் காலையில் சென்று மாலையில் பெட்டியை வந்தடையும். வயலில் உள்ள மலர்களிலிருந்து தேனைச் சேகரித்து வரும். தேன் சேகரிப்புமூலம் மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால், விவசாயம் சிறக்கிறது.’’     

தேனே... தேனே!

‘‘இதன் மூலம் எவ்வளவு தேன் கிடைக்கும்?’’

‘‘ஒரு பெட்டிக்கு ஒரு கிலோ வரை தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் உருவாக 45 முதல் 60 நாள்கள் ஆகும். புதிய பெட்டி வாங்கி வளர்ப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஆகும். பழைய பெட்டிகள் என்றால் இரண்டு மாதங்களே போதும். ஒரு பெட்டி 2000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விவசாயக் குழுவாகச் சேர்ந்து தோட்டக்கலைத் துறைமூலமாகப் பெட்டிகளை வாங்குகிறோம்.’’    

தேனே... தேனே!

‘‘இதன்மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?’’

‘‘ஒரு பெட்டிக்கு ஒரு கிலோ தேன் என்றால், ஐந்து பெட்டிகளுக்கு 9,000 ரூபாய் வரை கிடைக்கும்.’’

‘‘தேன் எடுக்கும்போது தேனீக்கள் என்ன ஆகும்?’’

‘‘தேனை எடுப்பதற்கு முன்பு புகை போடுவோம். தேனீக்கள் போய்விடும். தேனை எடுத்துவிட்டு மீண்டும் பெட்டியில் சட்டத்தை வைத்துவிடுவோம். இதனால், தேனீக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. தேனீக்களில் சில எங்களைக் கொட்டும். கவனமாக எடுப்போம். அப்படி தேனீ கொட்டிவிட்டால் மண்சேற்றைத் தடவி விடுவோம்.’’    

தேனே... தேனே!


‘‘எல்லா காலநிலையிலும் தேன் கிடைக்குமா?’’

‘‘ஒரு வருடத்துக்கு ஐந்து முறை தேன் எடுப்போம். பூக்கள்மூலம் தேன் கிடைக்காத காலங்களில் தேனீக்களுக்கு சர்க்கரைத் தண்ணீரை உணவாகக் கொடுப்போம்.’’     

தேனே... தேனே!

‘‘தேனீக்களுக்கு எந்த உயிரிகளால் ஆபத்து?’’

‘‘தேனீக்களின் பெரிய எதிரி எறும்புகள். எனவே, பெட்டிகளில் எறும்புகள் ஏறிவிடாமல் இருக்க, பெட்டிகளின் கால்களைத் தண்ணீரில் இருக்குமாறு வைப்போம்.’’

‘‘எத்தனை வருடங்களாக இந்தத் தொழிலைச் செய்துவருகிறீர்கள்?’’

‘‘பத்து வருடங்களாகச் செய்கிறோம். தேன் சுவையான உணவு மட்டுமன்று; மிகச் சிறந்த மருந்து. உங்களைப் போன்ற சிறுவர்கள் தினமும் குறிப்பிட்ட அளவு தேன் சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கேட்டுச்சா ஃபிரெண்ட்ஸ்? தேனைக் குடிப்போம்... ஆரோக்கியம் வளர்ப்போம்!