Published:Updated:

எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.ஏ பக்கங்கள்

செஞ்சாங்க... ஜெயிச்சாங்க! - எஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவு!

எஃப்.ஏ பக்கங்கள்

செஞ்சாங்க... ஜெயிச்சாங்க! - எஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவு!

Published:Updated:
எஃப்.ஏ பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

அன்பு மாணவர்களே...

வணக்கம். தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தின் கீழ் தொடங்கிய CCE வளரறி மதிப்பீட்டுக் கல்வி முறை, ஒவ்வோர் ஆண்டும் உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த ஆண்டு, முதலாம் பருவத்துக்கான புராஜெக்ட் போட்டியை அறிவித்ததும், உங்களிடமிருந்து வந்த செயல்திட்டங்களின் ஒவ்வொரு படைப்பிலும், கற்பனைத் திறன் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் அடுத்தடுத்த பக்கங்களில் அணிவகுக்கின்றன. மாணவர்களின் திறமைக்குச் சான்றிதழும் பள்ளிகளுக்குப் பரிசாக புத்தகங்களும் அனுப்பப்படுகின்றன. இந்த இதழில் இரண்டாம் பருவத்துக்கான செயல்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

தொடரட்டும் உங்கள் கற்பனைத் திறன்... உயரட்டும் கல்வித் தரம்.

எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

கடல் வாழ் உயிரினங்கள்!

எங்கள் ஆசிரியர் தமிழ்ப் பாடத்தில் ‘வழங்கும் தமிழ்’ பாடத்தினை நடத்திவிட்டு ‘கடல்வாழ் உயிரினங்கள்’ படங்களை ஒட்டி வரச் சொன்னார். நாங்கள் பெற்றோரோடு கடற்கரைக்குச் சென்றபோது எடுத்து வந்து சேமித்து வைத்திருந்த ‘நட்சத்திர மீன், சங்கு, கடல்பந்து, கடல் குதிரை, நண்டு, கடல்பஞ்சு, பவளப்பாறை, கிளிஞ்சல்கள்’ ஆகியவற்றை சார்ட்டில் ஒட்டிச் செயல்திட்டமாகக் கட்டினேன். ஆசிரியர் வெகுவாகப் பாராட்டினார்.

- பா.மகேஸ்வரி
வழிகாட்டி: ச.கிறிஸ்து ஞானவள்ளுவன்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,
நரசிங்கக்கூட்டம், கடலாடி அஞ்சல், இராமநாதபுரம்.

எஃப்.ஏ பக்கங்கள்

Brain is my Director!

நான்காம் வகுப்பு அறிவியலில் மனித உடல் பாடத்தில் மனிதனின் உள்ளுறுப்புகள் பற்றி உள்ளது. என் வகுப்பு ஆசிரியர் மனிதனின் மூளை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் மனித உள்ளுறுப்புகளின் மாதிரிகள்கொண்டு எங்களுக்கு விளக்கிக் கூறினார். பின்பு எங்கள் அனைவருக்கும் ஆசிரியர் ஏதேனும் ஓர் உள்ளுறுப்பினைச் செயல்திட்டமாகச் செய்து அதைக்கொண்டு வகுப்பறையில் நடித்துக்காட்டச் சொன்னார்.
நான் மூளையைச் செய்ய ஆயத்தமானேன். வீட்டிலுள்ள பழைய துணிகளைக்கொண்டு செய்யலாம் என முடிவு செய்தேன். என் அம்மாவின் துணையுடன் மூளை செய்வதற்குத் தேவையான துணிகளைச் சேகரித்து, பின் எனது அப்பாவின் பழைய வேட்டி கொண்டு அதற்கு உறை தயாரித்தேன். நான் செய்த மூளையின் ஒருபுறத்தில் மூளையின் வடிவத்தைப் புத்தகத்தைப் பார்த்து வரைந்தேன்.

மூளையின் மறுபக்கத்தில் மூளையைப் பற்றிய செய்திகளை ஸ்கெட்ச் உதவியுடன் எழுதினேன். அடுத்தநாள் மூளை மாதிரியைக் கொண்டு வகுப்பறையில் வைத்து விளக்கிச் சொன்னேன்.

வகுப்பு மாணவர்கள் எனது செயல்திட்ட மாதிரியைப் பார்த்து மூளையின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொண்டனர். எனது மாதிரியை ஆசிரியரும் நண்பர்களும் பாராட்டினர்.

மாணவியின் பெயர்: ம.யாதவி.
வழிகாட்டி:செந்தில்நாதன்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஏர்வாடி.
கடலாடி ஒன்றியம்,
இராமநாதபுரம்.

