Published:Updated:

``இனிமே எங்களுக்கு கணக்குப் பாடம்னா ரொம்பப் பிடிக்கும்!” அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

``இனிமே எங்களுக்கு கணக்குப் பாடம்னா ரொம்பப் பிடிக்கும்!” அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்
``இனிமே எங்களுக்கு கணக்குப் பாடம்னா ரொம்பப் பிடிக்கும்!” அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

``அண்ணா, எங்களுக்குக் கணக்குப் பாடமே பிடிக்காது. ஆனா, இன்றைக்கு அழகழகான மெட்டீரியலை வெச்சு நடத்தின கணக்குப் பாடம் நல்லா இருந்துச்சு. எங்க டீச்சரும், 'இனிமே கணக்கை எழுதிப் பார்க்க வேணாம். விளையாடிப் பார்க்கலாம்'னு சொல்லியிருக்காங்க.''

சென்னை, திரிசூலம் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் வளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் மான்களாகத் துள்ளிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் கபடி விளையாட்டு, மற்றொரு பக்கம் ஷெட்டில் காக், சின்னச் சின்ன குறும்புகள் சம்பந்தமான புகார்களைத் தீர்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் என ஆர்ப்பாட்டங்களும் கொண்டாட்டங்களும் மனதை இலகுவாக்கின.

“சார், எங்க ஸ்கூல் இன்றைக்குத் திருவிழா மாதிரி இருக்கு. ஒரே விளையாட்டு, டான்ஸ்னு ஜாலியா இருக்கோம். வாங்க, நீங்களும் புது விளையாட்டு சொல்லிக்கொடுங்க” என்று உற்சாகமாக அழைத்தான் ஒரு சிறுவன். இவர்களைச் சமாளித்துவிட்டு தலைமையாசிரியர் அறைக்குள் சென்றோம்.

“வாங்க தம்பி, ஸ்கூலுக்கு யார் வந்தாலும் எங்க பசங்க இப்படித்தான் உடனே ஒட்டிக்குவாங்க. நீங்க இங்கிருந்து கிளம்புறதுக்குள்ளளே ஃபேர்வெல் டே கொண்டாடிடுவாங்க” எனப் புன்னகையுடன் வரவேற்றார் தலைமையாசிரியர் லதா மகேஷ்வரி.

“இன்றைக்கு நம்ம பள்ளிக்கு, லியர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக, மேத்ஸ் லேப் (Maths Lab) தயார் பண்ணிக்கொடுக்க வாலண்டியர்ஸ் வந்திருக்காங்க. புது ஆள்களைப் பார்த்ததும், பசங்க ரொம்ப குஷியாகிட்டாங்க. காலையிலிருந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். எல்.எல்.எஃப் என்கிற இந்த அமைப்பு இருப்பது பற்றி பெங்களுர்ல இருக்கும் என் மாமியார் வீட்டுக்குப் போயிருந்தப்போதான் தெரியவந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் படிக்கும், அடிப்படைக் கட்டமைப்புகள் அதிகம் இல்லாத அரசுப் பள்ளிகளைத் தேர்வுசெய்து, அந்தப் பள்ளிகளுக்குப் பல உதவிகளைச் செய்யறாங்க. இதுபற்றி சென்னையில் நடந்த ஒரு மீட்டிங்கில் சொன்னேன். உடனே, தமிழக பள்ளிக் கல்வித்துறையைத் தொடர்புகொண்டு முதல்கட்டமாக 15 பள்ளிகளைத் தேர்வுசெய்து அந்த அமைப்பிடம் கொடுத்தார்கள். அதில் எங்கள் பள்ளியும் ஒன்று. எங்க பள்ளியில் படிக்கும் பசங்களின் பெற்றோர்கள், கல் குவாரியில் தினக்கூலி வேலைக்குப் போறவங்க. அவங்க பிள்ளைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களைக்கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழல் அவர்களுடையது. இப்படியான பசங்களுக்கு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் கிடைக்கும் லேப் வசதிகள், செய்முறைப் பயிற்சிகள் கிடைத்தால், அவங்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகமாகும்” என்கிறார் லதா மகேஷ்வரி.

