ராணி மங்கம்மாள்

பெண்கள் முடிசூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி இராணி மங்கம்மாள்.

இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகள்.

சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை இராணியாகப் பட்டம் சூட்டவில்லை. தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் நினைத்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1682-ல் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாதக் குழந்தை. எனவே, தன் மகனைக் காக்க வேண்டி உடன்கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினைக் காப்பாளராக ஏற்றார்.

இராணி மங்கம்மாள் நினைவைப் போற்றும் வகையில் மதுரை தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் ஒரு சத்திரம் அவர் பெயரால் இயங்கி வருகிறது. இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனை தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக உள்ளது.

மிகத் திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாவால் தனது பேரனான விஜயரங்கச் சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜயரங்கச் சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். விஜய ரங்கனால் ராணி மங்கம்மாள் சிறையிலிடப்பட்டார். இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று.

இராணி மங்கம்மாள் 1705-ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

- பெ.நதியா, ஆல்பா ஜி.கே.பள்ளி, அரவவேணு.

பூலித்தேவன்

(1 செப்டம்பர் 1715 - 1767)

இந்தியா உருவாவதற்கு முன்பே, இந்த மண்ணை மீட்கப் போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவற்றைக் கேட்டால் பூனைகூடப் புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.

அன்றைய காலகட்டத்தில், மாவீரன் பூலித்தேவன் மீது படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும்போது, அவர்கள்மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு, அவற்றில் வெடிமருந்தும் நிரப்பி வைத்திருந்தனர்.இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்துக் கதையை முடித்துவிட வேண்டும் என யோசித்து, அந்தத் தீரமிகு செயலைச்செய்ய ஒண்டிவீரன்தான் சரியானவன் என்று முடிவுசெய்து, ஒண்டிவீரனை அனுப்பிவைத்தார் பூலித்தேவன்.

ஒண்டிவீரன் பீரங்கிகளின் வாயை அடைத்து எதிர்புற மாகவெடிக்கும்படி செய்துவிட்டு, வெற்றி ஒலி எழுப்பிவிட்டுக் குதிரையிலேறிப் பறந்தார்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது, பீரங்கிக்குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்துச் சிதறியதைக் கண்டு பதைபதைத்து, அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டது ஆங்கிலேயப் படை. இதில், வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.

இந்த மண் தமிழனுக்குத்தான் சொந்தம் என எதிரிகளை விரட்டிவிரட்டி அடித்த பூலித்தேவன், கி.பி 1767-ல் மறைந்தார்.

-அமுதா கிரேஸ், ப.யூ.ந.நி.பள்ளி, கீழ் அதானியம், பொன்னமராவதி.

வீர மங்கை வேலுநாச்சியார்

(3 ஜனவரி 1730 - 25 டிசம்பர் 1796)

வீரம் விஞ்சிய தென்பாண்டிச் சீமையில் முத்து விஜய ரகுநாதச் செல்லமுத்துச் சேதுபதிக்கும் முத்தாத்தாள் நாச்சியாருக்கும் 1730-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் பிறந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார்.

இவருக்குச் சிறு வயதிலேயே அனைத்துப் போர்ப்பயிற்சிகளும் கற்றுத் தரப்பட்டன. முத்து வடுகநாதரை மணந்து 1746-ம் ஆண்டு சிவங்கைச் சீமையின் ராணியானர் வேலுநாச்சியார்.

ஆங்கிலேயர் உதவியுடன் நவாப்பின் படைகள் காளையார் கோவிலை 1772-ல் சுற்றி வளைத்தன. அப்போரில் முத்து வடுகநாதரைக் கொன்று, சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றின. கோட்டையை இழந்துவிட்ட நிலையில் அங்கே தங்கி இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்த வேலுநாச்சியார் திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சிக்கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என்று மாறி மாறித் தொடர்ந்து 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.

ஆற்காடு நவாப்பின் பரம எதிரியான மைசூர் மன்னர் ஹைதர் அலியை வேலுநாச்சியார் சந்தித்து, படை உதவியைப் பெற்றார்.