எஃப்.ஏ பக்கங்கள்

NAMES IN OUR FAMILY!

எங்கள் ஆங்கில ஆசிரியர் உதவியுடன் நாங்கள் இந்தச் செயல்களைச் செய்தோம். ‘Noun is Nothing but a Name’ என்ற புரிதலை உருவாக்க ‘Names in our Family’ என்ற தலைப்பில் குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பெயர்களை ஆண்பால் (Masculine), பெண்பால் (Feminine) என இனவாரியாக அட்டைகளில் எழுதி அவற்றை நாங்கள் நெற்றியில் பொருத்திக் குடும்பப் புகைப்படம் எடுப்பதற்கு நிற்க வைப்பதுபோல நின்றோம். அதை நாங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து செய்தோம். பார்வையாளர்களான வகுப்புத் தோழர்கள் அவற்றைப் படித்து உறவுப் பெயர்ச் சொற்களைக் கூறினார்கள். பின்னர் எங்களில் சிலர் அட்டைகளில் எழுதப்பட்டுள்ள நபர்களைப்போல நடித்துக் காட்டினார்கள். இதன் மூலம் ஆங்கிலப் பெயர்ச்சொற்களை நாங்கள் எளிதாகக் கற்றுக் கொண்டோம். இவ்வாறு கற்றது எங்களுக்கு நிறைய ஆங்கிலச் சொற்களைக் கற்க உதவியதுடன், மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்:

வழிகாட்டி: சி.பால் பிரிட்டோ குமார் இடைநிலை ஆசிரியர் ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளி போளுர் திருவண்ணமலை - 606 803

எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

முப்பரிமாணப் பொருள்கள்!

முப்பரிமாணங்கள் பற்றி எங்கள் ஆசிரியர் பாடம் நடத்தினார். நாங்கள் பொருள்களின் வலப்பக்க, இடப்பக்க மற்றும் முன்பக்க புறத் தோற்றங்களை வரைவதற்கு ஒரு சென்டி மீட்டர் அளவுள்ள கனசதுரக் கட்டைகளைத் தயார் செய்தோம். அவற்றுக்கு அழகிய வண்ணங்களைத் தேர்ந்தெடுத்துத்  தீட்டினோம். முப்பரிமாணங்களைப் புரிந்து கொண்டோம். ஆசிரியரின் பாராட்டைப் பெற்றோம்.

- ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்
வழிகாட்டி: பா.மகாதேவன்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
மாங்குடி, முத்துப்பேட்டை, திருவாரூர்.

எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

வண்ணத்துப்பூச்சி!

எங்கள் ஆசிரியர் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றியும் அதன் பருவங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

நாங்கள் சார்ட் அட்டையில் வண்ணத்துப்பூச்சியின் நான்கு பருவங்களையும் வரைந்து எடுத்து வந்தோம். பின்னர் நாங்கள் முட்டைப்பருவம், புழுப்பருவம், கூட்டுப்புழுப்பருவம், வண்ணத்துப்பூச்சி என்ற வரிசைப்படி நின்றோம். எங்களின் இந்த நான்கு குழுக்களும் அந்தந்த பருவங்களைப் பற்றி விளக்கிக் கூறினோம். ஆசிரியர் எங்களைப் பாராட்டினார்.

- ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்.
வழிகாட்டி: சி.மகேஸ்வரி,
சத்திய பாரதி நர்சரி பிரைமரி பள்ளி
காரைக்குடி.

எஃப்.ஏ பக்கங்கள்

கற்பனைக் கோடுகள்!

எங்களிடம் ஆசிரியர் புவிக்கோளத்தைக் கொடுத்து அட்சக் கோடுகள், தீர்க்கக் கோடுகள் குறித்து விளக்கினார். மேலும் கடகரேகை, மகரரேகை, கிரீன்விச்ரேகை ஆகியவற்றைக் குறித்துக் கலந்துரையாடிப் புவிக்கோளத்தில் அதைக் காண்பிக்கச் சொன்னார். அதன்பின் நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கொண்டோம். ஒவ்வொரு குழுவுக்கும் புவிக்கோளத்தையும் உலக வரைபடத்தையும் கொடுத்து அதில் உள்ள தகவல்களை அறியச் செய்யவும் புவிக்கோளத்துக்கும் வரைபடத்துக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விவாதிக்கச் செய்தார்.

இதன்மூலம் புவிக்கோளத்தைப் பற்றியும் வரைபடத்தைப் பற்றியும் நன்கு அறிந்துகொண்டோம்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்:
வழிகாட்டி: சரவணன்,
டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை – 9

எஃப்.ஏ பக்கங்கள்

ஐவகை நிலங்கள்!

ஆசிரியர் எங்களுக்கு ஜவகை நிலங்களைப் பற்றி விரிவாக விளக்கினார். நாங்கள் அடுத்தநாள் பெரிய சார்ட் அட்டையில் ஐந்து வகை நிலத்தையும் அதற்குரிய மண்ணால் நிரப்பிப் பிரித்தோம். அடுத்து அந்தந்த நிலத்துக்குரிய விலங்குகளின் பொம்மைகளைச் சேகரித்து அவற்றுக்குரிய நிலத்தில் நிறுத்தி வைத்தோம். வேலியாக ஐஸ் குச்சிகளைச் செருகி நிறுத்தினோம். ஐவகை நிலத்தின் மாடலைக் கொண்டுவந்து எங்கள் ஆசிரியரிடம் காட்டினோம்.

குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த பகுதி
முல்லை – காடும் காடுசார்ந்த பகுதி
மருதம் – வயலும் வயல்சார்ந்த பகுதி
நெய்தல் – கடலும் கடல்சார்ந்த பகுதி
பாலை – மணலும் மணல்சார்ந்த பகுதி
என்பதைக் கூறிப் பாராட்டைப் பெற்றோம்.

- ஏழாம் வகுப்பு மாணவர்கள்
வழிகாட்டி: பெ.நதியா முதுநிலை தமிழ் ஆசிரியர் ஆல்ஃபா ஜி.கே.மெட்ரிக் பள்ளி அரவேனும், நீலகிரி.

எஃப்.ஏ பக்கங்கள்

நான் கலாம்!

Living Amicably பாடத்தில் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதையில் கலாம் அய்யா தன்னுடைய வகுப்பறை நிகழ்வுகளைக் கூறும் பகுதி இடம்பெற்றுள்ளது. கலாம் அய்யா தன்னுடைய வகுப்புத் தோழர்கள் ராமநாத சாஸ்திரி, அரவிந்தன், சிவப்பிரகாசன் ஆகியோருடன் கூடிய நட்பினை நினைத்து நாங்கள் பெருமிதம் அடைந்தோம். அதைப்போல நாங்கள் நண்பர்கள் சேர்ந்து நடித்துக் காண்பித்து ஆசிரியரை அசத்தியதுடன் பாராட்டையும் பெற்றோம்.

- எட்டாம் வகுப்பு மாணவர்கள்
வழிகாட்டி: க.செல்வசிதம்பரம்
ஊராட்சி நடுநிலைப்பள்ளி, முத்துப்பேட்டை,
திருவாரூர்.

எஃப்.ஏ பக்கங்கள்

ஒற்றை எண்களுக்கும் வர்க்க எண்களுக்கும் உள்ள தொடர்பு!

மெய் எண்களின் தொகுப்பு என்ற பாடத்தை எங்கள் ஆசிரியர் நடத்தினார். நான் ஒற்றை எண்களுக்கும் வர்க்க எண்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் செயல்பாட்டைச் செய்து வந்தேன். சார்ட் அட்டையில் சதுரக்கட்டங்கள் அமைத்து n ஒற்றை எண்களின் கூடுதல் = n^2 என விளக்கினேன். இதற்கு ஆசிரியரிடம் பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றேன்.

- ஐ.மோனிஷா விஷ்ணு வர்த்தினி
எட்டாம் வகுப்பு
ஊ.ஓ.ந. பள்ளி
இரமணமுதலிபுதூர்
கோவை.

எஃப்.ஏ பக்கங்கள்

பாஸ்கல் விதி!

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நீரியல் கருவிகளாக மண் அகழ்வி, மகிழுந்தின் தடைகள் போன்றவை பாஸ்கல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசி போடும் சிரிஞ்சை எடுத்துக்கொண்டோம். அதில் சில துளைகளைப்போட்டோம். சிரிஞ்சில் உள்ள பிஸ்டலை அழுத்தும்போது அனைத்துத் துளைகள் வழியாகவும் சமமான அழுத்தத்தில் நீர் வெளியேறுகிறது. பிஸ்டலில் கொடுக்கப்படும் அழுத்தம் அனைத்துத் துளைகள் வழியாகவும் சமமாகக் கடத்தப்படுகிறது என்பதை இச்சோதனை காட்டுகிறது.

- எஸ்.பொன்முடி,
ஆசிரியர், சென்னை நடுநிலைப்பள்ளி, இராயப்பேட்டை,
சென்னை-14.

எஃப்.ஏ பக்கங்கள்

கிரிக்கெட் மைதானம்!

இந்தக் கதை கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், கிரிக்கெட் விளையாட்டை ஒரு மைதானத்தில் விளையாடும்போது, பீல்டிங் செய்யும் வீரர்கள் எந்த எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்ற விதியை மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

அந்த இடங்களுக்கான குறிப்பிட்ட பெயர்களை மாணவர்கள் தெரிந்து கொள்வது, அவ்விளையாட்டைப் பற்றிக் கூடுதலாக அவர்கள் தெரிந்து கொள்வதற்கும் ஆங்கில வார்த்தைகளை அதிகம் கற்கவும் பயனுள்ளதாக இருந்தது.

மாணவர்கள் ஆர்வமுடன் சார்ட்டில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை வரைந்து எடுத்துவந்தனர். இதில் பீல்டிங் செய்ய பீல்டர்கள் நிற்க வேண்டிய இடங்களைக் குறித்து வந்தனர். இது மாணவர்களிடம் கிரிக்கெட் பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டியது.

- முனைவர். பு.ஜெயபிரபு
பட்டதாரி ஆசிரியர்(ஆங்கிலம்), அரசு உயர்நிலைப்பள்ளி, பூண்டி, தஞ்சாவூர்.

எஃப்.ஏ பக்கங்கள்

உயிரினம் உருவாக்கப் படிநிலைகள்!

ஓர் உயிரினம் உருவாக்கத்தின் படிநிலைகளை மாணவர்கள் மனதில் படியும் வண்ணம் இச்செயல்பாடு அமைந்திருக்கிறது. இதில் ஒரு உயிரியைச் சிதைத்தலுக்கு உட்படுத்தும்பொழுது இறுதியில் கிடைப்பது என்ன என்பதை அறியும் விதமாய் இச்செயல்பாடு அமைந்திருக்கிறது. அதில் உயிரியைத் தொடர் நிலையிலிருந்து பிரித்தறிய முற்படும்பொழுது உறுப்பு மண்டலம்- உறுப்பு-திசு-செல்-செல் நுண்ணுறுப்புகள்-மூலக்கூறு-அணு என முடிவடையும். ஆகவே உயிரினத்தின் அடிப்படைச் செயல் அலகு அணு என்று மாணவர்கள் தெளிவாய் உணர்ந்தனர். மேலும் மனித உடலிலுள்ள சில உறுப்புகளை எமது மாணவர்கள் சாட்டில் வரைந்து எடுத்துவந்து அசத்தினார்கள்.

- வீ.சத்திய குமார்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
அந்தனூர், செங்கம்,
திருவண்ணாமலை.

எஃப்.ஏ பக்கங்கள்

பறவை நண்பர்கள்!

இந்தப் பாடத்தை முதலில் நடத்த ஆரம்பிக்கும்பொழுது உங்களுக்குப் பிடித்த செல்லப் பிராணிகள் என்னென்ன என்று கேட்டேன். பின்னர் மாணவர்களிடம் பறவைகள் பிடிக்குமா? என்று கேட்டேன். உங்களுக்குப் பிடித்த பறவைகளின் பெயர்களைக் கூறுங்கள் என்று கேட்டேன். மேலும் யார் வீட்டில் பறவைகள் வளர்க்கிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்களிடமிருந்து வந்த பதில்களால் இந்தப் பாடம் வெகு சுவாரசியமாகச் சென்றது.

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி அவர்களைப் பற்றி விளக்கிக் கூறினேன். மேலும் அவர் அவ்வாறு அழைக்கப்படுவதன் காரணத்தையும் விளக்கிக் கூறினேன்.

சில மாணவர்கள் வீட்டில் பறவைகள் வளர்ப்பதாகக் கூறினார்கள். நாங்கள் மதியம் அருகில் உள்ள ஒரு மாணவன் வீட்டுக்குச் சென்றோம். அங்கு வளர்க்கப்படும் பறவைகள் பற்றி நேரடியாகப் பார்த்தது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் பறவைகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் ஏற்பட்டது.

- குணசீலன்
அரசு உயர்நிலைப்பள்ளி, செம்பேடு, குடியாத்தம்.