எல்.எல்.எஃப் அமைப்பின் புரொகிராம் மேனேஜரான விஜய் தியாகராஜன், “எங்க அமைப்பின் தலைமையிடம் டெல்லியில் இருக்கிறது. இதுவரை 19 மாநிலங்களோடு இணைந்து அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தி வருகிறோம். மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறையே மிகவும் நலிவடைந்த அரசுப் பள்ளிகளைத் தேர்வுசெய்து கொடுக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களோடு இணைந்து பள்ளிகளைச் சீரமைப்போம். பள்ளிகளுக்கு வரும் வாலண்டியர்ஸ், முதலில் மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு, அவர்களோடு குழுவாக இணைந்து விளையாட்டு, நடனம், நாடகம், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்வார்கள். மாணவர்களுக்கு கணக்குப் பாடத்தின்மீது பயமோ வெறுப்போ வராமல் இருக்க, மேத்ஸ் லேப் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். கணக்கை எழுதிப் பார்ப்பதோடு, செயல்முறையில் மெட்டீரியல்களைப் பயன்படுத்திச் செய்யும்போது எளிமையாகப் புரியும். இந்த மெட்டீரியல்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ பரிந்துரைத்தது. வாரம் ஒருமுறை எங்கள் அமைப்பிலுள்ளவர்கள் பள்ளிக்கு வந்து இந்த மெட்டீரியல்களைப் பயன்படுத்தும் முறையை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பார்கள். இதன் மூலம் நான்கைந்து முறை சொல்லிப் புரியவைக்கும் பாடத்தை, ஒரே முறையில் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார்.

“அண்ணா, இன்றைக்கு காலையிலிருந்தே கபடி, டிராயிங், கதை சொல்றதுன்னு ஜாலியா இருந்தோம். நான் அந்த அக்காக்களோடு சேர்ந்து மேத்ஸ் லேப்ல பெயின்ட்டிங் பண்ணினேன். நேத்துவரை லேப் வசதியைப் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்புலதான் பார்க்க முடியும்னு நினைச்சேன். இப்போ, எட்டாவது படிக்கும்போதே லேப் யூஸ் பண்ணப்போறோம்னு நினைச்சா ஹேப்பியா இருக்கு” எனக் குதூகலிக்கிறார் மாணவி உமாதேவி.

“எனக்குக் கணக்குன்னா ரொம்பப் பிடிக்கும். எங்க ஸ்கூல்ல அழகழகா படங்கள் வரைஞ்சு நிறைய பொருள்களை வெச்சு கணக்குச் சொல்லிக்கொடுக்கப்போறாங்க. காலையிலிருந்து நாங்க எல்லாரும் சேர்ந்து கார்டன் அமைச்சோம். ரோஜா, மல்லிகைன்னு நிறைய பூச்செடிகளை வெச்சோம். தினமும் காலையில் சீக்கிரமா வந்து செடிகளுக்கு தண்ணி ஊற்றுவேன்” என உற்சாகமாகப் பேசுகிறான், ஆறாம் வகுப்பு மாணவன் ஜோதிராஜ். 

ருத்ரேஷ்வரன், ஹரிஹரன், மாதேஷ் என மூவரும், “அண்ணா, எங்களுக்குக் கணக்குப் பாடமே பிடிக்காது. ஆனா, இன்னைக்கு அழகழகான மெட்டீரியலை வெச்சு நடத்தின கணக்குப் பாடம் நல்லா இருந்துச்சு. எங்க டீச்சரும், `இனிமே கணக்கை எழுதிப் பார்க்க வேணாம். விளையாடிப் பார்க்கலாம்'னு சொல்லியிருக்காங்க'' என்கிறார்கள் கோரஸாக.

நலிவடைந்த குடும்பங்களிலிருந்து அரசுப் பள்ளியையே நம்பி, கல்வி பயில வரும் மாணவர்களுக்கு, இதுபோன்ற முயற்சிகள் அறிவுத்திறனையும் கற்பனை வளத்தையும் ஊக்குவிக்க விதையாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு