பொது அறிவு
Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - பறக்கும் ஜடை அணில்

அழிய விடல் ஆகாது பாப்பா! - பறக்கும் ஜடை அணில்
பிரீமியம் ஸ்டோரி
News
அழிய விடல் ஆகாது பாப்பா! - பறக்கும் ஜடை அணில்

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - பறக்கும் ஜடை அணில்

ணக்கம் நண்பர்களே,

நலமா?

நான்தான் பறக்கும் அணில் எழுதுகிறேன். நம் இந்தியாவின் மணிமகுடமாக விளங்கும் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கிலிருந்து இந்தக் கடிதம் உங்கள் உதவியை நாடி வந்துள்ளது.

‘உலகின் சிறப்பான அதிசயங்களில் ஒன்று’ என எங்களை மாமன்னர் அக்பர் வர்ணித்தாராம். ‘அக்பர் நாமா’ என்கிற நூலில் இந்தச் செய்தி உள்ளது. ‘சடை அணில்’ என்றும் ‘பறக்கும் அணில்’ என்றும் நாங்கள் அழைக்கப்படுகிறோம். உயிரிகளின் தோற்றம் பற்றிய இயற்கைத் தெரிவுக் கோட்பாடு, நாங்கள் தோன்றிப் பத்துக்கோடி ஆண்டுகள் ஆவதாக அறிவிக்கிறது. டைனோசர்கள் வாழ்ந்த யுகத்தில் வலம் வந்த பாலூட்டிகள் நாங்கள். பறக்கும் அணில்கள் எனச் சில வெளவால்கள்கூட உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. ஆனால், நிஜமான பறக்கும் அணில் நாங்கள்தான்.  

அழிய விடல் ஆகாது பாப்பா! - பறக்கும் ஜடை அணில்

பனியிலும் இளவேனில் வெயிலிலும், மரத்தின் உச்சியை விட்டு வேறு மரங்களுக்கு வரிசையாகத் தாவும் கூட்டம் எங்கள் கூட்டம். அந்தக் காட்சி, நாங்கள் பறப்பதுபோலவே இருக்கும். கம்பளி ஜடாமுடி மெத்தென வால் வரை வளர்ந்து, காஷ்மீரின் அழகாய் ஜொலிப்பதைப் பார்க்க, ஒரு காலத்தில் பெருங்கூட்டம் வரும்.  இந்தியா, பாகிஸ்தான், திபெத், நேபாளம் முதல் ரஷ்யா, சைபீரியா வரை ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் வாழ்ந்தோம். இன்றோ, எங்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகிவிட்டது நண்பா. உலக உயிரிகள் பாதுகாப்புக்கான ஐநா அமைப்பின் 2016 அறிக்கையின்படி, இப்போது காஷ்மீரத்தில் மிஞ்சி இருக்கும் மொத்த ஜடாமுடி பறக்கும் அணில்கள் (woolly flying squirrel), 17 ஜோடிகள் மட்டும்தானாம்.

எவ்வளவு வேகமாக நாங்கள் அழிக்கப்பட்டுவிட்டோம் பார்த்தீர்களா? இந்தியாவை ஆளவந்த வெள்ளையர்கள், எங்களது மாமிசத்தைச் சுட்டு சாப்பிடுவதை, ‘காஷ்மீர் விருந்து’ என்று அழைத்தார்கள். எங்கள் தோலில் உருவாக்கப்பட்ட தொப்பிகளுக்கென்று சிறப்பு வரவேற்பு உள்ளது. குளிர் காலத்தில், ஐரோப்பியப் பெண்கள் எங்கள் தோலால் ஆன கையுறைகளை அணிவதைச் செல்வச் செழிப்பின் அடையாளமாக்கினார்கள். இப்படிப் பல காரணங்களால், எங்களது இனமே அழிவுக்கும் முடிவுக்கும் வந்துவிட்டது நண்பா.

இயுபெடரஸ் சினெரியஸ் (Eupetaurus Cinereus) எனும் உயிரியல் பெயர்கொண்ட எங்கள் பறக்கும் அணில் இனம், பனிச் சறுக்குகளில் லாகவமாகத் தாவி, எத்தகைய குறைவெப்பத்தையும் தாங்கி, லட்சக்கணக்கான தாவரங்களின் விதைகளை இங்கும் அங்கும் பரப்பி, காடுகள் அழியா வண்ணம் வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறோம். இனி எங்கள் இனம் அழிந்தால், காடுகளும் அழியும்.

உங்களின் சந்ததிகள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். விலங்குகள், பறவைகளின் வாழிடங்களான காடுகளைக் காப்பாற்றுதல், வேட்டையாடத் தடைசெய்யப்பட்ட அபூர்வ விலங்குகள் பற்றிய விழிப்பு உணர்வு, குறிப்பாக பேரழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பொருள்களை வாங்காமல் புறக்கணித்தல் ஆகியவையே உடனடித்தேவை.

உங்களை நம்பி, இந்த வேலையை ஒப்படைக்கிறோம். நாங்கள் உட்பட பேரழிவின் விளிம்பிலிருக்கும் எல்லா உயிரினங்களையும் காப்பாற்றுங்கள்.

இப்படிக்கு,

பறக்கும் ஜடை அணில்

காஷ்மீர் பள்ளத்தாக்கு.