எஃப்.ஏ பக்கங்கள்

கோணங்களின் பயன்கள்

முக்கோணவியலை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் நமது இந்தியக் கணித அறிஞர் ஆரியபட்டா அவர்கள் ஆவர். முக்கோணவியல், செய்முறை வடிவியல், வடிவியல் போன்ற பாடங்களில் கோணங்கள் வருவது நமக்குத் தெரியும் ஆனால் கோணங்கள் நமது வாழ்வில் எந்தெந்த இடங்களில் பயன்படுகின்றன என்பதை இதில் விளக்குகிறேன். இதற்காக எமது மாணவர் ஆரியபட்டாவாகவே வேடமணிந்து வந்து விளக்கினார்.
   
ஒரு உயரமான அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு அதில் 10 முதல் 90 டிகிரி வரையிலான துளைகளையிட வேண்டும். அதில் விளையாட்டு அம்பு துப்பாக்கியைக்கொண்டு 10 டிகிரி துளையிட்ட கோணத்தில் சுடவேண்டும். அந்த அம்பு எவ்வளவு நீளத்தில் செல்கிறது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். இதுபோல் ஒவ்வொரு டிகிரிக்கும் செய்து பார்த்தால் கோணங்களின் வாழ்வியல் பயன்பாடு நமக்குத் தெரிந்துவிடும்.

வீட்டில் மாடிப்படிக்கட்டுகள் கட்டும்போது 30 முதல் 40 டிகிரி வரையிலான கோணத்தைக்கொண்டே அமைக்க வேண்டும். 60 அல்லது 70 டிகிரியில் படிக்கட்டுகள் அமைத்தால் ஏறுவதில் சிரமம் ஏற்படுவதுடன் மூட்டுவலியும் ஏற்படும். மருத்துவமனை, மற்றும் பள்ளிக்கூடங்களில் 10 முதல் 15 வரை டிகிரி கோணத்தில்தான் படிக்கட்டுகள் அமைப்பர். ஏனெனில் நோயாளிகள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் ஏறுவதற்கு இதுவே ஏற்றது.

அது மட்டுமன்றி விளையாட்டில் குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றிலும் கோணம் பயன்படும். விளையாட்டுச் சாதனங்களை எறியும்போது தோராயமாக 40 முதல் 45 டிகிரி கோணங்களில் கையை உயர்த்தி எறியும் போது நீளவாக்கில் போய் விழும். அதுவே 70 முதல் 80 டிகிரி கோணங்களில் போடும்போது உயரத்தில் அதிகமாகவும் நீளத்தில் குறைவாகவும் செல்லும். இந்தக் கோணங்களின் யுக்திகளைப் பயன்படுத்தித்தான் இதுபோன்ற விளையாட்டுகளில் வெற்றிபெறுவர்.

- ப.யுவராணி,
அரசு மேல்நிலைப் பள்ளி,மாத்தூர், காஞ்சிபுரம்.

எஃப்.ஏ பக்கங்கள்

புதையல் வேட்டை!

ஆங்கிலத்தில் கட்டளைகளைச் சொல்லுதல், ஆங்கிலத்தில் சொல்லும் கட்டளைகளைப் புரிந்துகொண்டு செயல்படுதல் என்பதை ஒரு விளையாட்டுபோல் அமைத்தேன். இதற்காக மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தேன். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்தேன். பின்னர் தரையில் ஒரு Route Map வரையச் செய்தேன். ஒரு முனையில் பரிசுப் பொருள் ஒன்றை வைத்தேன். ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாணவனைக் கண்களைக் கட்டியபடி ஒரு முனையில் நிற்க வைத்தேன். அடுத்த மாணவனை Route Map-க்குத் தகுந்தபடி கட்டளைகளை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். கட்டளைகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.

Instructions
Go straight.
Turn left.
Turn right.
Walk few steps forward.
Walk two steps backward.
Jump for five seconds.
Hop for three seconds.
Bent down.
Remove the kerchief.
Take your gift.

கட்டளைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு பரிசுப் பொருளை எடுக்கும் மாணவர்களின் குழு வெற்றி பெற்றதாகக் கருதப்படும். இவ்விளையாட்டுமூலம் மாணவர்கள் ஆங்கிலத்தில் கட்டளைகளை எவ்வாறு கொடுப்பது என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

- பா.மேக்டலின் பிரேமலதா, அரசு மேல்நிலைப்பள்ளி
அம்மையப்பன். திருவாரூர்

எஃப்.ஏ. படைப்புகள் அனுப்ப...

இ.மெயில் முகவரி: chuttivikatanfa@gmail.com
ஒருங்கிணைப்பாளா: பி.கே.ஜெயஸ்ரீ பிரபா   
தொடர்புக்கு : 8754308451