1780-ல் வேலுநாச்சியார், பெரும்படையுடன் திண்டுக்கல்லிலிருந்து புறப்பட்டுக் காளையார் கோயிலைக் கைப்பற்றி, சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார். தம் கணவரைக்கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான்ஜோரையும் தோற்கடித்தார். சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோய்க்கு ஆளானார். எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வேலுநாச்சியாரின் உயிர் 1796-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் பிரிந்தது.

- எம்.கே.மணிமேகலை ஊ.ஒ.ந.நி.பள்ளி, D.வாடிப்பட்டி, பெரியகுளம்.

தீரன் சின்னமலை

(17 ஏப்ரல் 1756 - 31 ஜூலை 1805)

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த வீரன்; சென்னிமலையின் தீரன். பெற்றோர் இட்ட பெயர், தீர்த்தகிரி. மக்கள் அழைத்த பெயர், சின்னமலை.

தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

கொங்கு நாடு, அப்போது மைசூர் அரசின் வசமிருந்தது. கொங்கு நாட்டு வரிப்பணம், சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. வேட்டைக்கு அவ்வழியே சென்ற நம் தீர்த்தகிரி, அதைப் பறித்து ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட்டார். அப்போது வரி கொண்டுசென்ற தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல், என்று சொல்லி அனுப்பினாராம். அன்று முதல் தீர்த்தகிரிக்கு ‘சின்னமலை’ என்ற பெயர் வந்தது. இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்குக் கடும் சவாலாய் விளங்கினார் தீரன் சின்னமலை. கொங்கு நாட்டுக்கு வந்த வெள்ளையரைத் தலைதெறித்து ஓடச் செய்தான். ஆங்கிலேயரின் தலையை வெட்டி, அதை ஒரு தட்டிலே வைத்து வெற்றி விழாவாகக் கொண்டாடினான். அதைப் பொறுக்காத ஆங்கிலேயர் குதிரைப் படையை அனுப்பி, சமையற்காரனைக் கைவசமாக்கி, தீரனைக் கைதுசெய்தனர். சங்கிலியால் பிணைத்துக் கொண்டுவந்தவனிடம் ஆங்கிலத் தளபதி, ‘நீ ஆங்கிலப் படையில் சேர்ந்தால் உயிர் வாழலாம்’ என்று கூறியதற்கு , “வானமும் பூமியும் எங்கள் சொந்தம். இதை வந்தவர் ஆள்வதற்கு ஏது பந்தம்” என்று கூறித் தன் உடன் பிறந்த மூன்று பேருடனும் தூக்குக் கயிற்றில் தொங்கினாராம்.

- து.மவுண்ட் பேட்டன் ஊ.ஒ.தொ.பள்ளி, மாநெல்லூர். கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

(5 செப்டம்பர் 1872 - 18 நவம்பர் - 1936)

ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மாளுக்கும் பிறந்தவர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்ற வ.உ.சி.கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையோடு நம்மால் இவர் அழைக்கப்படுகிறார்.

இவரது தந்தை உலகநாதன் பிள்ளைபோலவே இவர் ஒரு வழக்கறிஞரானார். 1895-ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வள்ளியம்மை என்பரை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901-ல் இறந்துவிட்டார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டு 1905-ல் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்தவுடன், இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாகக் கடலோரங்களிலுள்ள ஆங்கிலேயக் கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். 1906 அக்டோபர் 16-ல் பாண்டித்துரை தேவரைத் தலைவராகக்கொண்டு “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் வெற்றிகரமாய் இயங்கிய வ.உ.சி 1908-ல் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்தபோது தனது சுயசரிதையைத் தொடங்கிய இவர், சிறையிலிருந்து விடுதலை பெற்றபின் அதை நிறைவு செய்தார். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க விரும்பிய ஒப்பற்ற தலைவரான வ.உ.சி 1936 நவம்பர் 18-ம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

- ஜெ. திவாகர், அரசு உயர்நிலைப் பள்ளி, அத்திப்பாக்கம், திருவண்ணாமலை.

ராஜாஜி

(10 டிசம்பர் 1878 - 25 டிசம்பர் 1975)

மூதறிஞர் என்று அன்போடும் பெருமையோடும் அழைக்கப்படுபவர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். இவர், நாட்டு விடுதலைக்காக மட்டுமன்றி சாதி, மத வேறுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராகவும் செயல்பட்டவர்.

ராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளியில் 10.12.1868-ல், சக்கரவர்த்தி ஐயங்காருக்கும் சுந்தரம்மாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

சிறுவயது முதலே கண் பார்வைக் குறைபாடு இருந்தது. ஆனால், அவரது தந்தையார் அதைக் கண்டுகொள்ளவில்லை. காதால் கேட்டே அவர் தேர்வுகளில் வெற்றியடைந்தார். 40 வயதுக்குப் பிறகே, அவர் கண் பரிசோதனை செய்து மூக்குக்கண்ணாடி அணிந்தார்.

தன் 17-வது வயதிலேயே பி.ஏ பட்டத்தை முடித்துவிட்டு, சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். பின்னர், சேலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணி புரிந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார். தன் மகள் லட்சுமியைக் காந்தியின் மகன் தேவதாஸ் காந்திக்குத் திருமணம் செய்துவைத்தார்.

1930ல் உப்பு சத்தியாகிரகப் போரின்போது தமிழ்நாட்டில் வேதாரண்யம் கடற்கரைக்கு தம்வழி நடப்போரை வழிநடத்திச்சென்றார். 1935ல் மாகாண சுயாட்சிக்குப்பின், முதல் அமைச்சரவைக்குத் தலைவரானார்.

94-ம் வயதில், 25.12.1972-ல் சென்னையில் உயிர் நீத்தார்.

- இரா.ருக்மணி, ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி,ஓசூர்.

வ.வே.சு.ஐயர்

(02 ஏப்ரல் 1881 - 03 ஜூன் 1925)

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், 1881 ஏப்ரல் 2-ல் பிறந்தார். செயின்ட் ஜோசப் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் மொழியைப் பயின்றவர். 1907-ல், லண்டனில் ‘பாரிஸ்டர் அட் லா’ - ஆக முயன்ற காலகட்டத்தில், அங்கிருந்த விநாயக தாமோதர் சாவர்க்கரின் சந்திப்பு அவரது வாழ்வில் திருப்புமுனையானது.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்தார். பட்டம் பெறவில்லை. அதனால், ராஜதுரோக வழக்கில் இவர்மேல் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. சாவர்க்கரின் அறிவுறுத்தலால் லண்டலிருந்து மாறுவேடத்தில் தப்பிய வ.வே.சு., பாண்டிச்சேரியில் 1916-ல் தஞ்சமடைந்தார். அங்கிருந்தபடி அரவிந்தர், பாரதி ஆகியோருடன் இணைந்து 1920 வரை, தேச விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

புதுச்சேரியில் இருந்தபோதுதான், வாஞ்சிநாதனுக்குச் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார்.

22 செப்டம்பர் 1914-ல், எம்டன் கப்பல் மெட்ராஸ் துறைமுகத்தில் புகுந்து குண்டுமழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள ஐயர் மற்றும் நண்பர்களே அதற்குக் காரணம் எனக் குற்றம் சுமத்தியது ஆங்கிலேய அரசு. பிரெஞ்சு அரசிடம். பிரெஞ்சுக்காரர்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டாலும் தண்டனை வழங்க மறுத்துவிட்டனர்.

1922-ல் திருநெல்வேலி, சேரன்மகாதேவியில், ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ் ஆசிரமத்தையும் நிறுவினார்.

அந்தக் காலகட்டத்தில் பாபநாசம் நீர்வீழ்ச்சியில் மகள் சுபத்ரா அடித்துச் செல்லப்பட, ஐயர் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்ற முயன்றார். இங்கிலீஷ் கால்வாயையே நீந்திக் கடந்த ஐயருக்கு, பாபநாசம் நீர்வீழ்ச்சி எமனாய்ப் போயிற்று.

ஜூன் 3, 1925-ம் வருடம் 44 வயதான வ.வே.சு.ஐயர் இயற்கை எய்தினார்.

- ச.ஆறுமுக ஜோதி, ஊ.ஒ.தொ.பள்ளி. மாநெல்லூர்.

சுப்பிரமணிய பாரதி

(11 டிசம்பர் 1882 - 11 செப்டம்பர் 1921)

திருநெல்வேலி, எட்டயபுரத்தின் சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார்.

தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மூலம் மக்களின் மனதில் விடுதலைப் போராட்ட உணர்வைத் தோற்றுவித்ததினால் இவர் `தேசியக் கவியாக' போற்றப்படுகிறார்.

தேசப்பற்றும், மொழிப்பற்றும் மிக்க இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இவர் தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவருக்குப் பாரதி என்ற பட்டத்தை வழங்கியவர் எட்டயபுர மன்னர் ஆவர். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என்று அழைக்கப்படுகிறார்.

1897-ம் ஆண்டு செல்லம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். 1912-ம் ஆண்டு கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ் பெற்ற காவியங்களை எழுதியுள்ளார். `இந்தியா' பத்திரிகையின்மூலம் சுதந்திர உணர்வைத் தூண்டும் எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திரம் அடைவதற்கு முன்னேயே “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்தசுதந்திரம் அடைந்துவிட்டோமென்று” எனச் சுதந்திர தாகத்தை இந்தப் பாட்டின்மூலம் வெளிப்படுத்தினார். திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றபோது, அந்தக் கோவில் யானையால் எதிர்பாராதவிதமாகத் தூக்கி எறியப்பட்டுப் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

- கோ.தரணிபாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பதுவெட்டி, ஆற்காடு, வேலூர்.

திரு.வி.கலியாண சுந்தரனார்

(26 ஆகஸ்ட் 1883 - 17 செப்டம்பர் 1953)

காஞ்சிபுரம் மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் சிற்றூரில், விருத்தாசல முதலியார், சின்னம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

தொடக்கத்தில், தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் தங்கி ‘ஆரியன்’ தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1904-ம் ஆண்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆறாம் பருவத்தேர்வு எழுத முடியாமல்போனது. அத்தோடு அவரது பள்ளிப்படிப்பும் முடிந்தது.

1906-ம் ஆண்டில், ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார். அக்காலத்தில், பாலகங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடுகொண்டதால், வேலையைவிட்டுவிட்டார்.

பின்னர், 1909-ல் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள வெஸ்லி பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918-ம் ஆண்டிற்குள் தம் மனைவி பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார்.

சென்னையில், கவர்னராக லார்டு வெலிங்டன் பிரபுவைப் பத்திரிகை ஆசிரியர்கள் சந்தித்தனர். அப்போது, ‘ஆங்கில அரசாங்கத்தைத் தாக்கி எழுதக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார் வெலிங்டன். மேலும், திரு.வி.க-வைப் பார்த்து, “உங்களுடைய எழுத்து வேகம் உடையது என்றும் மக்களைக் கொதித்தெழச் செய்யக்கூடிய தன்மை உடையது என்றும் நான் அறிகிறேன். ஆகையால், வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இவருடைய தமிழ்ப் புலமையால் இவர் ‘தமிழ்த்தென்றல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

- க.சித்ரா, ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஒட்டன்சத்திரம்.

சுப்பிரமணிய சிவா

(04 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925)

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884 அக்டோபர் 4-ம் நாள், சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவர் தந்தையார், ராஜம் ஐயர். தாயார் நாகம்மாள். பெற்றோர் இட்ட பெயர், சுப்பராமன்.

இவர், 12 வயது வரை மதுரையிலிருந்தார். வறுமை காரணமாகத் திருவனந்தபுரம் சென்று, அங்கு இலவசமாக மேற்படிப்பு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்

1902-ல் கொட்டாரக் கரையில் சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சில காலம் ராஜயோகம் பயின்றார்.

சென்னையில் குடியேறிய சிவா, ‘ஞான பாநு’ என்ற மாத இதழைத் தொடங்கினார். இதற்கிடையில் 1915-ல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916-ல் ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழை ஆரம்பித்துச் சில காலம் நடத்தினார். இதில், ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதி வந்தார். எழுத்துலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். சுமார் 20 நூல்களுக்கும்மேலாக எழுதியுள்ளார்.

பாரத மாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் உடல்நிலை மிக மோசமடைந்ததால், மதுரையிலிருந்து பாப்பாரப்பட்டியை 22.7.25-ல் வந்தடைந்தார். 23.7.25 வியாழக்கிழமை காலை 5 மணிக்குத் தன், 41-வது வயதில் சிவா மறைந்தார்.

- ஹ.புஷ்பலதா, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, இடமலைப்பட்டிபுதூர்

வாஞ்சிநாதன்

(1886 - 17 ஜூன் 1911)

திருநெல்வேலி மாவட்டத்தில் 1886-ல் பிறந்தார் வாஞ்சிநாதன். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சிறிய ரயில்நிலையம்தான் மணியாச்சி. சீட்டுக் குலுக்கிப் போட்டு ஆங்கிலேய அதிகாரியைத் தீர்த்துக்கட்டிய வரலாறுதான் மணியாச்சியின் வரலாறு, வாஞ்சிநாதனின் வரலாறு.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மணியாச்சி மெயில் ரயிலில் கலெக்டர் ஆஷ், அவரது மனைவியோடு ஏறி உட்கார்ந்திருந்தார். புகையைக் கக்கிக்கொண்டு ரயில் கிளம்பியது. திடீரென்று, ஓடும் ரயிலில் இரண்டு பேர் ஓடிவந்து ஏறிக்கொள்கிறார்கள். ரயில், மணியாச்சி ரயில்நிலையத்தை அடைந்துவிட்டது. தூத்துக்குடியிலிருந்து கொடைக்கானல் போகும் போட் மெயில் இன்னமும் வரவில்லை. அதனால், கலெக்டர் ஆஷும் அவரது மனைவியும் ரயிலிலேயே இருக்கிறார்கள். இரண்டு இளைஞர்கள், ஆஷ் இருந்த பெட்டியில் ஏறுகிறார்கள். தன்னுடைய துப்பாக்கியை எடுத்து நேராக ஆஷ் நெஞ்சைக் குறிபார்த்துச் சுடுகிறார். குண்டு பாய்ந்த ஆஷ், நெஞ்சைப்பிடித்தபடி சரிந்துவிழுகிறார். சத்தம் கேட்டு ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் உதவியாளர் ஓடிவருகிறார்கள். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞர், ரயில்வே பிளாட்பாரத்தில் இறங்கி ஓடுகிறார். அருகில் உள்ள பெட்டியில் ஏறிக் கழிவறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்ட அந்த இளைஞர், தன் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போகிறார். அந்த இளைஞர்தான் வாஞ்சிநாதன்.

இந்தியாவிலேயே விடுதலைப்போராட்ட வீரரின் பெயரோடு நிற்கும் ஒரே ரயில் நிலையம், வாஞ்சிமணியாச்சிதான்.

- மு.பாலகிருஷ்ணன், பட்டதாரிஆசிரியர், S.S.N.அரசு மேல்நிலைப் பள்ளி, கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி.

நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை

(19 அக்டோபர் 1888 - 24 ஆகஸ்ட் 1972)

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த வெங்கட்ராமப் பிள்ளை – அம்மணி அம்மாளுக்கு மகனாக அக்டோபர் 19-ல் 1888-ம் ஆண்டு பிறந்தார்.

இவரது தந்தை வெங்கட்ராமப் பிள்ளை மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருந்தவர். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் கருப்பண்ணசாமி என்பதாகும். இவர் தம் இளமையிலேயே தேசிய உணர்வும் தேசப்பற்றும் மிக்கவராக விளங்கினார். தொடக்கத்தில் பாலகங்காதரரின் போராட்டங்களை ஆதரித்தாலும் பின்னர் காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு அதைத் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கினார். இவர் அகிம்சைப் போராட்டத்தின் வடிவமாகப் பாடல்களை இயற்றத் தொடங்கினார். அதில் ஒன்றுதான் பிரலமிக்க

“ கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது'' பாடலாகும்.

இவர் முதல் மனைவி முத்தம்மாள் வயிற்று வலியால் இறந்தார். அவருடைய வேண்டுகோளுக்கேற்ப, அவர் தம் தங்கை சௌந்தரம்மாளை மணந்துகொண்டார். `தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்ற வீர நடைக்கு வித்திட்டவர் இவர். இவரின் `மலைக்கள்ளன்' என்னும் நாவல் `மலைக்கள்ளன்' என்னும் பெயரிலேயே திரைப்படமாக வந்துள்ளது. 1932-ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். இவர் சிறந்த விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்லாது சிறந்த கவிஞராகவும் விளங்கினார். ஓவியக் கலையிலும் வல்லவராக இருந்தார். இவர் அரசவைக் கவிஞராகவும் விளங்கினார். இவர் மத்திய அரசின் பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளார். 1972 ஆகஸ்டு 24 அன்று இவர் மறைந்தார். இராமலிங்கனார் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டத்துக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

-சு.உமாமகேஸ்வரி, ஊ. ஒ.ந.நி.பள்ளி, மேலக்கொட்டாரம், முசிறி.

செண்பகராமன் பிள்ளை

(15 செப்டம்பர் 1891 - 26 மே 1934)

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் வீரமிக்கப் போராளி, ஜெய்ஹிந்த் செண்பகராமன். இவர், 1891-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள், திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புதன் சந்தை என்னும் ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமி பிள்ளை. தாயார் நாகம்மாள். இவர், இளம் வயதிலேயே சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் ‘ஜெய்ஹிந்த்’ என்னும் தாரக மந்திரத்தை முதன் முதலில் உச்சரித்தவர்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கி, பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்குத் தன் 15 வயதில் தலைமை ஏற்றார் நாஞ்சில் நாட்டின் செண்பகராமன். இவரது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்துபோனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிர்பந்தம். அதனால், ஜெர்மனிக்குப் பயணமானார். அங்கு ஒருநாள், செண்பகராமனும் ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும் இந்தியத் தலைவர்களையும் இழிவாகப் பேசினார். சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்குக் கிடையாது என்றார். வெகுண்டெழுந்த செண்பகராமன், வாதத்தினால் ஹிட்லரை மடக்கினார். தன் பேச்சில் உள்ள தவற்றை உணர்ந்து, உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் வார்த்தையளவில் மன்னிப்புக்கேட்டால் போதாது, எழுத்திலும் மன்னிப்பைத் தர வேண்டும் என்று ஹிட்லரை மன்னிப்புக் கோரச் செய்தவர், மாவீரர் செண்பகராமன் ஆவார்.

-மு. கணேசன். ஊ.ஒ.தொ.பள்ளி, மல்லபுரம், விழுப்புரம்.

திருப்பூர் குமரன்

(4 அக்டோபர் 1904 - 11 ஜனவரி 1932)

நம் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தும்போதெல்லாம் மனதில் ஒரு பெயர் எல்லோருக்கும் வந்துபோகும்.தேசத்தைக் காத்த ஓர் இளைஞனின் முகம், உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா? அவர்தான் கொடி காத்த குமரன். ஆடைகள் நகரத்தில் ஆங்கிலேய அதிகாரிகளால் சட்டை கிழிக்கப்பட்டவர்.வீர சுதந்திரம் வேண்டி நின்ற விடுதலை வீரர்களில் காலத்தால் மறக்கவோ, மறைக்கவோ இயலாத வீரர்.

“தாயின் மணிக்கொடி பாரீர்... அதைத் தாழ்ந்து பணிந்திட வாரீர்…” என்று இந்திய தேசியக் கொடிக்கு வணக்கம் செய்கிறோம். ராணுவ வீரர்கள் இறந்தால், அவர்கள்மீது தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்கிறோம். இப்படி வணங்கப்படும் மூவண்ணக்கொடி, எங்கே தரையில் விழுந்துவிடுமோ என்று இறக்கும்போதும் அதைக் கைகளில் கெட்டியாகப் பிடித்திருந்த ஒரு விடுதலைப்போராட்ட வீரர்தான் திருப்பூர் குமரன்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்தில், 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் நாள் பிறந்தவர் குமாரசாமி என்ற குமரன். காந்தியடிகளின் ‘சட்ட மறுப்பு இயக்கம்’ தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம் அது. ஏற்கெனவே, காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் இப்போது சட்ட மறுப்பு இயக்கமாக உருமாறியிருந்தது. திருப்பூரில் நடைபெற்ற தொண்டர்கள் படைக்குத் தலைமையேற்று, கைகளில் கொடியேந்தி மறியல் போராட்டத்தில் பங்குபெற்றார் குமரன். 1932 -ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், காவலர்கள் தடியடி நடத்தினார்கள். அதில் மண்டை உடைந்து மயங்கிவிழுந்த குமரன், அடுத்த நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

- ம.ஜெயமேரி, ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப் பட்டி, விருதுநகர்.

முத்துராமலிங்கத் தேவர்

(30 அக்டோபர் 1908 - 30 அக்டோபர் 1963)

பசும்பொன் என்ற ஊர் அவரது பிறந்த ஊராகும். ஆன்மிகமும், அரசியலும் இணைந்த பாதையில் பயணித்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்துக்குப் பெரும் படையை அனுப்பியவர்.

சிறந்த பேச்சாளர். கனிவு, ஈரம், ஈகைகொண்ட பண்பாளர். வெள்ளை உடை மட்டுமல்ல வெள்ளை மனமும் உடையவராய் இருந்தார். குரு பூஜை விழாவாக அவர் பிறந்த ஊரில் அவரது பிறந்தநாளில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30-ம் நாள் நடைபெறுகிறது. எந்தக் கொள்கையும் எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். பேசுவது வேறு, கொள்கை வேறு என்று இருக்கக் கூடாது என்று அவர் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒலித்த அவரது குரல் வலிமையானதாக அனைவராலும் உணரப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்துச் சாதியினருக்கும் அனுமதி வேண்டும் என்று நடைபெற்ற போராட்டத்தில் இவரும் பங்கேற்றார். இந்திய சுதந்திரத்துக்காக வீரத்துடன் சிறைசென்றவர். தேசியம் எனது உடல், வீரமற்ற விவேகம் கோழைத் தனம், யாவரும் வாழ்க என்றே சொல்லுங்கள், என்றெல்லாம் முழங்கிய இலட்சியவாதி.

பிறந்த நாள் மட்டுமல்ல மறைந்த நாளும் அக்டோபர் 30 தான். 1963-ம் ஆண்டு அவரின் மறைந்த ஆண்டாகும்.

- ரெ.சிவா மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, மதுரை.

வணக்கம் சுட்டி நண்பர்களே...

உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமே அவர்களைச் சார்ந்து ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. நாம் யார்? நம் பண்பாடு என்ன? நாம் இன்று பெற்றுள்ள சாதனை, மாற்றங்கள், வளர்ச்சிக்குப் பின்னால் எத்தகைய உழைப்பு இருக்கிறது? எத்தனை மனிதர்களின் அறிவு, ஆற்றல், தியாகம் இருக்கிறது என்பதைச் சொல்வதே வரலாறு. ஒவ்வொரு மனிதனும் தன் இனத்தின் வரலாறு மட்டுமின்றி, உலக வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான், அவர்களையும் இந்த உலகத்தையும் தொடர்ந்து இயங்கவைக்கும்.

இந்த இணைப்பிதழில் இடம்பெற்றிருக்கும் வரலாற்று நாயகர்களும் நாயகிகளும் நம் நாட்டின் விடுதலைக்காக, நாட்டின் முன்னேற்றத்துக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள். தங்கள் வீரத்தால், தீரத்தால், விவேகத்தால் மக்களின் இன்றைய உயர்வுக்கு உரம் போட்டவர்கள். எளிமையாகவும் தெளிவாகவும் பரீட்சைக்கு உதவும் பயோடேட்டாவாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறோம். இது, உங்கள் பள்ளித் தேர்வுகளில் விடை எழுத மட்டும் உதவப் போவதில்லை. உங்கள் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இந்த நாயக, நாயகிகள் உதவுவார்கள். நாளை ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் நினைவுக்கு வந்து தன்னம்பிக்கை ஊட்டுவார்கள். படியுங்கள். இன்றைய தேர்விலும் நாளைய வாழ்க்கையிலும் பயன்படுத்துங்கள். நீங்களும் நாளைய வரலாற்றில் இடம்பெற வாழ்த்துகள்!

- ஆசிரியர்

தொகுப்பு: பி.கே.ஜெயஸ்ரீ பிரபா

ஓவியங்கள் : பாரதிராஜா